7 Jul 2026

கொக்கிக் குமாரின் கொடூரக் கோட்பாடுகள்!

சீரழித்த சினிமா – 35

புதுப்பேட்டை

கொக்கிக் குமாரின் கொடூரக் கோட்பாடுகள்!

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டின் மே திங்களில், தமிழ்நாட்டின் திரையரங்கு வாசல்களில் அரசியலில் கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருந்த விழுமியங்களுக்கும், சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வுக்கும், அடித்தட்டு இளைஞர்களின் வாழ்வியல் நெறிமுறைகளுக்கும் மிக பிரமாண்டமான கல்லறைகள் எழுப்பப்பட்டன.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "ரௌடி என்பவன் என்றாவது ஒருநாள் மனம் திருந்துவான் அல்லது கைது செய்யப்படுவான்" என்ற அறநெறி விதிகளை அடியோடு ஒதுக்கி வைத்து விட்டு, "சென்னையின் பேட்டைகளில் வாழும் ஒரு பள்ளி மாணவன், தன் தாயைக் கொன்ற தந்தையைப் பழிவாங்கத் துப்பில்லாமல் ஓடிவந்து, பசியின் உச்சத்தில் ஒரு கொலை செய்துவிட்டு, அரசியல்வாதிகளின் கைக்கூலியாக மாறி, கடைசியில் சட்டமன்ற உறுப்பினராகவே ஆகிவிடலாம்" என்ற ஒரு புதுவிதமான பிராந்திய வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, புதுப்பேட்டை திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் எந்நேரமும் பயத்திலும் வெறியிலும் பிதுங்கி வழியும் கண்களும், "கடவுள் பாதி மிருகம் பாதி" என்ற போலிப் பாய்ச்சல் பிம்பமும், இயக்குனரின் வழக்கமான இருண்ட, மனப்பிறழ்வு உலகமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கொலைக்கள நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த கல்வி நெறிமுறை என்ன தெரியுமா?

நீங்கள் ஓர் ஏழை வீட்டுப் பிள்ளையாக இருந்தால், உங்களுக்குப் படிப்போ, நேர்மையான உழைப்போ முக்கியமல்ல. எவனாவது உங்களை உற்றுப் பார்த்தால், நடுரோட்டில் வைத்து அவனை எப்படிக் கொத்துக்கறி ஆக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.

இந்தியத் தண்டனைச் சட்டம், உள்ளூர் காவல் நிலையம் போன்ற சிவில் சமூக அமைப்புகள் எல்லாம் நாயகன் கொக்கி குமாருக்குப் பொருந்தாது. நகரின் ஆகச்சிறந்த தாதா தன் ஆட்களுடன் வந்து வழிமறித்தால், சட்டத்தை நாடக் கூடாது; தானே ஒரு சைக்கோ ரௌடியாகவோ அல்லது வெறிபிடித்த கொலைகாரனாகவோ விஸ்வரூபம் எடுத்து, "பயம் குமாரு... பயம்..." என்று டயலாக் பேசிக்கொண்டே சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுக்க வேண்டும். அதுதான் ஒரு ரௌடியின் ஆகச்சிறந்த ஆளுமை என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் உருப்படியாக வேலைக்குப் போகாமல், "நாங்கெல்லாம் புதுப்பேட்டை குமார் பரம்பரைடா, இறங்குனா ரத்த ஆறுதான்" என்று தேவையில்லாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துக்கொண்டு திரியும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறை விரும்பிகளான வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

புதுப்பேட்டை படத்தில், ஒரு ரௌடி நினைத்தால் ஒட்டுமொத்த தேர்தல் முறையையும் ஜனநாயக அமைப்பையுமே தன் கையில் வைத்திருக்கலாம் என்ற ரௌடியிஸக் கொடுமையை மாஸ் என்ற லேபிளோடு விற்றார்கள். இந்த உறைபனியூட்டும் ரௌடியிஸ வழிபாட்டு வக்கிரத்தை, உணர்ச்சிமயமான, வெறித்தனமான பின்னணி இசையாலும், பளபளக்கும் நியான் விளக்குகளாலும் மூடி மறைத்து, அவன் தப்பு செய்தாலும் அது சூழ்நிலையின் பலி என்று பார்ப்பவனை ஏமாற்றினார் இயக்குனர்.

நீதிமன்றமோ, ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு தாதா நினைத்து எம்.எல்.ஏ ஆனால் மட்டும்தான் நீதி கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான தத்துவத்தை விற்று, பார்ப்பவனுக்குச் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இத்திரைப்படம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது மற்றும் விசித்திரமானது. ஒரு பெண் ரௌடி என்று தெரிந்தே அவனோடு வாழத் துடிப்பதும், அவனது வன்முறையைக் கண்டு காதலில் விழுவதுமாக ஒரு வக்கிர பிம்பமாகக் காட்டப்பட்டார். இன்னொரு பெண் கட்டாயத் தாலி கட்டப்பட்டு, அவனது அராஜகங்களுக்குப் பயந்து அடிமையாக வாழும் பரிதாபகரமாகக் காட்டப்பட்டார்.

பெண்களின் சுயம், கல்வி அல்லது ஆளுமை எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவர்களின் துயரங்களையும், ஒரு ரௌடியின் அந்தப்புர வாழ்க்கையையும் ரொம்பக் கியூட் அண்ட் கமர்ஷியலாகக் காட்டி, தமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்றியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம். இதன் விளைவாகத் தமிழ் சினிமாவில் அடுத்த பத்து வருடங்களுக்கு ரௌடிகளைக் காதலிக்கும் லூசுப் பெண் மற்றும் அடிமைப் பெண் சீரழிவுப் பாத்திரங்கள் அணிவகுக்கத் தொடங்கின.

புதுப்பேட்டை பாக்ஸ் ஆபீஸில் ஒரு கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்று, அதன் நாயகனை ஒரு அசாத்திய நடிகராக அமர வைத்து, அதன் இயக்குநரை ஒரு ஜீனியஸ் நாற்காலியில் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

நாயகன் ஒரு அரிவாள் வெட்டு வெட்டுகிறான். வில்லன் தலை தெறித்து விழுகிறான். மனிதநேயத்தின் அடிப்படை விதிகள் அங்கே கதறி அழ ஆரம்பித்தன. தியேட்டரில் இருக்கும் பதினெட்டு வயது இளைஞனின் அட்ரினலின் சுரப்பி, சென்னை கூவம் ஆற்றில் சுனாமி ஏற்பட்டது போலப் பொங்கி வழிய ஆரம்பித்தது.

இத்திரைப்படத்திற்கு முன்பு வரை சென்னை என்பது உழைப்பாளர்களுக்கும், கலகலப்பான மெட்ராஸ் பாஷைக்கும் புகழ்பெற்ற ஓர் ஊர். ஆனால், அதற்குப் பிறகுதான், சென்னையில் பிறக்கும் போதே குழந்தைகளுக்குக் கைகளில் அரிவாளும், மனதில் துரோகமும் கற்றுத்தரப்படுகிறது என்கிற பொதுப்புத்தி சமூகத்தில் விதைக்கப்பட்டது.

பொதுவாக, சினிமா, வன்முறையைத் தீமையின் அடையாளமாகவே காட்டும். ஆனால், புதுப்பேட்டை அதை ஓர் அவசியம் என்று போதித்தது. வன்முறை என்பது தீமை அல்ல; அது ஒரு தற்காப்பு உத்தி என்ற பிம்பத்தை அது இளைஞர்களின் ஆழ்மனதில் பதிய வைத்தது.

அது மட்டுமல்லாமல், உலகில் உள்ள அத்தனை உளவியல் சிக்கல்களுக்கும் புதுப்பேட்டை ஓர் அபத்தமான தீர்வைச் சொன்னது. உனக்கு ஒரு அநீதி நடந்தால், நீ அதைவிடப் பெரிய அநீதியைச் செய் என்றது. அன்பு காட்டினால் அடிமையாகிவிடுவோம், பயமுறுத்தினால் தான் பவ்யமாக இருப்பார்கள் என்கிற ஓர் ஆபத்தான ஆதிக்க உளவியலையும் இந்தப் படம் மிக நளினமாக இளைஞர்களின் நரம்புகளுக்குள் ஏற்றியது. சமூகம் தங்களை வஞ்சிக்கிறது என்று நினைக்கும் ஒவ்வொரு இளைஞனும், தங்களுக்குள் ஒரு குட்டி கொக்கி குமாரை வளர்த்துக்கொள்ள இந்தப் படம் பெரும் உத்வேகமளித்தது.

ஒருவன் கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போகும் கொடூரமான காட்சியைக்கூட, தியேட்டரில் இருந்தவர்களை விசிலடிக்க வைத்ததுதான் இத்திரைப்படத்தின் ஆகப் பெரும் சாதனை. வன்முறையை ஒரு கலை வடிவமாக மாற்றி, உளவியல் ரீதியாக, ஒரு கொடூரத்தைக் கொண்டாடும் மனநிலைக்குச் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டதன் பின்னால் இந்தத் திரைப்படத்துக்கு முக்கியப் பங்குண்டு.

மனிதன் மிருகத்திலிருந்து தோன்றினான் என்பதை டார்வின் நிரூபித்தார். ஆனால், மனிதன் மீண்டும் மிருகமாக மாற ஆசைப்படுகிறான் என்பதைப் புதுப்பேட்டை நிரூபித்தது.

வன்முறை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதைச் சொல்லவந்த படம், வன்முறையே வாழ்க்கை என்று சொல்லிவிட்டுச் சென்றது. இப்போதும் சமூக வலைதளங்களில், சாதாரண வாக்குவாதங்களுக்குக் கூட கொக்கி குமாரின் ஜிப் இமேஜ்களைப் பயன்படுத்தும் அளவுக்கு, அந்த வன்முறைப் பிம்பம் ஒரு ஸ்டைல் ஆக மாறிவிட்டது.

புதுப்பேட்டை ஒரு நிகிலிச தத்துவப் பின்னணியைக் கொண்டது. அதாவது, உலகில் நல்லதோ கெட்டதோ எதுவுமில்லை, எல்லாம் ஒரு சூன்யம்; அதிகாரமும் பணமும் மட்டுமே நிஜம் என்ற பார்வையை உடையது. இவ்வகையிலான புதுபேட்டையின் தத்துவார்த்தப் பார்வை என்பது வன்முறையை நியாயப்படுத்துவதாகவும், அற விழுமியங்களைக் கேலி செய்வதாகவும் அமைந்தது. இத்திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம், பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் பல "ரௌடியிசக்" கதாபாத்திரங்கள் கதாநாயகர்களாகக் கொண்டாடப்படும் ஒரு தவறான தத்துவார்த்தப் பாதைக்கு வித்திட்டது என்பதை மறுப்பதற்கில்லை.

படிக்கப் போகும் வயதில் லோக்கல் ரௌடிகளோடு சேர்ந்து கொண்டு கொலையும் கொள்ளையும் செய்வதுதான் கெத்து என்றும், சென்னையின் தாதா கலாச்சாரமும் வக்கிர அரசியலும் கலந்ததுதான் தமிழகமும் தமிழ் சினிமாவும் என்று நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சைக்கோ சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

No comments:

Post a Comment