2 Feb 2020

சமூகத்துக்குக் கட்டுபடுறோங்கய்யா!



செய்யு - 346

            கோட்டகம் பள்ளியோடத்துல பிரச்சனைன்னு கேள்வி பட்டதும் பிரசிடென்ட்டு உதயச்சந்திரன் நாலு பேர்ர கெளப்பிக்கிட்டு வண்டியில வந்துட்டாரு. அவரு வந்து பாக்கறப்ப வெச்ச வேலியில ஒண்ணுத்தையும் காணும். வேலிய வெச்ச தடமே இல்லாம பண்ணிப்புட்டாங்க கிராமத்து ஆளுங்க. எல்லாம் போன எடம் தெரியாம போயிடுச்சு. விகடு ஒத்த ஆளா அவ்வேம் பக்கம் ஆளுக யாருமில்லாம சாட்சிபாவமா செஞ்சி வெச்ச செலை போல நிக்குறாம். அவ்வேம் வேலி கட்டுறதுக்காக அழைச்சுக்கிட்ட வந்து ஆளுங்க எல்லாம் பெரச்சனை ஆரம்பிக்கப் போவுதுன்னு தெரிஞ்சதும் துண்டைக் காணும் துணியக் காணும்னு அபிட் ஆகிட்டாங்க. விகடு பிரச்சனைன்னு வெளியில வர்றப்பவே உள்ளார இருக்குற பள்ளியோடத்துப் புள்ளைங்ககிட்ட சொல்லிட்டுத்தாம் வந்தாம், "எது நடந்தாலும் நாம்ம வந்து சொல்ற வரைக்கும் யாரும் வெளியி எட்டிப் பாக்கவோ, வெளியில வர்றவோ கூடாது!"ன்னு. அதுபடியே புள்ளைங்க எல்லாரும் உள்ளாரயே உக்காந்திருக்குங்க.
            "இதெல்லாம் நீஞ்ஞ பண்றது தப்புங்கப்பா! ஒஞ்ஞ எடத்துல அத்துமீறி வேலிய வெச்சா கேளுங்கப்பா! அவரு ஒஞ்ஞ புள்ளைங்கப் படிக்கிற பள்ளியோடத்து எடத்துல பள்ளியோடத்துக்காக வேலிய வைக்கிறாரு. அதெ இப்பிடிப் பண்ணா ன்னா அர்த்தம்? அதாங் ஒஞ்ஞ ஊருக்கு நல்ல வாத்தியாவும் வர மாட்டேங்றாங்க. வர்ற நல்ல வாத்திகளும் ஒஞ்ஞளப் பாத்துப்புட்டு இஞ்ஞ இருக்குறதெ வுட இல்லாம இருக்கிறதுதாம் நல்லதுன்னு ஓடிப் போயிடுறாங்க."ங்றாரு உதயச்சந்திரன்.
            "ஏத்தோ இத்தோட வுட்டுச்சுன்னு நெனைச்சுங்க! அடிகிடி படாம போச்சுன்னு சந்தோஷப்பட்டுக்குங்க. வாத்தின்னா பாடஞ் சொல்லிக் கொடுக்குறதுக்குத்தாம். வேலிச் சண்‍டெ, ஊரு சண்டெயக் கெளப்பி வுட்டுக்கிறதுக்கில்ல." அப்பிடிங்கிறாங்க கூட்டத்திலேந்து.
            "முடிவா இப்போ ன்னா சொல்றீங்க?" அப்பிடிங்கிறாரு உதயச்சந்திரன்.
            "இதாங் முடிவு. வேலியே கெடையாது. வெச்சா இப்பிடித்தாம் பிச்சு எறிவேம். ஒவ்வொரு தபாவும் இப்பிடியே பிய்ச்சுத்தாம் எறிவேம்னு இல்ல. அதுக்கு மேலயும் நடக்கும். சாக்கிரதையா இருந்துக்கச் சொல்லுங்க. எந்த ஊர்லேந்து வர்ற வாத்திப் பயலுக்கே இம்மாம் தெகிரியம் இருந்தா இந்த ஊர்லயே கெடக்குற எஞ்ஞளுக்கு எம்மாம் தெகிரியம் இருக்கும்?" அப்பிடிங்கிறாரு கூட்டத்துல ஒருத்தரு.
            "ஏய்! ன்னா இது வாத்தியார்ர அவ்வேன் இவ்வேன்னு மருவாதி இல்லாம பேசிக்கிட்டு? இதாங் ஒஞ்ஞ யோக்கிதையா?"ங்றாரு உதயச்சந்திரன்.
            "யேய்... யேய்... நீயி நாலு பேத்தோட வந்துப்புட்டா பெரிய புடுங்கின்னு நெனைப்பா? உள்ள வெச்ச கால வெளியில வைக்க முடியாது!"ங்குது கூட்டத்திலேந்து இளந்தாரிக் குரலு ஒண்ணு.
            "செரி! இத்துச் சுத்தப்பட்டு வராது. நாம்ம பீடியோவுக்கு அடிச்சி வெவகாரத்த சொல்லிப்புடறேம். இத்து அவுங்க சமாச்சாரம். அவுங்களா பாத்து முடிவு எடுத்துக்கிடட்டும். நீஞ்ஞ யாரும் நமக்குக் கட்டுபடுறாப்புல தெரியல."ங்றாரு உதயச்சந்திரன்.
            "இந்தாரு பிரசிடெண்டு அது இதுன்னு கோதாவுல பண்ணாதே! ஒமக்கு இந்தக் கோட்டகத்துலேந்து ஒத்த ஓட்டு ‍கூட கெடையாது. நீயி வாங்கி செயிச்ச ஓட்டுக அத்தனையும் ஓகையூர்ல வாங்குனது. இஞ்ஞ வந்து சிலுப்பிக்கிட்டு நிக்காத. நாலே நாலு ஓட்டுத்தாம் கூட வாங்கி செயிச்சிருக்க. அதெ மறந்துப்புடாத. ஒமக்குல்லாம் என்ன மசுருக்குக் கட்டுபடணும்னு கேக்குறேம்." அப்பிடின்னு கூட்டத்திலேந்து ஒருத்தரு சலம்புறாரு.
            "பீடியோவே வந்துப் பேசட்டும். நாம்ம போன போடறேம். வந்துடட்டும். பேசி ஒரு முடிவ பண்ணிக்கிடுவோம்!"ங்றாரு உதயச்சந்திரன். சொல்லிப்புட்டு போனையும் போடுறாரு. போட்டு, "கோட்டகத்துப் பள்ளியோடத்துல வேலி வெச்சு பெரச்சனையா கெடக்கு. வுட்டாக்கா ஊரு சண்டையா போயிடும்.‍ பெரும் பிரச்சனையாயி டி.வி., பேப்பர்னு நாறிடும் போலருக்கு. சமூகம் அய்யாத்தாங்க வந்து தீத்துட்டுப் போவணும்!" அப்பிடிங்கிறாரு உதயச்சந்திரன்.
            உதயச்சந்திரன் பேசப் பேச வெவரங்களைக் கேட்டுக்கிறாரு ஆர்குடி பீடிவோ. பள்ளியோடத்துப் புள்ளைங்கல்லாம் பாதுகாப்பா இருக்குதான்னு அடுத்த கேள்விய கேக்குறாரு. அதுக்கு உதயச்சந்திரன், "பெரச்சனை பாட்டுக்கு வெளியில நடந்துக்கிட்டு இருக்குங்க. புள்ளைங்க பாட்டுக்கு உள்ளார உக்காந்து இருக்காங்க. யாருக்கும் எந்தச் சேதாரமும் யில்ல. வேலிதாங் போச்சுங்க. நாளைக்கி பெரும் பிரச்சனையாயிடக் கூடாது பாருங்க. ஒரு கோவத்துல நாளைக்கி வாத்தியாரே பள்ளியோடம் வர்றாம போயிடலாம். யில்ல ஊர்ல கெடக்குற பயலுங்க வர்ற வாத்தியார்ர ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணிப்புடலாம். அதாங் வந்து பேசித் தீத்து வுட்டீங்கன்னா பெரச்சனை அத்தோட முடிஞ்சிப் போயிடும்!"ங்றாரு உதயச்சந்திரன். எல்லாத்தையும் கேட்டுகிட்டு, பெரச்சனை நடக்குறதால பள்ளியோடத்து புள்ளைகள அனுப்பி வுட்டுப்புட்டு, எல்லாத்தையும் பள்ளியோடத்துல இருக்கச் சொல்றாரு. அத்தோட ஒரு மணி நேரத்துல வந்திடுறதா சொன்னவரு ரண்டு மணி நேரம் கழிச்சி வர்றாரு.
            டாட்டா சுமோ ஜீப்புல வந்து எறங்குறாரு ஆர்குடி பீடிவோ. ஆளு நல்லா ஓங்கு தாங்கலாத்தாம் இருக்காரு. நீல நெறத்துல கட்டம் போட்ட சட்டையும், கருப்புக் கலரு பேண்டும் போட்டுருக்காரு. சட்டைய இன் பண்ணிருக்காரு. கால்ல கருப்பு நெறத்துல கட் ஷூ போட்டுருக்கிறாரு.  கூடவே அவரோட நா‍லைஞ்சு ஆளுங்களும் பைல கையில பிடிச்சிக்கிட்டு எறங்கிப் பள்ளியோடத்துக்குள்ளார வர்றாங்க. உள்ளார வந்ததும் பிரசிடெண்ட்டு, விகடு, கீழே உக்காந்திருக்கிற கிராமத்துச் சனங்க எல்லாரும் எழுந்திரிச்சி வணக்கம் சொல்றாங்க. பீடிவோ பதிலு வணக்கம்லாம் சொல்லல. தலைய மட்டும் கீழே ஒரு அசைப்பு அசைச்சுகிட்டு கையமர்த்துறாரு. அங்க இருக்குறதே மொத்தம் மூணு நாற்காலிங்கத்தாம். அதுல ஒண்ணுத்துல அவரு உக்காந்துகிட்டு, பக்கத்துல இருந்த நாற்காலியில அவரு கூட வந்த ஒருத்தர்ர உக்காரச் சொல்லிட்டு, மூணாவது நாற்காலியில பிரசிடெண்ட் மட்டும் உக்கார சொல்றாரு.

            என்ன பிரச்சனைங்றதெ மறுபடியும் ஒருக்கா பிரசிடெண்டுகிட்ட கேட்டுக்கிறாரு பிடீவோ. கேட்டுகிட்டு அவரு இப்போ பேச ஆரம்பிக்கிறாரு, "இருக்குற பிரச்சனையில இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு வர்ற வைக்கிறீங்க! வேலையத்த வேலைய பண்ணிக்கிட்டு உக்காந்துகிட்டு இருக்கீங்க. என்ன சாரே! என்ன பதிலச் சொல்லப் போறீங்க?"ங்றாரு பீடிவோ விகடுவைப் பாத்து. அவ்வேன் கையில வெச்சிருந்த பள்ளியோடத்து நிலப்பத்திரத்தெ மட்டும் எடுத்து அவருகிட்ட காட்டுறாம். வேறெந்த பதிலையும் சொல்லல.
            "காயிதத்துல சரியாத்தாம் இருக்கும். சரியாத்தாம் அதுபடி பண்ணியிருப்பீங்க சாரே! அதச் சொல்லல. இப்பிடி ஊரு பெரச்சனைய கெளப்பி வெச்சி இருக்கீங்களே! ஒஞ்ஞ ஏயியோவுகிட்ட பேசுனேம். அவரும் வரதாத்தாம் இருந்துச்சி. அவசரமா ஒரு மீட்டிங் போவ வேண்டி இருக்குறதால வர்ற முடியல. படிச்ச நீங்களே இப்பிடிப் பண்ணீங்கன்னா... என்னத்தெ சொல்றது?" அப்பிடிங்கிறாரு பீடிவோ விகடுவெப் பாத்து.
            "அய்யா என்ன சொன்னாலும் எத்துக்கிறேம்யா!" அப்பிடிங்கிறாம் விகடு.
            "ன்னா மக்களே! ஒங்க வாத்தியாரு எதுன்னாலும் ஏத்துக்கிறேம்ங்றாரு. அவரு என்னவோ ஒங்க வூட்டு எடத்தை அடைச்சது மாதிரில்லா வேலிய பிய்ச்சிப் போட்டு பெரச்சனைப் பண்ணிருக்கீங்க! பக்காவா டாக்குமெண்டைக் காட்டுறாரு. அவரு போலீஸ்ல ஒரு கம்ப்ளெய்ண்ட்ட கொடுத்தா எனனாவுறது? ஒரு அரசாங்க அதிகாரிய பணி செய்ய வுடாம தடுக்குறது தப்புங்றது தெரியும்ல. நீங்க இப்ப சொல்றதெ வெச்சித்தாம் பெசி வுடணும்!"ங்றாரு பீடிவோ.
            "சமூகம் அய்யா ன்னா சொன்னாலும் அதுக்கு மாப்புத்தாங்க! ஞாயமா பண்ணி வுடுங்க. பாதெ இல்லன்னா சனங்க செருமப்பட்டு போவும்ங்க. மனுஷங்கப் போற பாதையில கைய வைக்கக் கூடாதுங்க அய்யாமாரே!" அப்பிடிங்கிறாரு கூட்டத்துச் சார்பா ஒருத்தரு.
            "ஒண்ணுக்கு ரண்டா ஒருத்தம் பொண்டாட்டிய வெச்சிக்கிற மாரில்லா  கீழத் ‍தெருவுக்கு மொறையா ஒரு ரோட்டையும், குறுக்கால ஒரு ரோட்டையும் வெச்சிருக்கீங்க. பள்ளியோடத்து எடங்றதால குறுக்கால ரோட்டப் போட்டு வுட்டுப்புட்டீங்க. ஏம்யா யாராவது ஒங்க வூட்டு எடத்துல அத்து போல போட வுடுவீங்களா? இன்னிய தேதியில கவர்மெண்டு ஒரு எடத்தை ஆக்குபை பண்ணணும்னா எவ்ளோ கேஸூ, ஜட்ஜ்மெண்ட்ட பாக்க வேண்டியதா கெடக்கு. ஆனா, கவர்மெண்டு எடம்னா நீங்க பாட்டுக்கு ஆக்குபை பண்ணிப்புடுறீங்க."ங்றாரு பீடிவோ.
            "சமூகம் அய்யா நீஞ்ஞ வாத்தியாரு ஒஞ்ஞ கவர்மெண்டு ஆளுங்க அப்பிடிங்கிறதுக்காக வுட்டுக் கொடுக்காம பேசுறதா படுது!"ங்றாரு கூட்டத்திலேந்து ஒருத்தரு.
            "அடச் ‍‍சேய்! நெனைச்சம்யா! இத்து மாதிரித்தாம் ஆவும்னு. ஏம் சாரையும்தாம் பேசுனேம், நீங்கள்லாம் படிச்ச ஆளான்னு? ஒரு சாரைப் பாத்துக் கேக்கற கேள்வியா இது? அதுக்கு அவரு ன்னா சொன்னாரு? கோவமா பட்டாரு. எத்து சொன்னாலும் ஏத்துக்கிறேம்னுத்தான சொன்னாரு. அவரு சொன்னதெ கேட்டுப்புட்டு நீங்க ன்னா சொன்னீங்க? சமூகம் என்ன சொன்னாலும் ஏத்துக்கிறேம்னுத்தான சொன்னீங்க? இப்போ ன்னா புதுசா இப்பிடி கெளப்பி வுடுறீங்க? வேணும்னா சொல்லுங்க யூனியன் சேர்மன், டிஸ்ரிக்ட் சேர்மனெ வெச்சி அடுத்தக் கூட்டத்தெ போட்டு பேச்ச நடத்துவேம். ன்னா சொல்றீங்க?" அப்பிடிங்கிறாரு பீடிவோ.
            "அதெல்லாம் வேணாமுங்க. இளந்தாரிப் பயலுவோ. தெரியாத்தனமா பேசிப்புட்டானுங்க. பாத்து நல்ல வெதமா பண்ணி வுடுங்க. மனசுல எதும் வெச்சுக்காதீங்க!"ங்றாரு அதுக்குக் கூட்டத்துல ஒருத்தரு.
            "நேரங்றது அமைய மாட்டேங்குது. சேர்மன்களையும், எம்.எல்.ஏ.வையும் கொண்டாந்து வெச்சுப் பேசுறதுன்னா அத்து இப்பைக்கு முடியாது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சோலியில அலைஞ்சிட்டுக் கெடப்பாங்க. எல்லாத்துக்கும் நேரம் ஒத்து வந்து சேந்து வர்றதுன்னா அதுல செருமம் நெறைய இருக்கு. நாம்ம அவுங்கள போன்ல கலந்துக்கிறேம். பெரச்சனை இதுன்னு சொல்றேம். அவுங்க எதெ முடிவுன்னு சொல்றாங்களோ அதெ செஞ்சிப்புடுவேம். இப்பைக்கு என்ன முடிவுன்னு நமக்கும் தெரியாது. இதுக்கு மாப்புன்னா சொல்லுங்க, பெரச்சனைய இத்தோட முடிச்சிக்கிடலாம்."ங்றாரு பீடிவோ.
            "மாப்புதாங்கய்யா!" அப்பிடிங்கிறாங்க கூட்டதிலேந்து நாலஞ்சு பேரு எழுந்திரிச்சி. "அதுல்லாம் முடியா!" அப்பிடின்னு எழுந்திரிச்ச இளந்தாரிங்க நாலைஞ்சுப் பேரை உக்காரச் சொல்லி தோள்ல போட்டு இருக்குற துண்டாலயே விசிறி அடிக்கிறாங்க மாப்பு சொன்ன ஆளுங்க.
            "என்ன சாரே! அப்பிடியே நின்னாக்கா எப்பிடி? ஒங்க பதிலு என்னா?"ங்றாரு பீடிவோ.
            "மொதல்லயே சொல்லிட்டேம்யா! அய்யா ன்னா சொன்னாலும் ஏத்துகிறேம்யா!"ங்றான் விகடு.
            "செரி! பாத்துக்கிடலாம்!"ன்னு எழும்புறாரு பீடிவோ.
            "முடிவெச் சொல்லாம்ம நட்டாத்துல வுட்டுப்புட்டுக் கெளம்புறீங்களே?"ங்றாங்க கூட்டத்திலேந்து.
            "சேர்மென், எம்.எல்.ஏ.வ கலந்துக்கிட்டுத்தாம் முடிவு பண்ணியாவணும். பள்ளியோடம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியோடம்ல. அவுங்கள கலந்துகிட்டு அத்து ன்னா முடிவா இருந்தாலும் அதெ ஒத்துக்கிடறதா வாக்குக் கொடுத்து இருக்கீங்க. பெறவு பெரண்டு பேசப்படாது!"ங்றாரு பீடிவோ.
            "கிராமத்து ஆளுங்கய்யா! ஒத்த நாக்கு! ஒத்த வாக்கு! வாக்குக் கொடுத்தா கொடுத்ததுதாம். பெரண்டுல்லாம் பேச மாட்டேம்ங்கய்யா!"ங்றாரு பீடிவோ.
            "அதயுந்தாம் பாப்பேம்!"ன்னு சொல்லிட்டுக் கெளம்புறாரு பீடிவோ. கெளம்பிப் போனவரு திரும்ப வந்து, "யாரும் இங்க இருக்கக் கூடாது. எல்லாரும் கெளம்புங்க. பள்ளியோடத்தப் பூட்டிட்டு சாரை அனுப்புங்க. கெளம்புங்க சார். நாளைக்கு சாரு வருவாரு. ஊர்லேந்து எந்தப் பிரச்சனையும் இருக்கக் கூடாது. அப்பிடி எதும் இருந்துச்சுன்னா... இந்த வெவகாரத்த தீக்க நாம்ம வர மாட்டேம். போலீஸ்தாம் வரும். அதாங் சங்கதி. செரி! உதயச்சந்திரன் வாங்க. நாம்ம கொஞ்சம் தனிச்சுப் பேசிக்கலாம்!"ன்னு பீடிவோ அவுங்க ஆளுங்களோட உதயச்சந்திரன கெளப்பிக்கிட்டு ஓரமா போவுறாரு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...