9 Jul 2026

ராகவனின் ரேடியோவும் கௌடபாதரின் வேதாந்தமும்!

ராகவனின் ரேடியோவும் கௌடபாதரின் வேதாந்தமும்!

வழக்கம் போல ஜெயமோகன் ஒரு மிடில் கிளாஸ் மிலிட்டரி ராகவனைப் பிடித்து, பர்மியக் காட்டுக்குள் கொண்டு போய், இருநூறு அடி பள்ளத்தில் தள்ளி, மண்டையோட்டை உடைத்து, கடைசியில் வழக்கம் போல வேதாந்தத்தை இழுத்து தங்கம்தான் ஆத்மா என்று முடித்திருக்கிறார்.

ஜெயமோகனின் கூற்றுப்படி, கேரளாவில் நூலகங்கள் அறிவு வளர்க்கப் பயன்படுகிறதோ இல்லையோ, குடிகாரர்கள் ஹேங்கோவர் தீர தங்கும் விடுதியாகப் பயன்படுகின்றன என்பது ஒரு புதிய சமூகவியல் கண்டுபிடிப்பு.

நண்பர் குடித்ததால் அவர் வீட்டிற்குப் போக விரும்பவில்லை என்கிறார் ஜெமோ, சரி. ஆனால் 70 வயது ராகவனுக்கு அதே நூலகத்தில் என்ன வேலை? அவரும் அதே வேலையைத்தானே செய்கிறார். அவர் அங்கே வாசிப்புப் பழக்கத்தை மதுவோடு கலக்க வந்திருக்கிறார் போலும். உலகப்போர் நினைவுகளை விட, அந்த நூலகத்தில் அன்று இரவு எத்தனை குவாட்டர்கள் காலி செய்யப்பட்டன என்ற கணக்குதான் எனக்கு சுவாரஸ்யமாகத் தெரிகிறது.

ராகவன் சொல்கிறார், "துப்பாக்கியெல்லாம் கொடுத்தார்கள். ஆனால் நான் ஒரு முறைகூடச் சுட்டதாக நினைவில்லை."

இரண்டாம் உலகப்போரில் பர்மா காட்டுக்குச் சென்று, துப்பாக்கியைத் தொடாமல், வெறும் மஞ்சள் கொடியை மூங்கிலில் கட்டி ஆட்டிக்கொண்டிருக்க இவருக்கு பிரிட்டிஷ் அரசு மாதம் ஐந்து ரூபாய் சம்பளம் கொடுத்திருக்கிறது! பிரிட்டிஷ் காரர்களுக்கு எவ்வளவு பெருந்தன்மை! ஒருவேளை ராகவன் எதிரிகளைத் தன் தொப்பியைக் காட்டியே பயமுறுத்தியிருப்பாரோ என்னவோ.

இருநூறு அடி ஆழமுள்ள, விரல் நுழையுமளவுக்கு இடுங்கலான பாறை வெடிப்புக்குள் தலைகீழாகவோ நேராகவோ செருகிக் கிடக்கிறார் ராகவன். கை, கால் உடைந்திருக்கிறது. மரண அவதி. அந்த நிலையிலும் அவர் செய்த முதல் காரியம், இடுப்பிலிருந்த ரேடியோவை எடுத்து ஆன் செய்து பாட்டு கேட்டது அல்லது சத்தம் போட்டது.

பிரிட்டிஷ் ஆர்மி இவருக்குக் கொடுத்த ரேடியோ எவ்வளவு வாட்டர் புரூப், ஷாக் புரூப் என்று பாருங்கள்! 200 அடி பள்ளத்தில் விழுந்தும் அது ரீங்காரம் பாடி, இவரைக் காப்பாற்றியிருக்கிறது. சோனி நிறுவனத்தினர் இதைக் கேட்டால் இப்போதே ராகவனின் ஆன்மாவுக்கு ராயல்டி தருவார்கள்.

ராகவனின் கனவுகள் எல்லாம் அக்மார்க் 916 தங்கம்.

ஆற்றில் அள்ளிய தண்ணீர் தங்கம்.

மேலிருந்து விழுந்த முயல் தங்கம்.

கையில் எடுத்த துப்பாக்கி தங்கம்.

கடைசியில் சிவந்த பையிலிருந்து வெளிவந்த மான் குட்டி மோப்பம் பிடித்த கல்லும் தங்கம்!

இது திருஷ்ணையோ அல்லது ஆத்மாவின் இயல்போகிடையாது. தன் அக்காவுக்கு 50 ரூபாய்க் கடனில் நல்ல தங்கம் வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு வந்த ஓர் ஏழை ராணுவ வீரனின் கில்ட் கான்சியஸ். மாத்ருபூமி பத்திரிகைக்காரர்கள் இந்தக் கதையை ஏன் பிரசுரிக்கவில்லை என்பது இப்போது புரிகிறது. அவர்களுக்கு வேதாந்தத்தை விட பவுன் விலை நிலவரம் முக்கியமாக இருந்திருக்கும்.

கடைசியில் இந்தக் கதையை அப்படியே கொண்டு போய் குரு நித்யாவின் மாணவர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் கொட்டுகிறார் ஜெமோ. அவரும் சளைக்காமல் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி, துரியம் என்று ஆன்மிகச் சொற்களை அள்ளி வீசுகிறார்.

பிராய்டை இழுக்க வேண்டாம். இது மிக எளிய மனிதனின் ஸ்ட்ரெஸ் விளைவித்த சைக்கோ சோமாடிக் கனவுகள். நிறைவேறாத ஆசை, மரண பயத்தின் விளிம்பில் தங்கமாக உருமாறுகிறது. சிம்பிள்.

ஆனால், கதை அங்கே முடிந்திருந்தால் அது நல்லதொரு உலகப்போர் நாவலின் அத்தியாயம். ஆனால், ஜெமோ சும்மா இருக்க மாட்டாரே! பன்னிரண்டு வருடங்கள் கழித்து ஸ்ரீகிருஷ்ணாவிடம் போய் ஏன் தங்கம்? என்று கேட்கிறார்.

ஒருத்தன் மண்டையில கால் லிட்டர் தண்ணி நிக்கிற அளவுக்குப் பள்ளம் விழுந்து, ஐம்பது வருஷமாக தலைவலியால் அவதிப்படுகிறான் என்றால்,  அவனுக்கு முதலில் சைக்கியாட்ரிஸ்ட்டும், நியூரோ சர்ஜனும்தான் தேவை. அதை விட்டுட்டு, அவரோட மண்டை ஓட்டுப் பள்ளத்தை ஆத்மாவின் பொன்வரி என்று கவிதை பாடுவது என்ன நியாயம்?

அப்புறம், பயாலஜிக்கலாக இது சாத்தியமா மிஸ்டர் ஜெயமோகன்? மண்டை ஓடு இல்லாமல், மூளையை வெறும் தோல் மட்டும் பாதுகாத்துக் கொண்டு ஐம்பது வருடங்கள் தலைவலியோடு வாழ முடியுமா? மெடிக்கல் மிராக்கிள் என்றுதான் சொல்ல வேண்டும். அனிமேஷன் படங்களில் வருவது போன்ற ஒரு விசுவல்.

ராகவனின் மண்டையில் இருக்கும் அந்தப் பள்ளத்தில் வெயில் படக்கூடாது என்பதுதான் உண்மை. ஆனால் நம் வேதாந்திகளோ, அந்தப் பள்ளத்தில் வேதாந்த வெளிச்சத்தைப் பாய்ச்சி அதை ஒரு தத்துவக் கிணறாக மாற்றிவிடுகிறார்கள்.

ராகவன் ஒரு நல்ல மனிதர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவசியமே இல்லாமல் ஓர் ஏழை மனிதனின் வறுமையையும், போர்க்கால மன உளைச்சலையும் மாண்டூக்ய உபநிடதம் வரை கொண்டு சென்று பஞ்சதஸியோடு சுட்டிணைப்பதுதான் இந்த தமிழ் இலக்கியவாதிகளின் ஆகப் பெரிய விசித்திரம்.

சுருக்கமாகச் சொன்னால், ராகவன் கண்டது தங்கக் கனவு; எழுத்தாளர் நமக்குக் காட்டியதோ வேதாந்தப் பம்மாத்து!

*****

No comments:

Post a Comment