9 Jul 2026

ரௌடியிஸத்தின் கார்ப்பரேட் புள்ளி!

சீரழித்த சினிமா – 36

நாயகன்

ரௌடியிஸத்தின் கார்ப்பரேட் புள்ளி!

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஏழாம் ஆண்டின் அக்டோபர் திங்களில், தீபாவளித் திருநாளின் கொண்டாட்டங்களுக்கு நடுவே, தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த ஆகச்சிறந்த சட்ட விழிப்புணர்வுக்கும், ஜனநாயக அமைப்புகளின் மீதான நம்பிக்கைக்கும் திரையரங்கு வாசலிலேயே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பியது நாயகன் திரைப்படம்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "சட்டத்தைக் கையில் எடுப்பவன் குற்றவாளி, காவல் துறை அவனைக் கூண்டில் ஏற்றும்" என்ற அடிப்படை சமூக நெறிமுறைகளை அடியோடு பட்டி டிங்கரிங் பார்த்து, "தன் தந்தையைக் கொன்ற போலீஸ்காரனை ஒரு சிறுவன் நடுரோட்டில் வைத்துக் குத்திக் கொன்றுவிட்டு மும்பைக்கு ஓடினால் போதும்; அங்கே அவன் பெரிய தாதாவாக மாறி, கடத்தல் தொழிலை நடத்தி, ஏழைகளுக்குப் பிரியாணி போட்டு, போலீஸாரைப் பந்தாடினால் அவன் ஒரு இரட்சகன்" என்ற ஒரு புதுவிதமான வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, நாயகன் திரைப்படத்திற்கு உண்டு.

"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை" என்ற தட்டையான ஆபத்தான போலித் தத்துவமும், இயக்குனரின் வழக்கமான நிழலும் ஒளியும் கலந்த இருண்ட உலகமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு நிழல் உலகக் கூண்டிற்குள் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டுச் சமூகத்திற்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த நீதி நெறிமுறை என்ன தெரியுமா?

நீங்கள் ஓர் ஏழை எளிய மக்களின் தலைவனாக மாற விரும்பினால், உங்களுக்குச் சட்டத்தின் மீதோ அல்லது நீதிமன்றங்களின் மீதோ நம்பிக்கை இருக்க வேண்டியதில்லை. நீங்கள் கத்தியையோ துப்பாக்கியையோ தூக்க வேண்டும்; கடத்தல் பிசினஸ் செய்ய வேண்டும்; உங்களுக்குப் பிடிக்காத அதிகாரிகளைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்பதுதான்.

இந்தியத் தண்டனைச் சட்டம், நீதிமன்றங்கள் போன்ற குடிமைச் சமூகத்திற்கான அமைப்புகள் எல்லாம் இப்பட நாயகனுக்குப் பொருந்தாது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி வந்து சட்டத்தை நிலைநாட்ட முயன்றால், சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுக்க வேண்டும். "நீங்க நல்லவரா கெட்டவரா?" என்று பேரன் கேட்கும் உருகும் காட்சியை அரங்கேற்றி, தான் செய்த அத்தனை சட்டவிரோதக் குற்றங்களையும், கொலைகளையும் புனிதப்படுத்த வேண்டும். அதுதான் ஒரு தலைவனின் ஆகச்சிறந்த அடையாளம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்காமல், "நான் நாலு பேருக்கு நல்லது செய்யத்தான்டா சட்டத்தை மீறுறேன்" என்று தேவையில்லாமல் முறுக்கிக் கொண்டு திரியும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறை விரும்பிகளான வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

நாயகன் படம், ஒரு தனிநபர் நினைத்தால் ஒட்டுமொத்த மும்பை நகரத்தின் சட்டத்தையே தன் கையில் வைத்திருக்கலாம் என்ற அராஜகத்தை மரியாதை மற்றும் பெரியவர் என்ற லேபிளோடு மாஸ் கமர்ஷியலாக விற்றது.

உறைபனியூட்டும் மாபியா வழிபாட்டு வக்கிரத்தை, இசைஞானியின் உன்னதமான உணர்ச்சிமயமான பின்னணி இசையாலும், பளபளக்கும் கேமரா கோணங்களாலும் மூடி மறைத்து, அவர் தப்பு செய்ய மாட்டார், தட்டிக் கேப்பார் என்று பார்ப்பவனை ஏமாற வைத்து குடிமைச் சமூக விதிகளைக் குப்பையில் தள்ளினார் இப்பட இயக்குனர்.

நீதிமன்றமோ, ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு தாதா நினைத்துத் தன் வீட்டு வாசலில் பஞ்சாயத்து கூட்டினால் மட்டும்தான் நீதி கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான தத்துவத்தை விற்று, பார்ப்பவனுக்குச் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இந்தத் திரைப்படம்.

நாயகன் ஆஸ்கார் வரை பரிந்துரைக்கப்பட்டு, டைம்ஸ் இதழின் பட்டியல்களில் இடம்பிடித்து, சில தேசிய விருதுகளை வென்று, அதன் நாயகனை ஒரு உலகநாயகன் நாற்காலியில் அமர வைத்து, அதன் இயக்குநரை ஒரு மாஸ்டர் இயக்குனர் அந்தஸ்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

நாயகன் திரைப்படத்திற்கு முன்பு வரை தாராவி என்பது உழைப்பாளர்களுக்கும், ஏழைத் தமிழர்களுக்கும் புகழ்பெற்ற ஓர் உழைப்பு பூமி. ஆனால், அதற்குப் பிறகுதான், அங்கெல்லாம் தாதாக்கள் பிறக்கிறார்கள், கள்ளக்கடத்தல்தான் பிரதானத் தொழில் என்கிற பொதுப்புத்தி சமூகத்தில் விதைக்கப்பட்டது.

ஒருவன் நாலு பேருக்கு நல்லது செய்தால், அவன் சட்டத்தைக் கையில் எடுக்கலாம், கடத்தல் தொழில் செய்யலாம், கொலை செய்யலாம் என்ற ராபின்ஹுட் சிந்தனையை இத்திரைப்படம் சமூகத்தின் ஆழ்மனதில் விதைத்தது.

சட்டம், காவல்துறை, நீதிமன்றம் ஆகிய நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைத் தகர்த்து, டான் எனப்படும் தனிமனித அதிகாரமே சமூகத்தைக் காப்பாற்றும் என்ற ஆபத்தான மாயையை உருவாக்கியது.

வன்முறை என்பது அருவருப்பானது அல்ல; அது தர்மத்தைக் காக்க எழும் ஒரு கம்பீரமான ஆயுதம் என்கிற இப்படம் உருவாக்கிய பிம்பம், பின்னாளில் வந்த நூற்றுக்கணக்கான ரவுடியிசம் பேசும் படங்களுக்குத் தாய்வீடாக அமைந்தது.

"நான் செய்வது தப்புதான், ஆனா நல்லதுக்காகச் செய்றேன்" என்று தங்களின் சொந்தத் தவறுகளுக்கும், ஈகோவிற்கும் நியாயம் கற்பிக்கும் ஒரு மனநிலையை சாமானியர்களிடம் இத்திரைப்படம் உருவாக்கியது.

சோகத்தை வன்முறையாக மாற்றுவதும், வன்முறையை சோகமாக மாற்றுவதுமான ஒருவகை மெலோடிராமாடிக் உளவியலை ரசிகர்களுக்குப் பழகச் செய்தது.

பிரெடெரிக் நீட்சேவின் அதிமானுடர் என்பவன், சமூகத்தின் பொதுவான விதிகளைத் தாண்டி, தனக்கான சொந்த விதிகளை உருவாக்குபவன். அப்படி ஒரு பிம்பமாகவே கட்டமைக்கப்பட்டதுதான் படத்தின் நாயகன் பாத்திரம். இத்தகைய நாயக வழிபாடு, பார்ப்பவர்களிடம் ஒருவித போலிப் பாதுகாப்பு உணர்வையும், அதே சமயம் தங்களின் சொந்தக் கையாலாகாத்தனத்தையும் உருவாக்க காரணமாகியது.

சமூகம் தங்களுக்கு இழைக்கும் அநீதிகளை எதிர்த்து தாங்களாகவே ஜனநாயக வழியில் போராடுவதற்குப் பதிலாக, "நமக்காக ஒரு நாயகன் வருவான், அவன் எல்லாவற்றையும் சரிசெய்வான்" என்ற மெசியா மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட, இது சாமானிய மனிதனின் இருத்தலியல் சுதந்திரத்தையும், செயல்படும் திறனையும் முடக்க துணை போனது இத்திரைப்படம்.

துப்பாக்கிகள், நிழலுலக அதிகாரம், கட்டப்பஞ்சாயத்து ஆகியவை வீரத்தின் அடையாளங்களாகக் காட்டப்பட்டு, வறுமையிலிருந்து தப்பிக்க உழைப்பை விட, வன்முறை கலந்த குற்ற உலகமே எளிய வழி என்ற எண்ண ஓட்டத்தை எளிய மக்களிடம் இத்திரைக்கதையாக்கம் உருவாக்கியது.

இப்படத்தின் பெயரே நாயகனாக இருந்தாலும், இப்பட நாயகனின் இருத்தலியல் தேடலான தனது தந்தையின் மரணத்திற்கான பழிவாங்கல் மற்றும் தாராவியைக் காப்பது போன்றவை இறுதியாக ஒரு மாபெரும் வன்முறைக் சாம்ராஜ்யமாகவே முடிந்து, இது சமூகத்தின் கீழ்மட்டத்து இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்மாதிரியையே வழங்கியது.

நல்லது × கெட்டது என்ற எல்லைகளை மங்கலாக்குவதன் மூலம், சமூகம் எதை நோக்கி நகர வேண்டும் என்ற தார்மீகக் குழப்பத்தை இந்தப் படம் பார்வையாளர்களிடம் உருவாக்கி, தீமை செய்வதன் மூலமே நன்மையை நிலைநாட்ட முடியும் என்ற முரண்பாடான உளவியலை நிலைநாட்டி, சமூகத்தில் குற்ற உணர்வை குறைத்து, வன்முறையை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மையை இத்திரைப்படம் வளர்த்தது.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு குற்றவாளியை நம் வீட்டு வரவேற்பறைக்கே அழைத்து வந்து, அவனுக்குப் பாலாபிஷேகம் செய்து, "நீங்க நல்லவரா கெட்டவரா?" என்று கேட்க வைத்ததுதான் இந்தத் திரைப்படம் நிகழ்த்திய ஆகச்சிறந்த சைக்காலஜி மனிபுலேஷன்.

நிஜ உலக தாதாக்கள் தங்களைச் சமூக சேவகர்களாகக் காட்டிக்கொள்ளும் போலித்தனத்திற்கு இந்தத் படம் ஒரு டெம்ப்ளேட்டாகவே ஆகிப்போனது.

படத்தில் நாயகன் செய்யும் கடத்தல், கொலை, கட்டப்பஞ்சாயத்து போன்ற எல்லாக் குற்றங்களுக்கும் பின்னால் ஒரு சென்டிமென்ட் நியாயம் கற்பிக்கப்படும். இதைப் பார்த்த சராசரி மனிதனின் மூளை, "தப்பு செஞ்சாலும் அதுக்குப் பின்னாடி ஒரு நியாயம் இருந்தா போதும் போல!" என்று பழகிக்கொண்டது.

நாயகன் விதைத்த உளவியல் பாதிப்புதான் இன்றுவரை தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்களை ஒரு வழிபாட்டுப் பொருளாக வைத்திருக்க உதவுகிறது. நாயகன் தன் மகனை இழக்கிறான், நிம்மதியை இழக்கிறான் என்பது கதையின் முடிவாக இருந்தாலும், திரையரங்கை விட்டு வெளியே வரும் ரசிகனின் மனதில் தங்கியது அந்த மாஸ் இமேஜ் மட்டும்தான்.

ஆக மொத்தத்தில், காட்பாதர் படத்திலிருந்து ஒரு ஸ்கெட்ச் எடுத்து, அதற்குள் வரதராஜ முதலியாரின் வாழ்க்கையைத் திணித்து, அதை கேமராக்களின் கோணங்களுக்குள் கொண்டு வந்து விட்டால், தாதாக்களின் வாழ்க்கையைத் தோதாகக் கொண்டாடலாம் என்ற புது டிரெண்டை வில்லத்தனமாக ஆரம்பித்து வைத்தது நாயகன்.

சட்டத்தை மீறிச் செய்யும் கடத்தல்கள்தான் வீரம் என்றும், தென்பாண்டிச் சீமையிலே என்று பாடினால் அத்தனை கொலைகளையும், துரோகங்களையும் ரசிக்கலாம் என்றும், மும்பை நிழல் உலகக் கலாச்சாரமும் வன்முறையும் கலந்ததுதான் உன்னதமான தமிழ் சினிமா என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

No comments:

Post a Comment