புலவர் சண்முகவடிவேலுவின் நினைவின் நிழல்கள் – ஓர் எளிய அறிமுகம்
ரீல்ஸ் தலைமுறைக்கேற்ற ரியல் புத்தகம்
– புலவர் சண்முகவடிவேலுவின் கால இயந்திரம்
"டேய்,
இதைத்தான் போன வாரமே எழுதினாய்!" என்று நீங்கள் கொந்தளிப்பது கேட்கிறது. நீங்கள்
என் வலைப்பூவின் தீவிர மற்றும் பாவம், துரதிர்ஷ்டவசமான வாசகர் என்று புரிகிறது.
ஒரே
விஷயத்தை மறுபடி எழுதுவது குற்றமா?
ஆமாம்,
குற்றம்தான்.
ஆனால்,
போன முறை ஒழுங்காக எழுதாமல் விட்டதை, அப்படியே மூடி மறைப்பது அதைவிடப் பெரிய குற்றம்
இல்லையா?
இப்படித்தான்
குற்றவாளிகள் தங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொள்வார்கள்.
சரி,
குற்ற ஒப்புதல் வாக்குமூலத்திற்கு வருகிறேன்.
அன்று
காலை புலவர் சண்முகவடிவேலுவின் 'நினைவின் நிழல்கள்' புத்தகத்திற்கு ஒரு மொக்கையான அறிமுகத்தை
எழுதித் தொலைத்தேன். அன்று மாலையே எனக்கு ஒரு விபத்து நிகழ்ந்தது பேராசிரியர் அ. ஜான்பீட்டர்
ஐயா வடிவில்.
நாங்கள்
உலக மகா தத்துவங்கள் தொடங்கி கரன் கார்க்கியின் கருந்துளை, இடையே கொஞ்சம் இருத்தலியல்வாதம்
மற்றும் நான் ஏன் இன்னும் ஓய்வு பெறாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்? போன்ற அத்தியாவசியப்
புகார்களைப் பேசிவிட்டு, கடைசியில் இந்த நூலுக்கு வந்தோம்.
"இப்படியாடா
ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்வாய்?" என்று பேராசிரியர் ஒற்றைக் கேள்வியில் என்
மண்டையில் கொட்டினார். புத்தகம் படிக்காதவனுக்கும் படித்த திருப்தி வர வேண்டும், நீ
எழுதியிருப்பது வெறும் கருத்துரை என்று என் முகத்தில் அடித்தாற் போல் புரியவைத்தார்.
தன் மாணவனின் அரைகுறை வேலையை சகித்துக்கொள்ளாத சாட்டையடி பேராசிரியர் அவர்.
எனவே,
வாங்கிய கொட்டுகளுக்குப் பரிகாரமாக, அதே புத்தகத்திற்கு மீண்டும் ஓர் அறிமுகம்.
'நினைவின்
நிழல்கள்' என்பதால், ஒரு முறைக்கு இரண்டு முறை படித்தால் நிச்சயம் உங்கள் நிழல் போல
நினைவில் ஒட்டிக்கொள்ளும் என்ற நப்பாசைதான்.
வாருங்கள்,
இப்பொழுதாவது ஒழுங்காக அறிமுகப் படலத்திற்குள் நுழைவோம்.
நாகூரில்
பிறந்து, நாகைத் தமிழ்ச் சங்கத்தில் வளர்ந்து, திருவாரூரிலே புகழ் கொண்ட பட்டிமன்ற
ஆளுமையான புலவர் இரெ. சண்முகவடிவேலுவின் நகைச்சுவை உரைகளை நீங்கள் நேரில் கேட்டிருக்கலாம்,
வலைதளங்களிலும், காணொளிகளிலும் கண்டு மகிழ்ந்திருக்கலாம். அவற்றை புத்தகமாகப் பார்க்க
நினைத்தால், ‘நினைவின் நிழல்கள்’ என்ற அவரது புத்தகத்தை வாங்கி வரிக்கு வரி வாசித்து
நேசிக்கலாம்.
புலவர்
சண்முகவடிவேலுவின் பேச்சுக்கலை வரலாற்றை இந்த நூலில் நாம் விட்ட குறை தொட்ட குறையாகத்
தரிசித்து மகிழலாம். முழுமையாக தரசிக்க அவர் ‘நினைவின் நிழல்கள்’இன் பல பாகங்களைப்
புத்தகமாகக் கொண்டு வர வேண்டும். இருப்பினும் இந்த முதல் பாக நூலிலேயே அவர் பேச்சுக்
கலைக்குள் வரக் காரணமாக இருந்த சூழல், அவரை வளர்த்தெடுத்த ஆளுமைகள், தனக்கெனத் தனி
நகைச்சுவை பாணியை அமைத்துக் கொண்ட பாங்கு ஆகியவற்றை இந்த நூலில் நாம் பரக்கக் காணலாம்.
எந்த
ஒரு திறமையையும் மாணவப் பருவத்திலிருந்தே வளர்த்துக் கொள்ளத் தொடங்கினால் அத்திறமையில்
பேராளுமையாகத் திகழலாம் என்பதற்குச் இந்நூலின் வழியே சண்முகவடிவேலுவின் வாழ்க்கை நல்ல
சான்று பகர்கிறது.
பள்ளிப்
பருவத்தில் பேசத் தொடங்கிய அவர் இன்று நரை கூடிய பருவம் வரை பேசிய பல்வேறு அனுபவங்களை
இந்த நூலில் அறுசுவை உணவை பந்தி வைப்பதைப் போல நகைச்சுவைப் பந்தியாகப் படையல் வைக்கிறார்.
தன்னைப்
பற்றிச் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை என்று அவையடக்கம் காட்டினாலும், அவரும் அவருடன்
தொடர்புடைய பேச்சு ஆளுமைகளும் இந்நூல் காட்டும் மேடைகளில் எடுக்கும் விஸ்வரூபத்தைப்
பார்க்கையில், அவரைப் பற்றி நாம் பெரிதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
பேரறிஞர்
அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ஜஸ்டிஸ் மகாதேவன், குன்றக்குடி அடிகளார், கிருபானந்த
வாரியார், ம.பொ.சிவஞானம்,திருக்குறளார் முனுசாமி, பேராசிரியர் அன்பழகன், ஏ.சிதம்பரநாத
செட்டியார், சத்தியசீலன், அறிவொளி, நெல்லைக் கண்ணன், நாகூர் அனிபா போன்ற அமரராகி விட்ட
தமிழ்க் குமரர்களை தன் எழுத்து வழி பிரசவித்து மீண்டும் நம்மை வாசிப்பு வழி இந்நூல்
பிடித்து ஹாலோகிராம் போலத் தரிசிக்க வைக்கிறார்.
சுகி.
சிவம், இலங்கை ஜெயராஜ், பா, நமச்சிவாயம் போன்ற பேராளுமைகளுடன் தன்னுடைய அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில் தன்னுடைய நண்பர்களான சீனி. சண்முகம், புலவர் சந்திரசேகரன்
போன்றோர் உடனான அனுபவங்களையும் அதே பாங்கில் ஓங்கி உரைக்கிறார்.
தன்
மேடைத்தமிழ் ஆசான் கோவை இளஞ்சேரன் பற்றியும் நெகிழ்ச்சியோடும் நகைச்சுவையோடும் இந்நூலில்
பதிவு செய்திருக்கிறார்.
காந்தியாருக்குச்
சத்திய சோதனை என்றால், புலவர் சண்முகவடிவேலனாருக்கும் அப்படி ஒரு சத்திய சோதனையாக அவரது
அப்பாவுடன் நேர்ந்த அனுபவங்களை எவ்விதப் பாசங்குமின்றி அவற்றை நகைச்சுவை சோதனை போல
எடுத்தியம்புகிறார். அப்பாக்களைச் சமாளிப்பது காந்தியின் அகிம்சையை விடக் கொடூரமானது
என்பதைப் புலவர் உணர்ந்திருக்கிறார்.
முத்தமிழறிஞர்
கலைஞர் இவர் காலத்தில் திருவாரூர் வ.சோ. மேனிலைப் பள்ளியில் பயிலாமல் முந்திக் கொண்டு
பயின்று விட்டோமே என்ற ஏக்கத்தை நகைச்சுவையாகக் குறிப்பிட்டாலும், அந்த ஏக்கத்தைப்
போக்கும் வகையில் பல பேச்சுக் கலைஞர்களை உருவாக்கிக் கலைஞரின் ஏக்கத்திற்கு ஓர் ஆக்கம்
சேர்த்திருக்கிறார் இப்புலவர். இன்றும் ஊக்கம் குன்றாமல் பல கலைஞர்களை உருவாக்கி வருகிறார்.
கடந்த
காலத்தைப் பற்றி முதியோர்கள் சொல்ல, அதை கேட்கும் மனநிலையில் இன்றைய இளைய சமூகம் இல்லை
என்பதே எதார்த்தம். ஆனால், அந்த எதார்த்தம் தோற்றுப் போவதைப் புலவர் சண்முகவடிவேலுவின்
தமிழ்ச் சங்கக் கூட்டங்களில் காண முடியும். அதே போல, புலனத்திலும், காணொளியிலும் திளைக்கும்
இன்றைய இளைய சமூகம் வாசிப்பத்தில்லை என்ற எதார்த்தத்தையும் இந்தப் புத்தகம் மாற்றி
அமைக்கும். அவ்வளவு எளிமை, அத்தனை இனிமை, நகைச்சுவையில் புதுமை இந்த நூல்.
மேடைப்
பேச்சாளர்களுக்கும், பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும் மட்டுமல்லாது வாழ்வின் விழுமியங்களையும்
அனுபவச் செழுமைகளையும் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்த நூல் பருத்தி நூலாகவும்,
பட்டு நூலாகவும் ஒருங்கே அமைந்து பயன்தரக் கூடியது. நூலின் நடை பருத்தி நூலைப் போல
எளிமையாக இருந்தாலும், அதன் கருத்துகள் பட்டு நூலைப்போல உயர்வாக இருக்கின்றன.
ஒரு
கால இயந்திரம் இருந்தால் அன்றைய அண்ணாவின் காலம் தொட்டு, இன்றைய இன்ஸ்டா காலம் வரை
67 ரீல்ஸ் போட்டு விடலாம் என்று நீங்கள் நினைத்தால், நினைவின் நிழல்கள் அதற்கேற்ற ஓர்
கால இயந்திரம்தான்.
கால
மாற்றத்தைப் புரிந்து கொண்டு வரிசைக்கிரமம், சம்பவங்கள் நிகழ்ந்த ஆண்டுகளின் கால ஒழுங்கு
பற்றிக் கருத்தில் கொள்ளாமல் ரீல்ஸ் தலைமுறைக்கேற்ற ரியல்ஸ் நிறைந்த கன்டென்டை ஒரு
புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார் புலவர் இரெ. சண்முகவடிவேல்.
*****

No comments:
Post a Comment