சீரழித்த சினிமா – 38
பிதாமகன்
மயானத்துச் சாம்பலும் வன்முறைக் காவியமும்
இரண்டாயிரத்து
மூன்றாம் ஆண்டின் அக்டோபர் திங்களில், தீபாவளித் திருநாளின் நல்வாழ்த்துகளோடு, தமிழ்ச்
சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச நாகரிக ஒழுக்கத்திற்கும், மனிதநேய விழுமியங்களுக்கும்
திரையரங்கு வாசலிலேயே பாதாளப் படுகுழிகள் தோண்டப்பட்டன.
தமிழ்
சினிமா அதுவரை காட்டிய "நாயகன் என்பவன் பாசக் காரனாக இருப்பான், சமூகத்தோடு இணைந்து
வாழ்வான்" என்ற ஆகச்சிறந்த சினிமாட்டிக் விதிகளுக்கு ஆதி முதல் அந்தம் வரை ரிவீட்
அடித்து, "மயானத்தில் பிறந்து, பிணங்களின் சாம்பலை உடம்பில் பூசி, பேசத் தெரியாமல்
மனிதர்களைக் கடித்துக் குதறும் ஒரு காட்டுமிராண்டிக்கு, ஒரு லோக்கல் 420 திருடன் பழக்கமானால்
போதும்; அவன் செய்யும் அத்தனை அராஜகங்களும், மனித உடல்களைத் துண்டு துண்டாக்கும் வன்முறைகளும்
உன்னதமான நட்பு என்ற பெயரில் புனிதப்படுத்தப்படும்" என்ற ஒரு புதுவிதமான பிராந்திய
வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, பிதாமகன் திரைப்படத்திற்கு
உண்டு.
நாயகனின்
எந்நேரமும் மிருகத்தனமாக உறுமும் போலிப் பாய்ச்சல் பிம்பமும், லோக்கல் பித்தலாட்ட ஜோல்னா
திருடனின் ஓயாத வாய் மாலமும், இயக்குனரின் வழக்கமான இருண்ட, பிணவாடை வீசும் உலகமும்
சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு மயான பூமி நிலைக்குக் கொண்டு
சென்றது என்பதைச் ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.
இத்திரைப்படம்
தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த வாழ்வியல் நெறிமுறை என்ன தெரியுமா?
நீங்கள்
ஒரு சமூகத்தில் வாழ விரும்பினால், உங்களுக்குப் படிப்போ அல்லது சட்ட ஒழுங்கோ முக்கியமல்ல.
கஞ்சா வியாபாரம் செய்யும் ஒருவனுக்கு நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்; பிறகு ஒரு
420 உங்களுக்கு விசுவாசமானால், அவனைக் கொல்பவனின் தொண்டையைக் கடித்துக் குதறும் அசாத்திய
மிருகத்தனம் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.
இந்தியத்
தண்டனைச் சட்டம், உள்ளூர் காவல் நிலையம் போன்ற குடிமைச் சமூக அமைப்புகள் எல்லாம் இப்படத்தின்
பெரிய இடத்து நிலப்பிரபுக்களுக்கும், இந்த மயானத்து மிருகத்திற்கும் பொருந்தாது.
ஊரின்
பெரும்புள்ளி கஞ்சாத் தோட்டம் நடத்தி, தன் ஆட்களை வைத்து உங்களை மிரட்டினால், போலீஸைக்
கூப்பிடக் கூடாது; தானே ஒரு பிதாமகனாக மாறி, ஒரு நரமாமிசம் தின்னும் மிருகமாக விஸ்வரூபம்
எடுத்துச் சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுக்க வேண்டும். அதுதான் ஒரு சமூகப் பிரஜையின்
ஆகச்சிறந்த அடையாளம் என்று இத்திரைப்படத் தாக்கத்தால் தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.
விளைவு?
இன்றுவரை
நிஜ வாழ்க்கையில் ஒழுங்காக வாழாமல், "நாங்கெல்லாம் நட்புக்காக உசுரையே கொடுப்போம்டா,
இறங்குனா சித்தன் மாதிரி கடித்துக் குதறிடுவோம்" என்று தேவையில்லாமல் முறுக்கிக்
கொண்டு திரியும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறை விரும்பிகளான வால்களின் ஆதிப்புள்ளி இந்தத்
திரைப்படம்தான்.
மனிதனை
மனிதன் கடித்துக் குதறும் உறைபனியூட்டும் வக்கிரத்தையும் கொடூரத்தையும், உணர்ச்சிமயமான,
ஆன்மீகத் தகிப்பு நிறைந்த பின்னணி இசையாலும், பளபளக்கும் தேனி மாவட்டக் கிராமத்து லொகேஷன்களாலும்
மூடி மறைத்து, மிருகத்தனத்தைக் கலை வடிவம் என்று பார்ப்பவனைக் கமர்ஷியலாக ஏமாற்றினார்
இப்பட இயக்குனர்.
நீதிமன்றமோ,
ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு காட்டுமிராண்டி தன் கைகளால்
பழிவாங்கினால் மட்டும்தான் இறுதி நீதி கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான தத்துவத்தை
விற்று, பார்ப்பவனுக்குச் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது
இந்தத் திரைப்படம்.
இத்திரைப்படத்திலும்
பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் விசித்திரமானது. ஒரு பெண் எந்நேரமும் கஞ்சா
கடத்துவதும், ஒரு மயானத்துக் காட்டுமிராண்டியிடம் அனுதாபம் கொண்டு அவனை நேசிப்பதை காதல்
என்றும், இன்னொரு பெண், ஒருவன் லோக்கல் 420 எனத் தெரிந்தும் அவனிடம் வம்படியாகக் காதல்
வளர்ப்பதும், அவனது பிராடுத்தனங்களை முதலில் வெறுத்து, பின்பு கியூட் என்று ரசிப்பதுமாக
ஒரு போலித் துறுதுறுப்புக் கொண்ட பாத்திரமாக காட்டப்பட்டார். பெண்களுக்கு எதிரான வன்முறை
நகைச்சுவையாக்கப்பட்டது இத்திரைப்படத்தின் மூலம் நேர்ந்த அவலம். பெண்களின் சுயம், கல்வி
அல்லது ஆளுமை எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவர்களின் முதிர்ச்சியற்ற சேட்டைகளையும்,
வறுமையையும் ரொம்பக் கமர்ஷியலாகக் காட்டி ஏமாற்றியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த
கமர்ஷியல் தந்திரம்.
பிதாமகன்
பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகரனுக்கு தேசிய விருதையும் ஆக்சன் ஹீரோ
நாற்காலியையும் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு
போய் நிறுத்தியது?
மனிதன்
மிருக நிலையிலிருந்து சிந்திக்கும் நிலைக்கு உயர்ந்ததே மொழி கண்டுபிடித்த பிறகுதான்
என்று மானுடவியல் சொல்கிறது. ஆனால் இப்படத்தன் இயக்குனரோ, நாயகனுக்கு மொழி தேவையில்லை,
அவன் கத்தினால் போதும்; கடித்தால் போதும்; கஞ்சா விற்றால் போதும்; அவனுக்குள் ஓர் உன்னதமான
ஆன்மா இருக்கும் என்று நம்ப வைத்தார்.
படத்தல்
நாயகன் பேச மாட்டார். சீறுவார். கடிப்பார். இதைப் பார்த்துவிட்டு, வீடுகளில் தங்களுக்குள்
பேசிக்கொள்ளத் தெரியாத கணவன்மார்களும், பிள்ளைகளும், "நான் பிதாமகன் மாதிரி கசப்பானவன்,
ஆனா பாசக்காரன்" என்று தங்களைத் தாங்களே நியாயப்படுத்திக் கொள்ளும் ஒரு வகை உளவியல்
நோய் பரவ, பேச மறுப்பது ஒரு மாபெரும் ஆன்மீகத் தகுதி எனச் சமூகம் தப்பாகப் புரிந்துகொண்டது.
மனிதன்
என்பவன் பல ஆயிரம் ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து
செதுக்கி வைத்த ஒரு சமூகப் பிராணி. அவனுக்கு நாகரிகம், உடை, மொழி, கலாச்சாரம், பண்பாடு
எனச் சொல்லித் தந்த பிறகு, இப்படத்தின் இயக்குநர் அவை எல்லாவற்றையும் அதை ஒரே அடியில்
அடித்து சுக்கு நூறாக உடைத்தார். சுடுகாட்டில் பிணங்களோடு பிணமாய் வளரும் ஒரு ஜீவனுக்குள்
எந்த சமூகக் கட்டுப்பாடும் கிடையாது என்றும், அவன் பேசும் மொழி அமானுஷ்யமானது என்றும்
நம்ப வைத்து, அந்த அசுர சக்தியின் கோரத்தனத்தைக் காட்டித் தியேட்டரில் இருந்த ரசிகர்களின்
அடிமனதில் தூங்கிக் கொண்டிருந்த காட்டுமிராண்டித்தனத்தைக் கிளறிவிடக் காரணமானது இத்திரைப்படம்.
இத்படத்தின்
இறுதிக்காட்சியில் காட்டப்படும் கொடூரமான வன்முறையும், பழிவாங்கலும் பலவீனமான மனநிலை
கொண்ட பார்வையாளர்களுக்குப் பெரும் மன உளைச்சலையும், அதிர்ச்சியையும் தந்ததை மறுக்க
முடியாது. மக்களுக்கு எப்போதும் வன்முறை மேல் ஒரு ரகசியக் கவர்ச்சி உண்டு. பிதாமகன்
செய்த பெரிய தவறு, வன்முறையை நியாயப்படுத்தியது அல்ல, அதை அழகுபடுத்தியது. படத்தின்
நாயகன் சித்தன் அடிக்கும்போது தியேட்டரில் விசில் பறந்தது.
நியாயப்படி,
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மிருகத்தனமாகக் கடிப்பதையும் அடிப்பதையும் பார்த்துப் பயந்திருக்க
வேண்டும். ஆனால், சமூகம் அதை ஹீரோயிசம் என்று கொண்டாடியது. எம்பதி எனும் பிறர் வலியை
உணர்தல் என்ற உணர்வை விட, அக்ரஷன்தான் பவர்புல் என்ற தவறான உளவியல் பதிவை இத்திரைப்படம்
இளைஞர்கள் மனதில் விதைத்தது.
பிதாமகனில்
வன்முறை என்பது கதையின் போக்கிற்குத் தேவையான ஒரு புள்ளியில் வந்து போவதில்லை. அதுவே
கதையாக, அதுவே காட்சியாக, அதுவே மொத்தப் பிரதியின் ஆன்மாவாகப் பிரதிபலித்தது. மரணமும்,
சித்திரவதையும், ரத்த சகதியும் மிகக் குதூகலத்தோடு காட்சிப்படுத்தப்பட்டது. விளிம்பு
நிலை மனிதர்கள் என்றாலே வன்முறையாளர்களாகவும், போதைப்பொருள் கடத்துபவர்களாகவும் மட்டும்தான்
இருப்பார்கள் என்ற ஒரு தவறான பிம்பத்தைப் பொதுப்புத்தியில் விதைக்கவும் இத்திரைப்படம்
வழிவகுத்தது.
தமிழனுக்கு
இயல்பாகவே சோகப் படங்களின் மீது ஓர் அலாதிப் பிரியம் உண்டு. அதிலும் பிதாமகன், உலகத்தில்
நல்லவர்களுக்கு இடமே இல்லை, நீ நல்லவனாக இருந்தால் சுடுகாட்டில் இரு, அல்லது சுடுகாட்டுக்கு
போ என்ற அவநம்பிக்கை வாதத்தை விதைத்தது. படத்தின் திரைக்கதையாக்கம் ஏற்படுத்திய தாக்கம்,
தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் பலரது அன்றாடச் சந்தோஷங்களைக் காவு வாங்கியது.
வாழ்க்கையின் மீதான ஒருவித ஒவ்வாமையையும், பிணங்களின் மீதான ஒரு விசித்திரக் கவர்ச்சியையும்
அது பார்வையாளன் ஆழ்மனதில் பதுக்கி வைத்தது.
மனிதர்களுக்கிடையேயான
உறவுகளில் உள்ள மென்மையும், தியாகமும், பரஸ்பர நம்பிக்கையும் மிக மலிவானதாக, அல்லது
முட்டாள்தனமாகப் பிதாமகன் திரைப்படத்தில் நையாண்டி செய்யப்பட்டன. சமூகத்தின் மீது,
சக மனிதனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையைத் தர வேண்டிய ஒரு படைப்பு, எல்லாவற்றின்
மீதும் ஒரு தீராத அவநம்பிக்கையையும் கசப்பையும் மட்டுமே இத்திரைப்படம் மூலமாகப் பார்வையாளனின்
மனதில் மிச்சம் வைத்துச் சென்றது.
பிதாமகன்
தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்த மிக மோசமான பாடம் என்னவென்றால், நீங்கள் நாகரிகமாக
உடை உடுத்தி, நியாயமாக வாழ்ந்தால், வில்லனால் கொல்லப்படுவீர்கள். நீங்கள் அழுக்காக
இருந்து, கஞ்சா விற்று, பேசாமல் இருந்தால், உங்களைக் கொண்டாட ஒரு தேசிய விருது குழுவோடு
காத்துக் கொண்டிருக்கும் என்பதுதான். இப்படி ஒரு பொதுபுத்தியோடு சமூகம் உருப்படாமல்
போனதில் இப்பட இயக்குநரின் பங்கு அளப்பரியது!
இத்திரைப்படத்திற்கு
முன்பு வரை தேனி, மதுரை மாவட்டங்கள் ஆன்மீகத்திற்கும், விவசாயத்திற்கும், விருந்தோம்பலுக்கும்
புகழ்பெற்ற அமைதியான ஊர்கள். ஆனால், அதற்குப் பிறகுதான், அங்கெல்லாம் மனிதர்களை வெட்டிப்
புதைப்பதும், கஞ்சா வளர்ப்பதும்தான் முதன்மைத் தொழில் என்கிற பொதுப்புத்தி சமூகத்தில்
விதைக்கப்பட்டது.
பிதாமகன்
தமிழ் இளைஞர்களைத் தங்களின் நிஜமான சராசரி நாகரிக வாழ்க்கையை வெறுக்கக் கற்றுக்கொடுத்தது.
ஒவ்வொரு இளைஞனும் தனக்குள்ளே ஒரு காட்டுமிராண்டியை ஒளித்து வைத்துக் கொண்டு, வெளியே
ஒரு சாதுவான மனிதன் போல வாழ்ந்து மடிய வேண்டிய சினிமாட்டிக் சாபத்தைத் தந்துவிட்டுச்
சென்றது!
படத்தின்
இறுதியில் சித்தன் எடுக்கும் வன்முறைத் தேர்வான வில்லனை வேட்டையாடுவது என்பது அவனது
முழுமையான இருத்தலியல் கோபத்தின் வெளிப்பாடு. ஆனால், அந்த வன்முறை அவனுக்கு விடுதலையைத்
தரவில்லை; மாறாக, மீண்டும் அவனை எவராலும் புரிந்துகொள்ள முடியாத ஓர் இருண்ட தனிமைக்கே
கொண்டு சேர்த்தது.
வாழ்க்கையே
ஏற்கனவே கொஞ்சம் இருட்டாகத்தான் இருக்கிறது. அதில் சினிமாவும் இன்னும் கொஞ்சம் கரியைப்
பூச வேண்டுமா என்ற கேள்விக்கு இத்திரைப்பட இயக்குநர்தான் பதில் சொல்ல வேண்டும்.
மயானத்தில்
வாழ்வதுதான் ஆகச்சிறந்த தத்துவம் என்றும், இளம் காத்து வீசுது என்ற மெல்லிசைப் பாட்டைக்
கேட்டால் அத்தனை கொடூரக் கொலைகளையும் ரசிக்கலாம் என்றும், பிணவாடையும் வன்முறையும்
கலந்ததுதான் உன்னதமான தமிழ் சினிமா என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற
சண்டைக்காரச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த
வரலாற்றுச் சீரழிவு!
*****

No comments:
Post a Comment