17 Jul 2026

ஒரு வரதட்சிணை இயல்

ஒரு வரதட்சிணை இயல்

மனிதர்கள் விலங்குகளைக் கூண்டில் அடைக்கிறார்கள். ஆனால், தங்களை அடைத்துக் கொள்ள அவர்களே உருவாக்கிய ஆகச்சிறந்த, பளபளப்பான கூண்டுக்கு திருமணம் என்று பெயர். இந்தக் கூண்டின் கதவுகளைத் திறப்பதற்கான சாவியாக வரதட்சிணை என்றொரு நாணயம் புழக்கத்தில் இருக்கிறது. இது ஒரு விசித்திரமான நாணயம். இதன் ஒரு பக்கத்தில் பேராசையும், மறுபக்கத்தில் மரணமும் அச்சிடப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள் சில உண்மைகளை நம் முகத்தில் அறைகின்றன.

ஒரு வழக்கறிஞரையும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியையும் கொண்ட ஒரு கனம் கோர்ட்டார் குடும்பத்திலேயே உடலில் ஆறு காயங்களுடன் ஒரு பெண் கல்யாணம் ஆகி சில மாதங்களில் இறக்கிறார். சட்டத்தைக் கொண்டே ஒரு கொலையைத் தற்கொலையாக மாற்ற முயலும் வித்தையைச் சமூகம் வேடிக்கை பார்க்கிறது.

லட்சக் கணக்கில் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம், சொகுசு கார் என்று எதற்கும் அடங்காத பேராசையோடு கேட்டு வாங்கிக் கொண்டு புகுந்த வீட்டிற்கு வந்தப் பெண்ணை மாடியிலிருந்து தள்ளி விட்டு கொல்கிறது இன்னொரு வரதட்சணைச் சமூகம்.

00 பவுன் நகையும் சொகுசு காரும் கொடுத்த பின்பும், எஞ்சிய 200 பவுனுக்காகச் சித்திரவதை செய்யப்பட்டு, திருமணமான 78ஆவது நாளில் விஷம் அருந்தி மாண்டிருக்கும் ஒரு பெண்ணின் கதையும் இந்த வரதட்சணை தேசத்தில்தான் நடக்கிறது.

பெண்கள் கல்வி கற்கிறார்கள், விண்வெளிக்குச் செல்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள். ஆனால், அவர்கள் புகுந்த வீட்டிற்குள் நுழையும்போது, அவர்கள் வெறும் பணம் ஏற்றி வரும் வாகனங்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

இதில் உள்ள பேராசையின் தத்துவம், எல்லாம் உன் மகளுக்குத்தான் என்பதுதான்.

வரதட்சிணை வாங்குபவர்களிடம் ஒரு தனித்துவமான தத்துவம் இருக்கிறது. அவர்கள் அதை வரதட்சிணை என்று அழைப்பதில்லை. அதை இப்படிச் சொல்கிறார்கள், "நாங்கள் எங்களுக்காகவா கேட்கிறோம்? எல்லாம் உங்கள் மகளின் எதிர்காலத்திற்குத்தான். என் மகன் தொழிலை விரிவுபடுத்தினால், சொகுசாக வாழப்போவது உங்கள் மகள்தானே?"

இது மாமியார்கள் உதிர்க்கும் ஆகச் சிறந்த தத்துவார்த்தப் புளுகு. ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துச் சேர்க்கும் மதிப்பை விட, அவளது தந்தை கடன்பட்டு வாங்கும் ஒரு காரின் மதிப்பு புகுந்த வீட்டில் உயர்ந்து நிற்கிறது.

இங்கு மாமியார்களும் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தவர்கள்தான். ஒடுக்கப்பட்டவர்கள், தங்களுக்கு அதிகாரம் கிடைக்கும்போது இன்னும் கொடூரமான ஒடுக்குமுறையாளர்களாக மாறுவார்கள் என்ற உளவியல் தத்துவம் இங்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

தன்னைப்போல் ஒரு பெண்தான் அந்த மருமகள் என்பதை உணர மறுக்கும் மாமியார்கள், பேராசையின் தரகர்களாக மாறுகிறார்கள்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள், இந்தச் சமூகத்தின் மனநல அறிக்கையை நமக்குக் காட்டுகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் 5,737 வரதட்சிணை மரணங்கள் பதிவாகியிருக்கின்றனவாம்.  அதாவது, நாளொன்றுக்குச் சராசரியாக 15 பெண்கள் வரதட்சிணைக் கொடுமையால் தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள்.

இதில் ஊடக வெளிச்சத்திற்கு வருபவை சில துளிகளே. இருண்ட அறைகளுக்குள், குடும்பம் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளைத் தாங்கிக்கொண்டு, சொற்களாலேயே தினசரி செத்துக்கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம், விண்வெளிக்குச் சுற்றுலாப் போகிறோம், செயற்கை நுண்ணறிவுடன் பேசுகிறோம். ஆனால், நம் வீட்டு இளைஞர்கள் இன்னும் தங்களின் கல்வித் தகுதியையும், வேலைவாய்ப்பையும் சந்தையில் ஏலம் போடும் விலைப்படைப் பொருட்களாகவே வைத்திருக்கிறார்கள்.

வீடு, கார், தொழில் விரிவாக்கம் என்ற பெயரில் பெண்ணின் வீட்டாரைப் பிழிந்தெடுப்பது ஒரு பிச்சைக்காரத்தனம் என்பதை இந்த மேம்பட்ட இளைஞர்கள் எப்போது உணரப் போகிறார்கள்?

ஒரு சமூகம் நாகரிகமடைந்துவிட்டது என்பதன் அடையாளம், அது கட்டியெழுப்பும் வானளாவிய கட்டிடங்களோ, அதன் பொருளாதார எண்களோ அல்ல. அச்சமூகத்தின் பெண்கள், தாங்கள் கொண்டுவந்த சீர் போதவில்லை என்ற காரணத்திற்காகத் தூக்கில் தொங்காமலும், மாடியிலிருந்து தள்ளப்படாமலும், விஷம் குடிக்காமலும் அவர்களால் வாழ முடிகிறதா என்பதுதான்.

பேராசையைக் கலாச்சாரம் என்று கொண்டாடுவதை நிறுத்தாத வரை, இந்த வரதட்சிணை அவலம் தொடரவே செய்யும். இந்தச் சமூக அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது சட்டங்களால் மட்டுமல்ல, மனித மனங்களின் பேராசையை அறுவை சிகிச்சை செய்வதன் மூலமே சாத்தியம். அது ஒன்றும் செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சையல்ல, செலவை அளவோடு வைத்துக் கொள்ளச் சொல்லும் போதும் என்ற மன அறுவை சிகிச்சை.

*****

No comments:

Post a Comment