3 Feb 2020

ஒரு ஊர்ல ரெண்டு பேச்சு!



செய்யு - 347

            ஒலகத்துல நெலமும், தண்ணியுந்தாம் அதிகமா ஆக்கிரமிப்புக்கு உள்ளாவுது. அதுவும் பொது எடமா ஒண்ணு இருந்தா அது கடைசி வரைக்கும் பொது இடமா இருக்கிறதில்ல. அது வேற ஒண்ண மாறிப் போயிடுது. ஒவ்வொரு மனுஷரோட மனசும் தனித்தனியா அவுங்கவங்க பங்குக்கு தயாரா இருக்குதே தவுர, பொதுவா எல்லாத்துக்குமான பங்குக்கு தயாரா இருக்கறதில்ல. போற போக்கப் பாத்தாக்க ஊருல ரோட்டைத் தவுர பொது எடம்னு ஒண்ணு வருங்காலத்துல இருக்குமான்னு தெரியல. இருக்குற கொஞ்ச நஞ்ச பொது எடமும் அது எதுக்கான பொது எடமா இருக்கணுமோ அதுக்கான நெலமை மாறி வேற ஒரு தினுசா மாறிப் போயிடும் போலருக்கு.
            பள்ளியோடத்துல இப்பிடி ஒரு சம்பவம் நடக்குறதப் பத்தி விகடு வூட்டுல சொல்லிக்கல. திட்டையிலேந்து வேலி கட்டுறதுக்கு வந்து ஆளுங்க இந்த விசயத்தெ சுப்பு வாத்தியாரோட காதுல போட்டுக் கொடுத்துட்டுங்க. இதெ கேள்விபட்டதும் சுப்பு வாத்தியாரு மனசுல கவலெ கவிய ஆரம்பிச்சிட்டுது. இந்தப் பயெ எங்க போனாலும் எதாச்சிம் பெரச்சனைய ஓரண்டையா இழுத்துட்டு வாரானேன்னு நொந்துப் போயிட்டாரு.
            மவனெ அழைச்சு விசாரிக்கிறாரு. "ஏம்டாம்பீ! பள்ளியோடம் போனோமா? பாடத்தெ நடத்துனோமா? வந்தோமான்னு இல்லாம ஏம்டா இப்பிடி வம்படியா பெரச்சனைய இழுத்துட்டு வர்றே? ஊருகாரனுவோ சப்போர்ட்டு யில்லாம எப்பிடிடா பள்ளியோடத்த நடத்துறது? எவனாச்சிம் ஒம் மேல பெட்டிசனெ எழுதிப் போட்டுட்டா என்னடாம்பீ பண்றது? இந்தக் காலத்துல போயி இப்பிடி இருக்கீயேடாம்பீ? ஏத்தோ நல்ல வெதமா பள்ளியோடம் போவே? பொழைச்சுப்பேன்னு பாத்தா இப்பிடிப் பண்ணிட்டு நிக்குறீயேடாம்பீ?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "பத்திரத்தெ நல்லா படிச்சிட்டேம்பா! அடங்கல்லயும் தெளிவா இருக்கு! இப்போ வுட்டுப்புட்டா பெறவு எப்பவும் அந்த எடத்தெ மீட்க முடியாம போயிடும்ப்பா! எல்லா காலத்துலயும் பள்ளியோடத்து எடத்தெ பிடுங்குறதுலத்தாம் நிக்குறாங்களே தவுர யாரும் பள்ளியோடத்துக்கு எடத்தெ தர மாட்டாங்க. சின்ன பள்ளியோடமா இருக்குற இது நாளைக்கே பெரிய பள்ளியோடமா மாறுணும்னா எடந்தாம் வேணும். அப்போ புரபோஸல் போறப்ப மொதல்ல எடம் இருக்கான்னுத்தாம் பாப்பாங்கப்பா. அதுவும் பள்ளியோடத்துக்குச் சொந்தமா எடம் இருக்கான்னுத்தாம் பாப்பாங்க. நபார்டுல கட்டடம் கட்டிக் கொடுக்கணும்னாலும் எடம் பள்ளியோடத்துக்கானதா இருக்கணும். ரொம்ப காலமா கவனத்துலயே இல்லாம போன பள்ளியோடமா போயிடுச்சி அது. இனுமேலாவது அதெ கொஞ்சம் தேத்திக் கொண்டாரணும்!"ங்றாம் விகடு.
            "என்னவோ நாட்டுல எடமே இல்லாத மாதிரி பள்ளியோடத்து எடத்துலத்தாம் பஞ்சாயத்துக்கு வாட்டர் டேங்க கட்டுறாங்க! பள்ளியோடத்து எடத்துலத்தாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தெ கட்டுறாங்க! அங்காடிய கட்டுறாங்க. எதாச்சிம் ஒண்ணுக்கு எடம் இல்லன்னா பள்ளியோடத்து எடத்துலத்தாம் மொதொ கண்ணு வுழுவுது. கடைசியில பள்ளியோடத்த ஒரு மூலைக்குத் தள்ளி, பள்ளியோடத்துக்கு எடமே இல்லாம போயி, பள்ளியோடத்து புள்ளைங்க விளையாடறதுக்கு, பிரேயர்ர நடத்துறதுக்குக் கூட எடமே இல்லாம போயிடுது! காலாங்காலமா இதாங் நடக்குது. வாத்தியாருங்க நாம்ம ன்னா பண்ண முடியும்? கவருமெண்டு எடத்தெ விட்டுக் கொடுக்குறதெ தவுர வேற வழியில்ல. ஊருல்ல பெரச்சனைய வளத்துக்கிட்டு நிக்க முடியாது. ஊரு ஒலகம் எப்பிடி இருக்கோ பாத்து அதுப்படி நடந்துக்கடாம்பீ! ஊரு ஒலகம் ஒரு பாதையில போவுதுன்னா, நீயி வேற பாதையில போயிட்டு இருக்கே. இந்தக் காலத்துல ரொம்ப நல்லதுல்லாம் பண்ண முடியாதுடாம்பீ! காந்தியையே துப்பாக்கியால சுட்டுப் போட்டுட்டுப் போயிட்டே இருக்குதுடாம்பீ சமுதாயம்! பாத்து புரிஞ்சி நடந்துக்கோடாம்பீ!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "யப்பா! நாம்ம ஒண்ணும் பெரச்சனை பண்ணல. பள்ளியோடத்து எடத்தெ பள்ளியோடத்துக்குக் கொடுங்கன்னு கேக்குறேம். வம்படியா எதுவும் பண்ணல. கேக்கக் கூட கூடாதுன்னா எப்பிடி? அவுங்க கொடுக்காட்டியும் வெச்சிக்கிட்டும். ஆனா கேக்காம இருந்தா எப்பிடி? ஒரு முயற்சிய பண்ணிப் பாக்கிறேம். பண்ணிப் பாத்துட்டு சரி வரலைன்னா வுட்டுடுறேம். அதெ பண்ணிப் பாக்காமலயே எதுக்கு வுடணும்? இத்து இன்னியோட முடிஞ்சிப் போற பெரச்சனையில்ல. பல தலைமுறைகளோட பெரச்சனெ. நக்குனோண்டு எடத்துல துக்குனோண்டு பள்ளியோடம் இருந்தா நல்லாவா இருக்கும். வூட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்ங்றாங்கல பள்ளியோடத்துக்கு மின்னாடி ரண்டு மரமாவது இருக்க வாணாமா? அதுக்குக் கூட எடம் இல்லாம அத்து ன்னா பள்ளியோடம்? பள்ளியோடம்னா பத்துப் புள்ளைங்கள சேத்தாப் போச்சா? அத்தோட ரண்டு மரமாவது வேணாமா? சுத்தமா பள்ளியோடத்துக்கு எடமே யில்ல. நாலா பக்கமும் நெருக்கி வெச்சிருக்காங்க. எடையில ரோட்டையும் போட்டா பள்ளியோடத்துக்கு ஒதுங்குறதுக்குக் கூட எடம் கெடையாது. கட்டடம் மட்டுந்தாம் எடம். நாம்ம ஒண்ணும் அநியாயத்த தட்டில்லாம் கேக்கல. சாதாரணமாத்தாம் கேக்குறேம். ஞாயம் கெடைக்குது, கெடைக்காம போவுது. அதெ பத்திக் கவலெயில்ல. கேக்கமா இருக்க முடியாதுப்பா!"ங்றாம் விகடு.
            "அரசாங்க வேலைக்கார்ரேம் மொதல்ல வேலைய காபந்துப் பண்ணிக்கணும்டாம்பீ. பெறவுதாம் அந்த வேலையில இருந்துகிட்டு நல்லது செய்யுறதுல்லாம். யாராவது கம்ப்ளெய்ண்டு பண்ணி ஒரு நாளு - இருவத்து நாலு மணி நேரம்  ஜெயில்ல வெச்சா போதும் மூணு மாசம் சஸ்பெண்ட்டு ஆயிடுவே பாத்துக்க. ஊரோட பகைச்சா வேரோட கெடும்னு படிச்சிருக்கீல்லடாம்பீ! நெருப்பு சுடும்னா சுடும்தாம். நாம்ம தொட்டுப் பாத்து தெரிஞ்சிக்கிறேம்னா என்னடாம்பீ?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.

            "யப்பா! நாம்ம ஒண்ணுமே செய்யல. ஊருக்காரவோ அம்மாம் கேவலமா பேசினாங்க. நாம்ம பதிலுக்கு ஒத்த வார்த்தெ எதித்துப் பேசல. பேசாமத்தாம் நின்னேம். அடிக்கக் கூட பாய்ஞ்சாங்க. நாம்ம திருப்பி அடிக்கலாம் பாயல. அப்படியேத்தாம் நின்னேம். என்னத்தெ கேவலமா பேசுனாலும் அதெ வாங்கிக்கத் தயாரா இருக்குறவனெ அதுக்கு மேல என்ன பேச முடியும்? அடிச்சாலும் பரவாயில்லன்னு வாங்கிக்க நிக்குறவனெ எவ்வளவு போட்டு அடிக்க முடியும். நீஞ்ஞ சொல்றாப்புல இது கிரிமினல் கேஸ்லாம் யில்லப்பா. இத்து கேஸேயில்லப்பா. அப்பிடி கேஸூனாலும் சிவில் கேஸ்த்தாம்பா! அதுக்குல்லாம் பிடிச்சி ஜெயில்ல போட்டுட மாட்டாங்கப்பா!"ங்றாம் விகடு.
            "சிவில் கேஸ்தாம்ல கிரிமினல் கேஸ்ஸாவுது. சரியானெ கூறு கெட்ட பயலா இருப்பீயாடா நீயி? ஏம்டா ரகுநாதென் கதையில்லாம் தெர்ரியாமா பேசுறானே! அத்தையெல்லாம் நாம்ம எப்பிடிச் சொல்லி புரிய வைப்பேம்? களிமங்கலத்துக்கும், கோட்டகத்துக்கும் ரோட்ட போடப் போயித்தாம்டா ரகுநாதென பிடிச்சி ஜெயில்ல போட்டது. அரசியல்வாதி ஜெயில்லுக்குப் போறது, வர்றது பெரச்சனையில்லடா. நாம்ம அரசாங்க கூலிக்காரங்க. அப்பிடில்லாம் போயிடக் கூடாதுடா. நீயி என்னத்தாம் மனசுல நெனைச்சுக்கிட்டு இருக்கே?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "நீஞ்ஞ ரொம்ப கற்பனெ பண்றதா நெனைச்சிட்டு இருக்கேம். வேற ஒண்ணும் நெனைக்கல."ங்றாம் விகடு.
            "எலே நாம்ம சங்கத்து ஆளுகள அழைச்சாந்து பேசி வுடறேம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "யப்பா! நாம்ம ஒண்ணும் தப்பு பண்ணல. பேசி வுடறதுக்கு. பீடிவோ சுமூகமா பேசி வுடுறதா சொல்லிருக்காரு. அத்தோட வுட்டுப்புடலாம்."ங்றாம் விகடு.
            "தப்பா போயிடப் படாதுடா! எதெயும் சின்னமா இருக்கிறப்பவே சரி பண்ணி வுட்டுப்புடணும். புரையோடிடக் கூடாது. நீயி பண்ணி வெச்சிருக்கிறெ வேலையக் கேக்குறப்ப நாளைக்கி கலெக்டர்ரே வந்து நடவடிக்கை எடுக்கறாப்புல ஆயிப்புடும். பெரச்சனை பெரிசாச்சுன்னா மக்களெ சமாதானம் பண்றதுக்கு ஒம் மேலத்தாம் நடவடிக்கெ எடுப்பாங்க. அதெல்லாம் ஒரு மாரியா போவும். ஒனக்கு இன்னும் புரியலெ நெலவரம். நீயி பேசுறது சொல்றதெல்லாம் புத்தகத்துலப் படிச்சி, கதையா எழுதுறக்குச் சரிபடும். நடைமொறைக்குச் சரிபடாது. பிரயோசனப்படாது. எங்காச்சிம் ரோடு போவட்டும். எப்பிடியாச்சிம் அது இருந்துகிடட்டும். கோட்டகத்து ஆளுங்க எல்லாம் தங்கமானவங்க. நாளைக்கி நாமளே வந்து பேசி வுடறேம்டா."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "பேயாம இருங்க! ஒண்ணும் நீஞ்ஞ நெனைக்கிற மாரில்லாம் நடக்காது. நீஞ்ஞ எதாச்சிம் செஞ்சாத்தாம் ஒண்ணு கெடக்க ஒண்ணு நடக்கும். பெரச்சனை பாட்டுக்குப் பெரச்சனை. பள்ளியோடம் பாட்டுக்குப் பள்ளியோடம். ஊருகாரவங்கப் பாட்டுக்கு ஊருகாரவங்க. அதது பாட்டுக்கு அதது. எல்லாம் அதது பாட்டுக்கு ஒரு முடிவுக்கு வரும்."ங்றாம் விகடு.
            "அனுபவம் பத்தலே. அதாங்."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒடனே விநாயகம் வாத்தியார்ர கொண்டாந்து பஞ்சாயத்தெ வெச்சுப்புடாதீங்க."ங்றாம் விகடு.
            "ஒன்னய அந்தப் பள்ளியோடத்தெ வுட்டு வேற நல்ல பள்ளியோடத்துக்கு டிரான்ஸ்பர பண்ணத்தாம் சரிபெட்டு வருவே."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            சுப்பு வாத்தியாரு அப்பிடி இப்பிடின்னு சொல்லிப்புட்டாலும் மனசு கேக்கல அவருக்கு. காலாங்காத்தாலயே பொழுது விடிஞ்சதும், விடியாததுமா டிவியெஸ்ஸ கெளப்பிக்கிட்டுக் கோட்டகத்துப் போயிட்டாரு. அங்கப் போயி பேசுனா கீழத் தெருவுக்கு மின்னாடி இருக்குற ஊருக்காரங்க விகடுவுக்கு ஆதரவா பேசுறாங்க. கீழத் தெருக்காரங்க எதிர்ப்பா பேசுறாங்க.
            கீழத்தெருவுக்கு மின்னாடி இருக்குற அத்தனெ பேரும், "வாத்தியாரு பண்ணதுத்தாம் செரி. நாஞ்ஞ நேத்திக்கு வூட்டுல யில்ல. எல்லா வயக்காட்டுல கெடந்தேம். சங்கதி தெரியல. தெரிஞ்சிருந்தா வந்துப் பேசியிருப்பேம். அத்து ன்னா அந்தத் தெருக்கார பயலுகளுக்கு ரண்டு ரோடு கேக்குது? அதுவும் பள்ளியோடத்து எடத்துல? பழய பெரசிடெண்டு பண்ணி வுட்டு வேலைங்க வாத்தியார்ரே அது. அந்தத் தெருக்கார பய பூராவும் ஓட்டுப் போட்டதுக்கு கைங்கர்யமா அதெ பண்ணி விட்டுப்புட்டாரு. சரி செய்யி ஒம் வூட்டு எடத்துல ரோட்டைப் போட்டுக் கொடுன்னா பள்ளியோடத்து எடத்துல போட்டுக் கொடுத்தா எப்பிடி? நீஞ்ஞ ஒண்ணும் கவலெபடாதீங்க."ங்றாங்க.
            சுப்பு வாத்தியாரு கீழத்தெருவுக்கும் போயிப் பேசுறாரு. அவுங்கத்தாம் கொஞ்சம் கொதிப்பா பேசுறாங்க. "ஒஞ்ஞ தங்க மனசுக்கு இப்பிடி ஒரு புள்ள வந்துப் பொறக்கக் கூடாது வாத்தியார்ரே. கல்லுளிமங்கம் மாதிரி இருந்துகிட்டு ன்னா வேல பாத்துப்புட்டு ஒங்க புள்ளே? என்னவோ ஊரு ஒலகத்துல ஒஞ்ஞ புள்ளத்தாம் பள்ளியோடம் நடத்துறது போலல்ல நடந்துக்குது. ஒரு ஆடு மாடு பள்ளியோடம் பக்கம் ஒதுங்கக் கூடாதுங்குதே? கெராமத்துலு ஆடு, மாடு வளக்கமா ன்னா பண்ணுவாங்க? கொஞ்சம் அசமடங்ககக் கொள்ள பள்ளியோடத்து ஓரத்துல கண்ணசந்தா வூட்டுப்பக்கம் போயி படுங்கங்குது. ரொம்பத்தாம் அழிச்சாட்டியம் பண்ணுது. ஒஞ்ஞ புள்ளத்தாம் அதிசயமா வாத்தியார்ரு வேல வந்து இந்தப் பள்ளியோடத்துல பாக்குது? இத்தனெ வருஷமா யாரும் வந்து வேலயப் பாக்கலீயா ன்னா? பதினொண்ணு மணிக்கு வருவாங்க, மூணு மணிக்குல்லாம் கெளம்பிடுவாங்க. வர்றதும் தெரியாது. போறதும் தெரியாது. இப்பிடியா ஒஞ்ஞ புள்ளையாட்டம்? அதுக்கு வூட்டுல எதுனாச்சிம் வேல கொடுக்குறீங்களா இல்லையா? நாளுல பாதி நேரம் இஞ்ஞயே கெடக்குதே! கலியாண காட்சிய பண்ணிப் போட்டீங்கன்னத்தாம் சரிபெட்டு வரும்!" அப்பிடிங்கிறாங்க.
            அதுலயே இன்னொரு தரப்பு ஆளுங்க, "வாத்தியார்ரே! நீஞ்ஞ ஒண்ணும் நெனைச்சுக்காதீங்க. இஞ்ஞயும் கொஞ்சம் தப்பு இருக்கு. நேத்திக்கு இஞ்ஞ பக்கத்துல ரொம்பவே வாயை வுட்டுப்புட்டாங்க. யம்பீ! ஒரு வார்த்தெ பேசல. ரொம்ப பொறுமையாத்தாம் கேட்டுகிடுச்சி. அந்த ரோட்டு எடம் அதுக்குப் பள்ளியோடத்துக்கு வேணும். அதாங் அதுல மட்டுந்தாம் கரைச்சலா இருக்கு. மித்தப்படி யம்பீ யாருன்னா எஞ்ஞ ஊரு வாத்தியாரு. நீஞ்ஞ பயப்புடற மாரில்லாம் வுட்டுப்புட மாட்டேம். நீஞ்ஞ பயப்படாம கொள்ளாம கெளம்புங்க. பாத்துக்கிடறேம்!" அப்பிடின்னும் சொல்லுறாங்க.
            சுப்பு வாத்தியாருக்குக் கொழப்பமா இருக்கு. கோட்டகத்து ஆளுங்க சப்போர்ட்டா இருக்குறாங்களா? எதிர்ப்பா இருக்கறாங்களா?ன்னு ஒண்ணும் புரிஞ்சிக்க முடியாம கெளம்புறாரு சுப்பு வாத்தியாரு.
            அதுக்குப் பெறவு ஒரு மாசம் வரைக்கும் இந்தப் பிரச்சனையெப் பத்தி கொஞ்சம் பேச்சா கெடந்திச்சு. பெறவு இது பத்தினப் பேச்சு மறைய ஆரம்பிச்சிடுச்சு. இந்தப் பெரச்சனையப் பத்தி பேசிட்டுப் போன பீடிவோ இதெ பத்தி என்ன நடவடிக்கை எடுக்கப் போறார்ங்ற எதிர்பார்ப்பே மறந்து போச்சுது. ரெண்டு மாச காலத்துல பள்ளியோடம் பாட்டுக்குப் பள்ளியோடம் நடந்துகிட்டு இருக்குது. கீழத்தெரு ஆளுங்க பாட்டுக்கு அவங்கவங்க வேலையப் பாத்துட்டு இருக்கிறாங்க.
             பெறவு ஒரு வாரத்துல சனிக் கெழம, ஞாயித்துக் கெழம லீவு முடிஞ்சி வந்து திங்கக் கெழம பார்த்தாக்கா...
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...