4 Jul 2026

இருத்தலியலின் மாபெரும் துயரம்

சீரழித்த சினிமா – 32

குட் பேட் அக்லி

இருத்தலியலின் மாபெரும் துயரம்

இருத்தலியலின் ஆகப்பெரும் சாபமே அர்த்தமின்மைதான். பிரபஞ்சத்திற்கு எப்படி ஒரு நியதியும் அர்த்தமும் இல்லையோ, அதேபோல்தான் 2025 இல் வெளிவந்த குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தின் திரைக்கதைக்கும் எந்த நியதியும் அர்த்தமும் தர்க்கமும் இல்லை என்பதை உணரும்போது ஒரு தத்துவார்த்த அதிர்வு நமக்குள்ளே நிகழ்கிறது.

இப்படத்தின் பெயரில் இருக்கும் குட் என்பது சும்மா பெயருக்குத்தான். இங்கே நன்மையும் தீமையும் வேறு வேறல்ல; இரண்டும் ஒரே பிரியாணி அண்டாவில் வெந்த வெவ்வேறு கறித்துண்டுகள்.

படத்தின் தலைப்பில் உள்ள பேட் என்பதில்தான் ஹீரோ ஆனந்தம் அடைகிறார்.

அப்புறம் அந்தப் படத்தின் தலைப்பில் கடைசியில் இருக்கும் அக்லி. அதுதான் திரைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நுகர்வோர் சமூகம்.

இப்படத்தின் கதைதான் என்ன?

நாயகன் வருகிறார். சிரிக்கிறார். துப்பாக்கியை எடுக்கிறார். சுடுகிறார். டான்ஸ் ஆடுகிறார். இடையில் கொஞ்சம் டார்க் காமெடி பண்ணுகிறார். சுருக்கமாகச் சொன்னால், லாஜிக்கை வாஷ் பேசினில் போட்டுப் பிளஷ் செய்த கதம்ப சாதம்தான் படத்தின் கதை.

படத்தில் சுடப்படும் துப்பாக்கிக் குண்டுகளின் எண்ணிக்கை தோராயமாக சில பல ஆயிரங்கள் இருக்கலாம், லட்சங்களைத் தொட்டாலும் எண்ணிக்கைப் பிழையில்லை. நாயகன் மீசையை முறுக்கும் இடங்கள் சில பல நூறுகள் இருக்கலாம். திரைக்கதையில் லாஜிக் உதைக்கும் இடங்கள் சில பல இன்பினிட்டிகள் இருக்கலாம்.

சமூகம் என்பது மனிதர்கள் இணைந்து வாழ உருவாக்கிய ஒரு கற்பிதம். ஆனால், குட் பேட் அக்லி காட்டும் உலகம் முழுக்க முழுக்க அராஜகவாதத்தால் ஆனது. சட்டம், ஒழுங்கு, போலீஸ் எல்லாமே அங்கே காமெடி பீஸ்கள்.

குட் பேட் அக்லி என்பது வெறும் சினிமாவல்ல; அது ஒரு சமூக உளவியல் பரிசோதனை. மனிதன் எவ்வளவு தூரம் தன் பகுத்தறிவைத் துறந்துவிட்டு, வெறும் பிம்ப வழிபாட்டிலும், அதீத வன்முறைக் காட்சிகளிலும் தன் இருப்பைத் தேடிக்கொள்கிறான் என்பதற்கான வாழும் சான்று.

ஒரு நபர் திரையில் துப்பாக்கியை எடுத்து நூறு பேரைக் சுட்டுத் தள்ளும்போது, தியேட்டரில் இருக்கும் ரசிகர்கள் ஏன் கத்துகிறார்கள்? ஏன் விசிலடிக்கிறார்கள்? ஏனென்றால், அவர்கள் ஆழ்மனதில் யாரையோ சுட்டுக் கொல்ல விரும்புகிறார்கள். அந்த வன்முறையைத் திரையில் பார்க்கும்போது அவர்களுக்கு ஒரு போலி திருப்தி கிடைக்கிறது.

இத்திரைப்படம் ரசிகர்களை ஏன் திருப்திப்படுத்துகிறது என்பது முக்கியமானதொரு கேள்வி.

படத்தில் வரும் நாயகனின் கதாபாத்திரம் எந்தவொரு தார்மீக விதிகளுக்கும், சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டது அல்ல. அது குட் ஆகவும் இருக்கிறது, பேட் ஆகவும் மாறுகிறது, அக்லியாகச் செயல்படவும் யோசிக்காது. அது தன் சொந்த விதிகளைத் தானே உருவாக்கும்.

இதற்குத் தியேட்டரில் இருக்கும் ரசிகன் ஏன் விசிலடிச்சான் குஞ்சாக ஆகிறான் என்றால், ரசிகன் தன் நிஜ வாழ்க்கையில் தனக்கிருக்கும் முழுமையான சுதந்திரத்தைக் கண்டு பயப்படுகிறான் மற்றும் எப்படி எதிர்கொள்வது எனக் குழம்பிப் போகிறான்.

ஒரு நுகர்வுச் சமூகத்தின் அடிமையாக, காலையிலிருந்து மாலை வரை அல்லது இரவிலிருந்து அதிகாலை வரை வேலையின் சட்டகத்திற்குள் அடைபட்டுக் கிடக்கும் ரசிகனுக்கு, தன் விருப்பப்படி வாழும் துணிச்சல் இல்லை.

ஹீரோவின் துப்பாக்கி முனையில் தன் சுதந்திரத்தை வாடகைக்கு எடுத்து, இரண்டரை மணி நேரம் போலி இன்பம் காண்கிறான். இது வாழ்வியல் ரீதியாக ரசிகன் மீது நிகழ்த்தப்படும் ஒரு மிகப்பெரிய துரோகம்.

ஒரு கணக்கு போட்டுப் பார்த்தால், குட் பேட் அக்லி ரசிகர்களைச் சீரழித்ததா? அல்லது ஏற்கனவே ரசிகர்கள் சீரழிந்துதான் போய் இருக்கிறார்கள் என்பதை நினைவூட்டியதா? என்பது விடை காண முடியாத கேள்வி.

படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், நமக்கும் தோன்றும் ஒரே ஒரு ஞானம் இதுதான். இருக்கிறோம். வாழ்கிறோம். இடையில் மசாலா படம் பார்க்கிறோம். அவ்வளவுதான்!

உண்மையை உடைத்துச் சொல்ல வேண்டும் என்றால், கமர்ஷியல் சினிமா என்ற போர்வையில், ரசிகர்களின் பலவீனங்களை மூலதனமாக்கிக் கொண்டு, தங்களை ஏதோ ஒரு பெரிய கலைப் படைப்பை உருவாக்கியதாகக் காட்டிக் கொள்ளும் நாயகன் மற்றும் இயக்குநரின் போலித்தனம் இது.

ஓர் ஓட்டலில் சாப்பாடு பரிமாறுபவர் எப்படித் தன்னை முழுமையாக ஒரு சர்வர் என்று நம்பி நடிக்கிறாரோ, அப்படியே இப்பட நாயகனும் தன்னை ஒரு மாஸ் ஹீரோ என்று நம்பி நடிக்கிறார். இருவருமே தங்களின் உண்மையான இருப்பை மூடி மறைக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் யாருக்கும் எந்தப் பதிலும் சொல்லப்போவதில்லை. ஏனெனில், இந்தத் திரைப்படத்திற்கும் எந்தவொரு உள்ளார்ந்த அர்த்தமும் இல்லை. மக்கள் தியேட்டருக்குள் நுழைந்தார்கள், காசை இழந்தார்கள், வெளியே வந்தார்கள். படம் முடிந்தது. அவ்வளவுதான். பேக் அப்.

*****

No comments:

Post a Comment