சாவுப் பேச்சு
ஊதுவத்திப் புகை பரவுகிறது
மரணத்தின் வாசனையைச் சொல்லியபடி.
பேரழுகைகள் தொடர்கின்றன
மாண்டவரை மீண்டு வரச் சொல்லியபடி.
அமைதியாய்
கூலர் பாக்ஸில்
இப்போது இருப்பவர்
இப்படி இருந்ததில்லை.
கல்யாண வீட்டில்
குடித்து விட்டு கும்மியடித்திருக்கிறார்.
இழவு வீட்டில் கும்மாளம் போட்டிருக்கிறார்.
காது குத்தலில்
வெட்டுக் குத்தலில் இறங்கியிருக்கிறார்.
இவரின் ஆன்மா
சாந்தியடைவதாக
சுவரெங்கும் போஸ்டர்கள்
கிழிந்து தொங்க,
வீதியெங்கும் ப்ளக்ஸ்கள்
கண்களைக் கூசச் செய்கின்றன.
பிள்ளைகள்
இறந்துப் போன
அப்பாவின் பெருமை பேசுகின்றனர்.
இன்னும் ரெண்டு வருசம்
இருந்திருக்கலாம் என
சொத்து பிரிக்கச் சொல்லி
அவருக்கு நேற்றிரவு
ஹார்ட் அட்டாக் வரவழைத்ததை
மறந்து விட்டு.
*****
No comments:
Post a Comment