21 Jul 2026

மாற்றமே மானுடத்தின் சாபம் அல்லது வெற்றிக்கான பயணம்!

மாற்றமே மானுடத்தின் சாபம் அல்லது வெற்றிக்கான பயணம்!

உலகமே விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டிருக்கிறது என்று தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும் மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்கிறார்கள்.

நாமும் "மாற்றம் ஒன்றே மாறாதது" என்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, அதே சோபாவில், அதே பழைய பொசிஷனில் படுத்துக் கொண்டு ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மாறிக் கொண்டே இருந்தால் எப்போதுதான் வாழ்வது?

இந்த உலகத்தில் இரண்டு விஷயங்களை நம்மால் கணிக்கவே முடியாது.

ஒன்று, நாளைக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது.

இரண்டு, நம்மைச் சுற்றி என்ன மாற்றம் நடக்கப் போகிறது என்பது.

நாம் ஆசையாக எதிர்பார்த்த மாற்றங்கள் நடப்பதே இல்லை, உதாரணமாக, சம்பள உயர்வு.

ஆனால், நாம் கனவிலும் நினைக்காத மாற்றங்கள் அருணகிரிநாதர் லெவலுக்கு இல்லையென்றாலும், திடீர் லாக்டவுன் போல நம்மை வந்து அணைத்துக் கொள்கின்றன.

இந்த லட்சணத்தில், "மாற்றங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்று இலவச அட்வைஸ் எங்கெங்கும் கிடைக்கிறது.

ஆகவே, வேறு வழியில்லை. மாறித்தான் ஆக வேண்டும்.

"நான் மாறவே மாட்டேன், பழைமைவாதம்தான் பேசுவேன்" என்று அடம் பிடிப்பவர்கள், ஸ்மார்ட்போன் காலத்தில் இன்னும் லேண்ட்லைன் போனில் டயல் செய்ய முயல்பவர்கள் போன்றவர்கள். அவர்களை விடுங்கள், நாம் அடுத்த மாற்றத்திற்குப் போவோம்.

ஒரு காலத்தில் துவைக்கும் கல்லில் துணியை வைத்து, கோபத்தையெல்லாம் சலவைக்கல்லில் காட்டி மாங்குமாங்கென்று துவைத்தார்கள். இப்போது சலவை இயந்திரம் வந்துவிட்டது. துணியை உள்ளே போட்டுவிட்டு, அது துவைத்து முடிக்கும் வரை நாம் நிம்மதியாக அமர்ந்து மாற்றங்களைப் பற்றி யோசிக்கலாம்.

சமையலறையில் விறகடுப்புப் புகை போய், கேஸ் சிலிண்டர் வந்து, இப்போது கரண்ட் அடுப்பு வந்துவிட்டது. சமையல் சீக்கிரம் முடிகிறதோ இல்லையோ, சிலிண்டர் விலை ஏறும் வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகமாக இருக்கிறது!

மனிதர்களின் உடைகளிலும் என்னவொரு புரட்சி!

வேட்டி சட்டைதான் அரசியல்வாதியின் அடையாளம் என்ற காலம் போய், இப்போது பேண்ட் சட்டை, கோட் சூட் என்று கார்ப்பரேட் மேனேஜர்கள் போல வலம் வருகிறார்கள். ஆடைகள் மாறினாலும், வாக்குறுதிகள் மாறுவதில்லை என்பதுதான் இதில் இருக்கும் ஒரே ஆறுதல்.

பெண்கள் பாவாடை தாவணி, புடவையில் இருந்து சுடிதார், ஜீன்ஸ், ஸ்கர்ட் என்று நவநாகரிக மங்கையராக மாறிவிட்டார்கள். தோற்ற மாற்றம் மன மாற்றத்தைத் தருகிறதோ இல்லையோ, துணிக்கடைகளின் கல்லா பெட்டியைத் தீவிரமாக மாற்றியமைத்திருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தைக் கூட இந்த மாற்றம் விட்டுவைக்கவில்லை. சுவர்களில் போஸ்டர் ஒட்டி, காகித நோட்டீஸ் கொடுத்துக் கத்திக் கூச்சல் போட்ட காலம் அவுட். இப்போது அரசியல்வாதிகள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு ஓட்டு கேட்கிறார்கள். செலவும் குறைவு, மக்களும் ஸ்கிப் செய்யாமல் சில சமயம் நெட்டிசன்கள் செய்யும் ட்ரோல்களை ரசிக்கிறார்கள்.

கல்வித் துறையிலும் அமைதியான புரட்சியாகக், கரும்பலகையில் சாக்பீஸால் எழுதிப் போட்ட காலம் போய், இப்போது ஸ்மார்ட் கிளாஸ் வந்துவிட்டது. ஒளியும் ஒலியுமாகத் திரையில் படங்கள் ஓடுகின்றன.

முன்பெல்லாம் பதின்பருவப் பிள்ளைகளின் கண்ணில் மொபைல் போன் படக் கூடாது என்று லாக்கரில் பூட்டி வைத்தார்கள் பெற்றோர். இப்போது, "ஆன்லைன் கிளாஸ் கவனிடா செல்லம்" என்று பெற்றோரே ஐபோனைப் பிள்ளைகளின் கையில் திணிக்கும்படியான ஒரு விசித்திரமான மாற்றத்தை காலம் பரிசளித்திருக்கிறது.

இதெல்லாம் சரியா தவறா?

அதையெல்லாம் யோசிக்க நமக்கு நேரமில்லை, ஏனென்றால் அடுத்த நோட்டிபிகேஷன் வந்து கொண்டே இருக்கிறது.

தனிமனிதர்களின் மனங்களில் ஏற்படும் மாற்றங்கள்தான் சமூக வளர்ச்சிக்கு வித்திடுகிறதாம். மாற்றம் என்பது மாறாதது மட்டுமல்ல, அதுதான் நிரந்தரமானது. இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து, "நான் அப்படியேதான் இருப்பேன்" என்று சொல்பவர்கள், சமூகத்திலிருந்து வெகு தூரம் விலகிப் போய்விடுவார்கள் அல்லது காலாவதியாகி விடுவார்கள்.

எனவே, மாற்றங்களை இரு கரம் நீட்டி வரவேற்போம். வேறு வழியில்லை.

அடுத்த முறை உங்கள் மொபைல் ஆப்பரேட்டர் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் போதும், இதே பக்குவத்துடன் "மாற்றமே வளர்ச்சியின் பாதை" என்று சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான பயணம்!

*****

No comments:

Post a Comment