7 Jul 2026

பாட்டிலில் ஒரு திரவச் சாத்தான்!

பாட்டிலில் ஒரு திரவச் சாத்தான்!

சுமார் அரை நூற்றாண்டாக இந்த மண்ணில் ஒரு பழக்கம் வழக்கம் ஆக்கப்பட்டிருக்கிறது. அதுதான் மதுப்பழக்கம்.

நாட்டின் பெரும்பாலான கொடூரக் குற்றங்கள், 95% சாலை விபத்துகள், கற்பனைக்கு எட்டாத பாலியல் வன்கொடுமைகள் என எல்லாவற்றின் பின்னாலும் இந்தத் திரவ சாத்தான் ஒளிந்திருக்கிறது.

வயிற்றுக்குள் போகும் ஓர் அவுன்ஸ் திரவம், உங்கள் உடம்புக்குள் என்னவெல்லாம் செய்கிறது என்று அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், பக் என்று இருக்கும்.

ஆல்கஹால் உள்ளே போன சில நிமிடங்களில், அது நேராக ரத்தத்தில் கலந்து மூளைக்குச் செல்கிறது. மூளையில் இருக்கும் நரம்புக் கடத்திகளை இது அட்டாக் செய்கிறது.

காபா என்பது மூளையை அமைதிப்படுத்தும் ஒரு கெமிக்கல். ஆல்கஹால் இதை அளவுக்கு அதிகமாகத் தூண்டுகிறது. அதனால்தான் குடித்தவுடன் ஒரு ஹாயான போலி அமைதி கிடைக்கிறது.

குளுட்டமேட் என்பது இது மூளையை சுறுசுறுப்பாக்கும் கெமிக்கல். ஆல்கஹால் இதை லாக் செய்கிறது.

விளைவு?

மூளையின் கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகிறது. பேச்சு குளறுகிறது. தள்ளாட்டம் வருகிறது. இன்னும் கொஞ்சம் அதிகமானால், மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதி தற்காலிகமாக ஸ்விட்ச் ஆப் ஆகும். இதற்குத்தான் பிளாக் அவுட் என்று பெயர். நேற்று இரவு என்ன நடந்தது என்றே ஞாபகம் இருக்காது!

நம் உடம்பின் ஆகப் பெரிய கெமிக்கல் பேக்டரி கல்லீரல்தான். உள்ளே வரும் நச்சுக்களை எல்லாம் வடிகட்டி உடம்பைக் காப்பாற்றுவது இதனுடைய வேலை.

ஆல்கஹாலைக் கல்லீரல் எப்படி டீல் செய்கிறது தெரியுமா?

முதலில் ஆல்கஹாலை அசிடால்டிஹைட் என்ற கெமிக்கலாக மாற்றுகிறது. இந்த அசிடால்டிஹைட் என்பது விஷத்தை விடக் கொடியது. கேன்சரை உருவாக்கும் காரணி!

பிறகு அதை கஷ்டப்பட்டு அசிட்டேட் ஆக மாற்றி உடம்பை விட்டு வெளியேற்றுகிறது.

ஆல்ஹகாலைத் தொடர்ந்து ஊற்ற ஊற்ற, கல்லீரலால் வேலை செய்ய முடிவதில்லை. ஆல்கஹாலில் இருக்கும் கொழுப்புகள் கல்லீரலில் படிய ஆரம்பிக்கின்றன. இதுதான் பேட்டி லிவர். நாளடைவில் அந்த செல்கள் எல்லாம் செத்துப்போய், கல்லீரல் சுருங்கி, கல்லாகிவிடும். மெடிக்கல் பாஷையில் லிவர் சிர்ரோசிஸ். அப்புறம் காலி.

குடித்தால் ரத்த அழுத்தம் எகிறும். இதயத் துடிப்பு சீரற்றுப் போகும். இதற்கு கார்டியோமயோபதி என்று பெயர். இதயத்தின் தசைகள் பலவீனமடைந்து, பம்ப் செய்யும் திறனை இழக்கும். திடீர் மாரடைப்புக்கு இதுவே ரெட் கார்பெட் போடும்.

மிக முக்கியமாக, ஆல்கஹால் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் காலி செய்கிறது. வெள்ளை ரத்த அணுக்களின் வீரியத்தைக் குறைத்து விடுகிறது.

எல்லாவற்றையும் விடக் கொடுமை, அது நம் செல்களின் மாஸ்டர் பிளான் ஆன டி.என்.ஏவைச் சிதைக்கிறது. டி.என்.ஏ சிதைந்தால், செல்கள் தாறுமாறாக வளர ஆரம்பிக்கும். அதன் பெயர்தான் புற்றுநோய். வாய், தொண்டை, கல்லீரல், மார்பகப் புற்றுநோய்களுக்கு ஆல்கஹால் ஒரு நேரடி ஏஜென்ட்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஆல்கஹால் என்பது உடலுக்கு எந்த விதத்திலும் தேவையில்லாத ஒரு தேசத்துரோகி.

மது அருந்துவது என்பது, உங்கள் வீட்டின் கம்ப்யூட்டர் மதர்போர்டில் ஆசிடை ஊற்றிவிட்டு, அது நன்றாக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்குச் சமம்.

உடம்பு என்பது ஓர் அற்புதமான பயோ மெஷின். அதை வெறும் எத்தனால் கொண்டு அழிப்பது என்ன மாதிரியான புத்திசாலித்தனம்?

எனவேதான், நமது பேராசான் திருவள்ளுவர் இதை நஞ்சு என்றார். கள் உண்ணாமை என்று தனி அதிகாரமே எழுதி பத்து குறள்களில் மண்டையில் அடிப்பது போல் விளக்கியிருக்கிறார்.

பிற உயிர்களை அழித்து வாழும் இந்த அவலத்தை மணிமேகலை காப்பியமும் “மயக்குங் கள்ளும், மன்னுயிர் கோறலும்” என்று கண்டித்துக் காறித் துப்பியது.

ஆனால் இங்கே நடப்பதோ தலைகீழ் எதார்த்தம். குடிக்கிற ஏழை குடிசை வீட்டில் கிடக்கிறான்; மதுவை விற்கிற அரசோ கல்லா கட்டுகிறது; மது ஆலையை நடத்துகிற முதலாளி சொகுசு பங்களாவில் வாழ்கிறான்.

துயரம் என்னவென்றால், தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக இருப்பதற்குக் காரணமே குடிகாரக் கணவர்களின் அகால மரணங்கள்தான்.

*****

No comments:

Post a Comment