காணாமல் போனவன் பற்றிய குறிப்புகள்
ஐந்து நிமிடத்திற்குள்
இருபது சேனல்கள்
மாற்றி விடும் நண்பன்
ஐந்து வருடங்களாக
அறை மாறாமல் இருந்தான்
அறை வாடகை என
எதையும் பகிராமல்
சொந்த வீட்டில் இருப்பதைப் போல!
ஒருநாள் அறையை விட்டு
காலி செய்தவன்
அதன் பின் வரவேயில்லை.
தொடுவார் இல்லாமல்
தனிமையில் கிடக்கின்ற
அவன் கை பட்ட ரிமோட்டும்,
மாறாத காட்சியைக்
காட்டிக் கொண்டிருக்கின்ற
அவன் கண்கள் பதிந்த
ஓடாதத் தொலைக்காட்சியும்
வயதான நோயாளிப் போல்
அவனைப் பற்றிய ஒளிபரப்போடு
ஒடுங்கிக் கிடக்கின்றன.
என்றாவது அவனைக்
கண்டறிந்து
கொண்டு வந்து நிறுத்த வேண்டும்
காணாமல் போன செய்தியை
ஒளிபரப்பு விட்டு
அதன் பின் ஓய்ந்து போன
அந்த ஓடாதத் தொலைக்காட்சியிடம்.
*****
No comments:
Post a Comment