இரகசியம்
சிக்குப்பிடித்து செம்படை
படிந்த முடிக்கு
எண்ணெய் தேய்க்கும் ஆசை
இருந்திருக்கும்.
அங்கங்கே ஒட்டுப் போட்ட
பாவாடை மாற்றி
நல்லதொரு ஆடை உடுத்தும்
கனவு இருந்திருக்கும்.
கழுத்தில் ஒரு மணி, காலில்
ஒரு கொலுசு
அணிந்துப் பார்க்கும்
ஏக்கம் இருந்திருக்கும்
ஒரு நாள் ஒரு பொழுது
எங்கேனும் ஒரு புது இடம்
சென்று
சுற்றிப் பார்க்கும்
எண்ணம் இருந்திருக்கும்
மணமாகிப் போன இடத்திலும்
ஆடுகளையும், மாடுகளையும்
மேய்த்து
ஆடாய் மாடாய்த் திரியும்
அக்காவின்
பிறந்தகத்தின் உடைசல்
அலமாரியில்
யாரும் அறியாமல்
அவளது ஆசைகளையும் கனவுகளையும்
போல்
புதைந்திருக்கிறது
செல்லரித்துப் போன காதல்
கடுதாசி ஒன்று.
*****
No comments:
Post a Comment