5 Jul 2026

பியர், பிரேக் அப் மற்றும் பிட்டு படங்களின் தத்துவம்

சீரழித்த சினிமா – 33

திரிஷா இல்லன்னா நயன்தாரா

பியர், பிரேக் அப் மற்றும் பிட்டு படங்களின் தத்துவம்

உலக சினிமா வரலாற்றில் காதலைப் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் பேசியிருக்கின்றன. ஆனால், "ஒருத்தி போனா இன்னொருத்தி" என்கிற ஆகச்சிறந்த பிரபஞ்ச விதியை இவ்வளவு ஆணித்தரமாக, எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பிரகடனப்படுத்திய பெருமை 2015 இல் வெளிவந்த திரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படத்தையே சேரும்.

மார்க்சியம் பேசும் பண்டமாக்கல் கோட்பாட்டைத் தன் திரைக்கதையின் மூலம் மிக வக்கிரமாக நிரூபித்திருத்த திரைப்படமே திரிஷா இல்லன்னா நயன்தாரா. படத்தின் தலைப்பிலேயே அந்த ஆபத்தான சந்தை அரசியல் தொடங்கிவிடுகிறது. திரிஷா இல்லன்னா நயன்தாரா அதாவது, சந்தையில் ஒரு பிராண்ட் சோப்பு கிடைக்கவில்லை என்றால், நுகர்வோர் இன்னொரு பிராண்ட் சோப்புக்கு மாறுவதைப் போல, பெண்களை வெறும் நுகர்வுப் பண்டமாக மாற்றும் ஆணாதிக்கக் கொழுப்பை இந்தத் தலைப்பிலேயே நீங்கள் பார்க்கலாம்.

படத்தின் கதை என்று தனியாக தேடினால் ஏமாற்றமே மிஞ்சும். அதற்காகத் அதைத் தேடாமலும் இருக்க முடியாது. அது ஒரு இன்பினிட்டி லூப்.

அந்த லூப்பின் படிகளாவன,

படி 1 : ஹீரோவுக்கு ஒரு பெண் மீது காதல் வருகிறது.

படி 2 : ஏதோ ஒரு அற்ப காரணத்தால் உதாரணமாக, தண்ணி அடிப்பது, அல்லது வேறு லோக்கல் மேட்டர்களால் பிரேக் அப் ஆகிறது.

படி 3 : ஹீரோ உடனே டாஸ்மாக் சென்று சோகப் பாடல் பாடுகிறார்.

படி 4 : அடுத்த பெண்ணைத் தேடிப் போகிறார்.

படி 5 : மீண்டும் படி 1க்குச் செல்லவும்.

நாயகனுக்குப் படத்தில் இவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே வேலை, இளம்பருவத்து ஹார்மோன் கோளாறுகளைத் திரையில் பிரதிபலிப்பதுதான். எந்நேரமும் ஒருவித ஏக்கத்தில் இருக்கும் இவரது கண்கள், காதலைத் தேடுகிறதா அல்லது வேறு எதையாவது தேடுகிறதா என்பது நாயகனுக்கே வெளிச்சம்.

தமிழ் சினிமா வழக்கப்படி, ஹீரோயின்கள் என்பவர்கள் ஹீரோவின் டாஸ்மாக் புலம்பல்களுக்குக் காரணகர்த்தாக்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற விதியை இந்தப் படம் அட்சர சுத்தமாகப் பிரதிபலிக்கிறது.

அநேகமாக வர்ஜினிட்டி என்ற வார்த்தையை மிக அதிக முறை உச்சரித்த முதல் தமிழ்ப் படம் இதுவாகத்தான் இருக்கும். சென்சார் போர்டு அதிகாரிகள் படம் பார்க்கும்போது தூங்கிவிட்டார்களா அல்லது அவர்களுக்கு காது கேட்கவில்லையா என்று யோசித்தால், இதிலிருக்கும் உளவியல் நுட்பம் உங்களுக்குப் புரிய வரும். அதாவது, ஒரே வார்த்தையை நான்கு முறை சொன்னால் போரடித்து விடும், நாற்பது முறை சொன்னால் அது ஒரு வார்த்தையா என்று சந்தேகமே வந்து விடுமே அப்படி போரடிப்பு மற்றும் சந்தேகம் வந்திருக்க வேண்டும் சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு.

"ஒரு பெண் இல்லையென்றால் இன்னொரு பெண்" என்ற தத்துவம், தனிமனித உறவின் ஆழத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு தற்காப்பு வழிமுறை. உண்மையான காதலின் தீவிரத்தையும், அதன் பின்னால் இருக்கும் பொறுப்பையும் எதிர்கொள்ள பயந்து, இப்படத்தின் நாயகன் தன் சுதந்திரத்தை அர்த்தமற்ற அலைச்சலாக மாற்றிக் கொள்கிறான். காதலில் தியாகம், கண்ணீர், கற்பு, மரணம் போன்ற மரபான தமிழ் சினிமா கூறுகள் இதில் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன. விழுமியங்கள் அற்ற இந்தச் சூழலில் நாயகன் தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள பாலியல் மற்றும் மது ஆகிய தற்காலிக இன்பங்களை மட்டுமே சார்ந்திருக்கிறான்.

நாயகனுக்குப் பெண்கள் மீது இருப்பது காதலா அல்லது தன் அகத் தனிமையைப் போக்கிக் கொள்ளத் தேடும் ஒரு வடிகாலா? அவனால் எந்தவொரு பெண்ணுடனும் உண்மையான இருத்தலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்த முடிவதில்லை. அவனது தேடல் முழுவதும் உடல் சார்ந்ததாகவும், சமூகத்தின் முன் தன்னை ஓர் ஆண் என்று நிரூபிக்கத் துடிக்கும் ஒரு தவிப்பாகவுமே சுருங்கிவிடுகிறது.

இத்திரைப்படம் அர்த்தமற்ற, விழுமியங்கள் அற்ற, இலக்கற்ற ஒரு நவீன உலகத்தில் வாழும் இளைஞனின் ஆழமான இருத்தலியல் தவிப்பின் அநாகரிகமான கொண்டாட்டம். வாழ்க்கைக்கு என்று எந்த உன்னத நோக்கமும் இல்லை என்பதை உணர்ந்த பின், ஒரு மனிதன் எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி தன் விருப்பப்படி வாழத் தலைப்படும் அபத்த நாடக வடிவமே இத்திரைப்படம்.

திரிஷா இல்லன்னா நயன்தாரா என்பது ஒரு திரைப்படமே அல்ல. அது, தியேட்டருக்குள் ஏதோ ஒரு போதையில் நுழைந்து, இரண்டரை மணி நேரம் கழித்து "நாம் எங்கே இருக்கிறோம்?" என்று தெரியாமல் வெளியே வரும் ஒரு மாயாஜால அனுபவம்.

ஒருவர் இந்தப் படத்தை 5 பியர் பாட்டில்களோடு பார்க்கப் போனால், இரண்டைத்தான் குடித்திருப்பார். மீதி மூன்றை திரையில் வரும் நாயகன் பிடுங்கிக் குடித்திருப்பார். அந்த அளவுக்கு இப்பட நாயகன் டாஸ்மாக்கின் பிராண்ட் அம்பாஸடராகக் குடித்து குடித்து டாஸ்மாக்கிற்கே பஞ்ச கோலத்தைக் காட்டக் கூடியவர்.

சரியாகச் சொல்வதென்றால், இத்திரைப்படம் ஒரு திரைக்கலையே அல்ல; பண்பாட்டுத் தளத்தில் நடத்தப்பட்ட ஒரு பாலியல் வன்புணர்வு!

இத்திரைப்படம் ஏற்படுத்திய விளைவுகளை மதிப்பிட்டால், ஹைப்பர்ரியாலிட்டி  கோட்பாட்டின்படி, திரையில் காட்டப்படும் இந்த வக்கிரமான, மிகைப்படுத்தப்பட்ட உறவு நிலைகளை உண்மை என்று நம்பி, நிஜ வாழ்க்கையிலும் இளைஞர்கள் தங்கள் இணையர்களை அதே அளவுகோல்களுடன் அணுகத் தொடங்கியது ஒரு மோசமான பின்னடைவு. இந்தப் பின்னடைவு நிஜ உலக உறவுகளில் பெரும் ஏமாற்றத்தையும், மன அழுத்தத்தையும் உருவாக்க காரணமாகியது.

தமிழ் சினிமா எத்தனையோ பிற்போக்குத்தனங்களை அள்ளித் தெளித்திருக்கிறது. ஆனால், ஒரு நுகர்வுச் சந்தையின் ஆகச்சிறந்த கழிவை, இளைஞர்களின் நாடித் துடிப்பு என்ற பெயரில் திரையரங்குகளில் கொட்டிய இந்த திரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படம், சமகாலப் பண்பாட்டுச் சீரழிவின் ஆகச்சிறந்த குறியீடு.

இத்திரைப்படம் ஏற்படுத்திய சீரழிவு என்பது, அது காட்டிய ஆபாச வசனங்களில் மட்டும் இல்லை; மனித விழுமியத்தின் தனித்துவத்தை நிராகரித்து, உறவுகளின் ஆழத்தை எள்ளி நகையாடி, பொறுப்பற்ற தனத்தை கொண்டாட்டமாக மாற்றிய தத்துவார்த்த வறுமையில்தான் இருக்கிறது.

பெண்ணியம் பேசும் சுயமரியாதைக் கருத்துக்களைத் துடைத்தெறிந்துவிட்டு, பெண்ணின் உடலை, அவளது கற்பை, அவளது அசைவுகளைத் தங்களுக்குத் தேவையான ஆணாதிக்கச் சந்தைக்கான மூலதனமாக மாற்றியதுதான் இத்திரைப்படத்தின் ஆகச் சிறந்த அக்கிரமம். படம் முழுக்க நாயகன் பேசும் வசனங்கள் அனைத்தும், ஒரு பாலியல் வறட்சி மிகுந்த சமூகத்தின் வக்கிரக் கூச்சல்கள் அன்றி வேறில்லை.

இந்தியச் சூழலில் நிலவும் பாலியல் நசுக்கல்களையும், விலக்கப்பட்ட தனிமனித உரையாடல்களையும் இத்திரைப்படம் தனக்கான முதலீடாக மாற்றிக் கொண்டு, தமிழ்ச் சமூகத்தைப் பாலியல் முதிர்ச்சியை அடைய விடாத, தேங்கி நிற்கும் டீன் ஏஜ் உளவியலிலேயே தேக்கி வைத்ததுதான் இத்திரைப்படம் செய்த ஆகச் சிறந்த வரலாற்றுச் சீரழிவு.

*****

No comments:

Post a Comment