காப்புக்கட்டு
முன்பெல்லாம்
அங்கே இங்கே ஓடிப் போய்
மாடிப் படியேறி
பக்கத்து வீட்டு வாண்டுகளோடு
ஓடிப் பிடித்து விளையாடி
கை, கால் உடைத்துக் கொண்டு
முகத்தில், முழங்காலில்
சிராய்ப்புகளோடு வரும்
அவனை
பாதுகாப்பாய் வைத்திருக்கிறோம்
என்பது தெரிகிறது
தாயின் முகத்தில்
லேப்டாப்பில் விளையாடிக்
கொண்டு
இருக்கும் மகனைப் பார்க்கையில்!
*****
சோலையில் சந்திப்போம்!
ரோஜா பூக்கும்
பக்கத்தே வெண்டைகள் காய்க்கும்
அருகே கத்திரிப் பூத்திருக்கும்
புடலைகள் தொங்கும்
பெருந்தொட்டியில் வாழை
குலை விட்டிருக்கும்
முள்ளங்கி தழைகள் முகிழ்த்திருக்கும்
மல்லிகைக் கொடி சுற்றிப்
படர்ந்திருக்கும்
மாடித் தோட்டத்தில்
யாரும் இல்லா இரவுப்
பொழுதில்
சந்திப்போம்
தொட்டிகள் உடையாதபடி
இருவரும்
அணைத்து மகிழும்படி.
*****
No comments:
Post a Comment