4 Jul 2026

இரெ. சண்முகவடிவேலுவின் ‘நினைவின் நிழல்கள்’ ஓர் எளிய அறிமுகம்

இரெ. சண்முகவடிவேலுவின் ‘நினைவின் நிழல்கள்’ ஓர் எளிய அறிமுகம்

முன்னோக்கிப் பாயும் ப்ளாஸ்பேக்!

நினைவின் நிழல்கள் என்ற தலைப்பில் நா. பார்த்தசாரதி ஒரு குறுநாவல் எழுதியிருக்கிறார்.

அதே தலைப்பில் இரெ. சண்முகவடிவேல் எழுதியுள்ள இந்த நூல் அவரது வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காட்டும் குறுநாவல் போலவே இருக்கிறது.

ஆங்கிலத்தில் சிறந்த மனிதர்கள் ஒரே மாதிரியாகச் சிந்திக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு இந்தப் புத்தகத் தலைப்பே நல்லதொரு உதாரணம்தான்.

நினைவுகளின் நிழல்கள் என்ற லாவண்யா பெரியசாமி என்பவரின் புத்தகமும் இணைய வெளியில் காணக் கிடைக்கிறது. நினைவுகளைப் பன்மைப்படுத்தாமல் ஒருமைப்படுத்தி இரெ. சண்முகவடிவேல் எழுதியுள்ள இந்தப் புத்தகம் அவரது நினைவில் வாழும் மனிதர்களைப் பற்றிச் சிரிக்க சிரிக்க நம்மிடம் பேசுகிறது.

மனிதர்கள் எவ்வளவு வண்ணமயமாக இருந்தாலும் விழும் நிழல்கள் என்னவோ கருப்புதான். அந்த வகையில் அந்தக் கால கருப்பு வெள்ளை கிளாஸிக் படம் பார்ப்பது போன்ற உணர்வு இந்தப் புத்தகத்தைப் படிக்கையில்.

நிழல்கள் என்ற கருமையைப் பெயராக இந்நூல் சூட்டிக் கொண்டாலும் நினைவின் நிழல்களாய் நடமாடும் அந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் வண்ணமயமான கிராபிக்ஸ்களாகவே புத்தகம் முழுவதும் உலவுகிறார்கள். கரு நிழல்களுக்கும் வண்ணம் தீட்டத் தெரிந்த வித்தைக்காரராக இருக்கிறார் சண்முகவடிவேல்.

மனிதன் என்பவன் அடிப்படையில் ஒரு ஞாபக மறதிப் பிராணி. ஆனால், சண்முகவடிவேலுவுக்கு ஞாபகசக்தி அதிகம். தான் சந்தித்த மனிதர்கள், கடந்து வந்த பாதைகள் என எல்லாவற்றையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்து இப்படி ஒரு புத்தமாக ஆக்கியிருக்கிறார்.

புத்தகத்தில் வரும் மனிதர்கள் பெரும்பாலும் பட்டிமன்றம் தொடர்பான மனிதர்கள். சில இடங்களில் பேருந்துகளிலும், சந்தைக் கடைகளிலும் கடந்து போகும் சாதாரண மனிதர்களும் இருக்கிறார்கள். சண்முகவடிவேலு அவர்களை விவரிக்கும் விதம்தான் இதில் முக்கியம். அது மைக்ரோஸ்கோப்பில் சாதாரண எறும்பை அசாதாரணமாகப் பார்ப்பது போலச் சுவாரசியமாக ஆக்கி விடுகிறது.

புத்தகத்தில் சில மொக்கையான மனிதர்களை அவர் சந்திக்குமிடம் நமக்கு ரொம்ப அலாதியானது. பரவாயில்லை, நமக்கு மட்டும்தான் மொக்கையான மனிதர்கள் அறிமுகமாகிறார்கள் என்று நினைத்தால், இவ்வளவு பெரிய மனிதருக்கும் அதேதான் என்கிற சராசரி மனிதனுக்குக் கிடைக்கும் திருப்திதான் அது.

எழுத்தாளர் ரொம்பவும் நல்லப் பிள்ளை என்பதற்கு பளிச்சென்ற முகத்துடன் வெள்ளைச்சட்டையில் உள்ள அட்டைப்படமே நல்ல சான்றுதான். கொஞ்சம் கூடக் கெட்ட வார்த்தைகளோ, அதிர்ச்சியூட்டும் அந்தரங்கங்களோ இல்லாமல், பக்திப் பழமாக வண்டி ஓடுவதால் அனைவரும் படிக்கக் கூடிய புத்தமாக விளங்குகிறது. அந்த வகையில் பரபரப்பான த்ரில்லர்களோ, ரத்தக் கறைகளோ இல்லாத ஒரு சாதுவான புத்தகம் இது.

வாசிக்க வாசிக்க முள்ளாகக் குத்தாமல், வெண்ணெய் போல நகர்கிறது. செயற்கையான பந்தாக்கள் இல்லை. நான் ஒரு மேதாவி என்று காலரைத் தூக்கிக் கொள்ளாமல் எதார்த்தமாக எழுதியிருக்கிறார். பட்டுவேட்டி, பட்டுச் சட்டை தோற்றத்தைக் கூட தோற்றப் போலிவுதான், ஜெயித்தப் போலிவில்லை என்று சொல்லும் இடம் அதற்கு நல்ல சாட்சியம்.

புத்தகத்தின் ஆகச் சிறந்த அம்சம் என்றால், தேவையில்லாத எதிர்மறை விஷயங்களை டெலிட் செய்துவிட்டு, அழகிய நினைவுகளை மட்டும் ரீஸ்டோர் செய்திருக்கும் அந்த அழகுதான். அந்த அளவுக்குச் சண்முகவடிவேலு தான் சந்தித்த மனிதர்கள், பழகிய நண்பர்கள், ரசித்த இடங்கள் என எல்லாவற்றையும் ஓர் ஆல்பம் போலத் தொகுத்திருக்கிறார்.

இப்புத்தகத்தைப் படித்து முடிக்கையில் இரெ. சண்முகவடிவேலுவின் இந்த நினைவின் நிழல்கள் ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதரின் டைரிக் குறிப்பு போலவும் தோன்றுகிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், டைரியை நாம் பூட்டி வைப்போம். சண்முகவடிவேலு புத்தகமாக்கி விட்டார். அந்த அளவுக்கு அவரது வாழ்க்கை திறந்த புத்தமாக இருக்கிறது.

நூல் குறிப்பு :

தலைப்பு       : நினைவின் நிழல்கள்

ஆசிரியர்        : புலவர் இரெ. சண்முகவடிவேல் M.A.

பக்கங்கள்     : 186

விலை            : ரூ. 200/-

வெளியீடு     : கலைஞன் பதிப்பகம், 9, சாரங்கபாணித் தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017

*****

No comments:

Post a Comment