வஞ்சிர மீனும் விவேகசூடாமணியும் – ஒரு மைண்ட் வாய்ஸ்!
பொதுவாக
நமது ஊர் எழுத்தாளர்கள் காசர்கோடு, திருவனந்தபுரம், நாகர்கோவில் என்று முக்கோண வடிவில்
பயணம் செய்யத் தொடங்கினாலே, வாசகர்கள் உளவியல் மற்றும் தத்துவம் என்ற இரண்டு ஏவுகணைகளுக்குத்
தயாராகி விட வேண்டும்.
தொலைபேசித்
துறை, காவல்துறை, சட்டத்துறை, இலக்கியத்துறை என சகல துறைகளையும் ஒரு வஞ்சிர மீன் குழம்புக்குள்
போட்டுத் தாளித்திருக்கும் ஜெயமோகனின் கட்டுரையிலிருந்து நாம் இதைத்தான் அனுமானிக்க
முடிகிறது.
கட்டுரையின்
முதல் பாதியில் வரும் அந்தப் பலி ஆடான கணவன், உலக மகா தத்துவவாதி. அவனுக்கு அழகிருக்கிறது,
வருமானம் இருக்கிறது, ஆனால் அடுத்தவர் தன்னை மதிக்க வேண்டும் என்ற தீராத அரிப்பு இருக்கிறது.
சம்பவத்தன்று
நடந்தது என்னவென்றால், அவன் நெய்மீன் கேட்கிறான்; மனைவி வங்கடை சமைக்கிறாள்.
விளைவு
முதலில் சாப்பாட்டுத் தட்டு பறந்து பிறகு, குக்கர் மனைவியின் மண்டையில் இறங்குகிறது.
இதற்குப்
பெயர்தான் இருத்தலியல் பதற்றம் என்று ஜெமோ லேபிள் ஒட்டுகிறார். உண்மையில் இது அது கிடையாது;
பசி நேரத்தில் நெய் மீன் கிடைக்காததால் வந்த வெறும் புட் க்ரேவிங் கோபம், கூடவே சற்றே
வீங்கிய ஆண் ஈகோ.
அவள்
தன்னை மதிக்கவில்லை என்று அவன் கற்பனை செய்துகொண்டே இருந்தானாம். ஒரு கிலோ தீயைத் தின்றவன்,
பிறகு பத்து கிலோ தீயைத் தின்றானாம். இத்தனை கிலோ தீயை ஜீரணிக்க அவனுக்கு எப்படிப்பட்ட
வயிறு இருந்திருக்க வேண்டும் என்பதுதான் ஒரு நரம்பியல் வாசகராக எழும் முதல் சந்தேகம்.
அடுத்ததாக,
இந்தியாவின் மாபெரும் சட்டமேதை வி.ஆர்.கிருஷ்ணய்யர். சுப்ரீம் கோர்ட்டில் முற்போக்குத்
தீர்ப்புகளை வழங்கி விட்டு, ஓய்வு நேரத்தில் மாந்திரீகரைப் பார்க்கப் போகிறார். காரணம்?
முப்பத்து மூன்று ஆண்டுகள் கூடவே இருந்த மனைவி ஆவியாக வந்து பேசுகிறாராம்.
பேராசிரியர்
குமாரபிள்ளை சொல்கிறார், "மனம் தர்க்கப்புத்தியைத் தன் ஆடையாக அணிந்துகொள்ளும்,
குதிரையாகப் பயன்படுத்தும், நாய் போல வாலாட்ட வைக்கும்."
அபாரமான
ஒப்பீடு! ஒரு சட்டமேதையின் மூளையை நாய் என்றும், குதிரை என்றும் மாற்றி மாற்றி வர்ணிக்கும்
பேராசிரியரின் தைரியத்தைப் பாராட்ட வேண்டும்.
ஒருவேளை
அந்தத் தீர்ப்புகளையெல்லாம் கிருஷ்ணய்யரின் மனைவிதான் ஆவியாக வந்து டிக்டேட் செய்தாரோ
என்னவோ, ஆர்.வெங்கட்ராமனுக்குத் தெரிந்திருந்தால் இதையே ஒரு தேர்தல் பிரசார யுக்தியாகப்
பயன்படுத்தியிருக்கலாம்.
கட்டுரையின்
கிளைமாக்ஸில் ஆதிசங்கரரின் விவேகசூடாமணி உள்ளே நுழைகிறது. மனமன்றி அறியாமை வேறில்லை.
மனசுதான்
அறியாமை, மனசு நினைப்பதெல்லாம் பொய் என்று சங்கரர் அன்றே சொல்லிவிட்டார்.
அப்படியென்றால்,
நாற்பது ஆண்டுகளாக மனம் என்னும் மாபெரும் அமைப்பைப் பற்றி மட்டுமே பக்கம் பக்கமாக நாவல்களும்
கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருக்கும் நம் எழுத்தாளர்கள், உண்மையில் எதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்?
தங்கள்
சொந்த அறியாமையைத்தான் இவ்வளவு அழகாகத் தொகுத்து, பைண்டிங் செய்து விற்கிறார்களா?
மனம்
என்பது மூளை நரம்புகளின் உருவாக்கம் என்கிறது நவீன அறிவியல். மனம் என்பது கடந்த காலத்தால்
ஆனது, அதனால் பதற்றம் அடைகிறது என்கிறார் ஜெமோ.
உண்மையில்,
இந்த உலகத்தில் சற்றேனும் மனநோய் இல்லாத எவருமே இருக்க முடியாது என்பது உண்மையாக இருந்தால்,
நெய் மீனுக்காக மனைவியைக் கொன்றவனுக்கும், ஆவியோடு பேசும் நீதிபதிக்கும், அதை நாற்பது
வருஷமாக யோசித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளனுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை.
எல்லாவற்றையும்
விடப் பெரிய மெய்ஞானம் என்னவென்றால், அடுத்த முறை ஹோட்டலுக்குப் போனால், நெய் மீன்
இல்லை என்று சொன்னால் சண்டையிடாமல் ஜாஸ்மின் ரைஸாவது ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு
அமைதியாக வீடு திரும்புவதுதான் நேர்த்தியானது. மனமாவது மண்ணங்கட்டியாவது.
*****

No comments:
Post a Comment