1 Feb 2020

காத்துல பறக்குற வேலி!



செய்யு - 345

            பள்ளியோடத்தச் சுத்தி வேலி வைக்க ஆளுக வேணுமேன்னு கூப்புட்டாக்கா கோட்டகத்துலேந்து ஒரு ஈ, காக்கா கூட வர மாட்டேங்குது. கோட்டகத்து ஆளுகளுக்கு பள்ளியோடத்தச் சுத்தி வேலி வைக்குறது பிடிக்கல. வேலிய வெச்சுப்புட்டா ஆடு, மாடுகள பள்ளியோடத்துப் பக்கம் வெரட்டி வுட முடியாமப் போயிடுறதோட, அசமடங்கக் கொள்ள பள்ளியோடத்துல வந்து படுக்குறதுக்கும் வாய்ப்பில்லாம போயிடுங்றதால கோட்டகத்துலேந்து யாரும் வேலி கட்டப் போவக் கூடாதுன்னு முடிவே பண்ணிட்டாங்க போலருக்கு. விகடு ஊரு முழுக்க கேட்டுப் பாத்துட்டாம், ஒரு சனமும் வருறாப்புல இல்ல.
            கோட்டகத்து வெள்ளையாத்தாங்கரை முழுக்கப் பாத்தீங்கன்னா மூங்கிக் குத்துக்குக் குறைவிருக்காது. இங்கத்தாம் மூங்கிலுக்குப் பஞ்சமில்லையே, வேலி முள்ளுக்கு இங்கயே வாங்கிக்கலாம்னு பாத்தா யாரும் வேலி முள்ளும் கொடுக்க மாட்டேங்றாங்க. வேலி வைக்குறதுக்குப் போத்துலேந்து, மூங்கிலு முள்ளு வரைக்கும் கோட்டகத்துக்கு வெளியிலேந்து கொண்டு வராப்புல ஆயிடுச்சு. ஆளுங்களையும் திட்டையிலேந்து கொண்டு வந்துத்தாம் வேலியை வைக்குறாப்புல ஆயிடுச்சு. ரோட்டை வுட்டுப்புட்டுப் பள்ளியோடத்த சுத்தி வேலிய வைக்குற வரைக்கும் ஒரு பிரச்சனையும் இல்ல. பேசாம இருந்தாங்க கோட்டகத்து சனங்க. ரோட்டுக்குக் குறுக்கால வேலிய வெச்சப்பத்தாம் பிரச்சனையாச்சு.
            வேலைக்கு வந்த ஆளுங்களுகிட்ட விகடு எங்கெங்க வேலி வரணும்னு அடையாளம் பண்ணிட்டுச் சொல்லிருந்தாம். அத்தோட சுத்திலும் வேலிய வெச்சு முடிச்சு கடைசியா ரோட்டை மறிச்சி வேலிய வெச்சுப்புடுங்கன்னும் சொல்லியிருந்தாம். அப்படித்தாம் ஆளுங்க வேலையப் பாத்துட்டு ரோட்டுக்குக் குறுக்க போத்தை ஊனி வேலிய வைக்க ஆரம்பிக்கிறாங்க. சேதி தெரிஞ்சுப் போயி கிராமத்து ஆளுங்க கூடிட்டாங்க. வேலை செய்யுற ஆளுகள வேலைய நிப்பாட்டச் சொல்லிப்புட்டு வாத்தியார்ர கூப்புட்டு வுடுங்க அப்பிடிங்றாங்க.
            ஆளுங்க பள்ளியோடத்துக்கு உள்ளார வந்து விகடுவக் கூப்புட்டு வெளியில போனாக்கா அங்க இருவது முப்பது ஆளுங்களுக்கு மேல நிக்குறாங்க.
            "பொதுசனங்களோட போக்குவரத்துக்கு உள்ள ரோட்டை மறிச்சி வேலி போடுறது தப்புங்க வாத்தியாரே! இத்த நிப்பாட்டுங்க! இத்து ஒங்களுக்கும் நல்லதில்ல, எங்களுக்கும் நல்லதில்ல. கம்ப்ளெய்ண்டு ஆயிப்புடும். மின்னாடியே ஒங்க மேல கம்ப்ளெய்ண்டு பண்ணிப்புடுவோம்னுத்தாம் கிராமத்துல தீர்மானம் போட்டு முடிவே பண்ணிட்டோம். வாத்தியாரு நல்லவரா இருக்காரே! நேரத்துக்கு மின்னாடியே வந்து நேரத்துக்கு பின்னாடி போறாரே, இந்த ஊரே கதின்னு கெடக்குறாரேன்னுத்தாம் விட்டோம். இதுக்கு மேல பொறுக்க மாட்டேம். ஒஞ்ஞ வேல என்னவோ அத்தெ மட்டும் பாருங்க. பள்ளியோடம் வேலி யில்லாம கெடந்தா ஒங்களுக்கு ன்னா? அது பாட்டுக்குக் கெடந்துட்டுப் போவுது.எஞ்ஞ கிராமத்துலத்தான கெடக்கப் போவுது. அத்த எடுத்து நாஞ்ஞ ன்னா வுழுங்கிடப் போறேம்? இத்தனெ நாளும் இப்பிடித்தானே கெடந்துச்சு. இப்ப ன்னா புதுசு புதுசா பண்ணிட்டுத் திரியுறீங்க? இத்து நல்லதுக்கு யில்ல யாமா!" அப்பிடிங்கிறாரு கூடி வந்து நின்ன ஆளுங்கள்ல ஒருத்தரு.
            "பள்ளியோடத்து எடத்தெ ஆக்கிரமிச்சி ரோட்டப் போட்டிருக்கீங்க! சித்தெ இருங்க!" அப்பின்னு சொல்லிப்புட்டு பள்ளியோடத்து உள்ளார வந்து பத்திரத்தெ எடுத்துட்டுப் போயி அவுங்ககிட்ட காட்டுறாம் விகடு. அவுங்க அதெ ரெண்டு பொரட்டு பொரட்டிப்புட்டு, "சரிதாங் வாத்தியாரே! அஞ்சு வருஷமா இஞ்ஞ ரோடெல்லாம் கெடையாது. இஞ்ஞ வர்ற ரோடு பள்ளியோடத்துக்கு வர்ற ரோடு மட்டுந்தாம். பெறவு எல்லாம் பள்ளியோடத்துக்கு உள்ள எடந்தாம். கெழக்கால உள்ள கீழத் தெருவுக்கு இப்பிடிக்கா குறுக்கால போனாக்கா ஈஸியா இருக்கும்னு போடச் சொன்ன ரோடுதாம் இத்து. அத்த ஒத்துக்கிறேம். நாஞ்ஞ ரோட்ட போடச் சொன்னப்ப இத்த நீஞ்ஞ கேட்டிருக்கிணும். அப்ப போட வுட்டுப்புட்டு இப்ப பொழக்கத்துல உள்ள ரோட்ட எடுத்தா அத்து செரிபட்டு வராது." அப்பிடிங்கிறாரு ஒருத்தரு.

            "ஒஞ்ஞ வாயாலயே வந்துப்புட்டு. இத்துப் பள்ளியோடத்து எடத்துல உள்ள ரோடுன்னு. பெறவு பேச்சென்ன வேண்டிக் கெடக்கு. ஒஞ்ஞ யாரு வூட்டு எடத்தையும் நாம்ம பள்ளியோடத்துக்குக் கேக்கல. பள்ளியோடத்துக்கு உள்ள எடத்தெ பள்ளியோடத்துக்குக் கொடுத்துடுங்கன்னு கேக்குறேம். எந்த ஊருல பள்ளியோடத்துக்கு இப்பிடி பள்ளியோடமும் பள்ளியோடத்து டாய்லெட்டும் ரோட்டுக்கு ரெண்டு பக்ககமா இருக்குது. இந்த ஊர்லத்தாம் இப்பிடிப்பட்ட அட்டூழியம்லாம் நடக்குது. ஒஞ்ஞ யாரு எடமும் பள்ளியோடத்துக்கு வாணாம். பள்ளியோடத்து எடமும் ஒஞ்ஞ யாருக்கும் வாணாம். ஒஞ்ஞ பள்ளியோடத்து எடத்தெ பள்ளியோடத்துக்குச் சேத்து அதெ மூட்டைக் கட்டிட்டு நாம்ம ஒண்ணும் தூக்கிட்டுப் போவ முடியாது. காலா காலத்துக்கும் அத்து ஒஞ்ஞ ஊர்ல ஒஞ்ஞ பள்ளியோடத்துக்குத்தாம் இருக்கப் போவுது. அதுல ஒஞ்ஞ கிராமத்துப் புள்ளைங்கத்தாம் படிக்கப் போவுது."ங்றாம் விகடு.
            "அப்போ கீழத் ‍தெருக்காரங்களோட நெலமைய நெனைச்சிப் பாருங்க? எஞ்ஞளுக்கு என்னவோ பள்ளியோடத்து மேல அக்கறெ யில்லத மாரில்லா பேசுதீங்க? வார்த்தெய அளந்து பேசுங்க வாத்தியாரே! ஒஞ்ஞளுக்குத்தாம் என்னவோ பேசத் தெரியும்னு பேசுதீங்களே?" அப்பிடிங்கிறாரு இன்னொருத்தரு.
            "இந்தப் பள்ளியோடத்துக்கு வந்த இத்தினி நாளுல்ல இன்னிக்குத்தாம் நாம்ம ஒங்க எல்லாத்து கூடயும் பேசுறேம். கூட கொறைச்ச எத்தையும் நாம்ம பேசல. நீஞ்ஞ பேச வைக்குறீங்க. பள்ளியோடத்துக்குக் குறுக்கா வராம நேரா போயி திரும்புனா கீழத்தெருவுக்கு ரோடு அம்சமாத்தான போவுது. பெறவு ன்னா இப்பிடிக்கா ஒரு ரோடு, அப்பிடிக்கா ஒரு ரோடு?"ங்றாம் விகடு.
            "இத்துன்னா குறுக்கால ஒரு நிமிஷத்துக்குள்ள போயிப்புடுவேம் பாருங்க வாத்தியாரே! அத்து ரண்டு நிமிஷமாவும்ல. இத்துல ன்னா கொறைஞ்சிப் போயிடப் போறீங்க? ஒரு தெருவுக்கு ரோட்டுக்கு எடத்தெ கொடுக்குறதுல ன்னா கொறைஞ்சிப் போயிடப் போறீங்க வாத்தியார்ரே? ஒஞ்ஞ வூட்டு எடத்தையெ எழுதிக் கொடுக்குறீங்க? கவருமெண்டு எடத்தெ கொடுக்குறீங்க! அதுல ன்னா பெரச்சனை ஒங்களுக்கு? எப்பிடி இருந்துச்சோ அப்பிடித்தாம் இருக்கணும் ரோடு. இத்துல மாத்தம்னா ச்சும்மா இருக்க மாட்டேம் பாத்துக்குங்க. வாத்தியார்ன்னா ஒரு அளவுக்குத்தாம் மருவாதிய கொடுக்கலாம்." அப்பிடிங்கிறாரு கூட்டத்துல ஒருத்தரு.
            "பள்ளியோடத்துக்கு எடம் பள்ளியோடத்துக்குத்தாம். ஒவ்வொரு ஊர்லயும் பள்ளியோடத்துக்குன்னு எடத்தெ வாங்கிக் கொடுத்து என்னென்னவோ பண்றாங்க. இந்த ஊர்லத்தாம் பள்ளியோடத்து எடத்தெ பிடுங்கிக்கிட்டு அத்தெ கொடுக்க மாட்டேங்றீங்க. நாமளும் பள்ளியோடத்து எடத்தெ வுட்டுக் கொடுக்குறாப்புல யில்ல. இந்தாருங்கப்பா ஒஞ்ஞ ஊர்நே்தும் வேலிய வைக்க ஆள அனுப்ப மாட்டேங்றீங்க! வேலி முள்ளு போத்துலேந்து ஒண்ணுத்தையும் தர்ற மாட்டேங்றீங்க! எல்லாத்தையும் வெளியூர்லேந்து கொண்டாந்து செலவு ரட்டிச்சிப் போவுது. இப்போ வேலய செய்ய வேண்டிய ஆளுகள தடுத்தீங்கன்னா வேல கெடந்துப் போவுதும். பெறவு நாளைக்கு அவுங்க வந்து வேலய பாக்குறருக்குக் காசிய கொடுக்குறாப்புல போயிடும். அம்மாங் காசியெல்லாம் பள்ளியோடத்துக்கு யில்ல. ஆளுகள வேலயப் பாக்க வுடுங்க." அப்பிங்கிறாம் விகடு.
            "இனுமே ஆளுக வேலையப் பாத்துட்டு இஞ்ஞயிருந்து திரும்ப முடியாது. ஊர்லயே கட்டி வெச்சி ஒதைப்போம் பாத்துக்க. எலே வாத்தி இனுமே ஒனக்கு மருவாதி கெடையாது. ஒழுங்கு மருவாதியா உள்ள போயிடு. ஒதெ வாங்கிட்டுப் போயிடாத!" அப்பிடிங்குதுங்க கூட்டத்துல உள்ள ஆளுங்கள்ல ஒண்ணு.
            "நாம்ம வேலைக்கி அழைச்சிட்டு வந்த ஆளுங்கள அடிக்க ஒங்களுக்கு உரிமெ கெடையாது. ஒங்க ஊருக்கு வேலைக்கு வந்து பாக்குற பாவத்துக்க என்னயெ அடிக்க மட்டுந்தாம் ஒங்களுக்கு உரிமெ இருக்கு. நீஞ்ஞ அடிச்சா அடிச்சிக்குங்க. அதெ பத்தில்லாம் கவலயில்ல, வருத்தமில்ல. எத்தனெ அடி வாணாலும் அடிச்சிக்குங்க, எத்தனெ ஒதெ வாணாலும் ஒதைச்சுக்குங்க. முடிவா வேலிய வைக்க சொன்னாக்கா சரித்தாம். வாஞ்ஞ வந்து அடிக்கிறவங்க அடிச்சுங்க, ஒதைக்குறவங்க ‍ஒதைச்சுங்க."ங்றாம் விகடு.
            "எவம்டா அவ்வேம்? வாத்தியார்ர போயி அடிக்கிறோம் ஒதைக்கிறோம்னுகிட்டு? பேச்சு பேச்சா இருக்கணும்." அப்பிடின்னு ஒருத்தரு கூட்டத்தெ பாத்துச் சொல்லிப்புட்டு, "இந்தாருங்க வாத்தியார்ரே! ஒஞ்ஞளுக்கு நாஞ்ஞ புத்திச் சொல்லக் கூடாது. ஊரு ஒலகம் எப்பிடி இருக்குன்னு பாத்துட்டு அத்துக்குத் தகுந்தாப்புல சூதானமா நடந்துக்கணும். படிச்சிப்பிட்டா செரியா? நடமொற தெரிய வாணாமா வாத்தியார்ரே? இப்பிடியா அடிச்சா அடிங்கன்னு நிப்பீயே? நாசுக்கா நடந்துக்கோணும் வாத்தியார்ரே! கடெசியா சொல்றேம். இத்து ஒஞ்ஞளுக்கு ஒத்துப்பட்டு வாராது. வெலகிக் போயிட்டே இருங்க. இல்லாட்டி நடக்கப் போற எதெயும் யாராலயும் தடுக்க முடியாது பாத்துக்குங்க!"ங்றாரு.
            "இத்தெல்லாம் சரிபெட்டு வாராது. வெச்ச வேலிய பிய்ச்சு எறிஞ்சத்தாம்டா வாத்தி அடங்குவாம். மசுரான் சொன்னத்தெ கேக்குறானா பைத்தியங்கூலிப் பயெ? சொன்னத்தையெ சொல்றாம்! வாஞ்ஞடா நாம்ம யாருன்னு அந்த கம்முனாட்டி கூதிப் பய மவனுக்குக் காட்டுவேம்!" அப்பிடின்னு கூட்டத்துக்குள்ளேயிருந்து சத்தம் வருது.
            "எல்லே! வாத்தியார்ர அடிச்சிக் கிடிச்சிப் புடாதீங்கடா!" அப்பிடின்னும் கூட்டத்துக்குள்ளேயிருந்து சத்தம் வருது.
            இப்போ பாத்தாக்கா சுத்திலும் வெச்ச வேலிய ஆளாளுக்கு பிய்ச்சு எறியுறாங்க. வேலி காத்துல பறக்குது.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...