6 Jul 2026

அகோர(ரி)ப் பசிக்குப் பலியான தமிழகத்தின் பொதுப்புத்தி!

சீரழித்த சினிமா – 34

நான் கடவுள்

அகோரப் பசிக்குப் பலியான தமிழகத்தின் பொதுப்புத்தி!

இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டின் பிப்ரவரி திங்களில், தமிழ்நாட்டின் திரையரங்கு வாசல்களில் மானுடத்தின் எஞ்சியிருந்த ஆகச் சிறந்த நாகரிகப் பண்புகளுக்கும், சராசரி மனிதனின் அன்றாட மன அமைதிக்கும் மிக பிரமாண்டமான சிதைகள் மூட்டப்பட்டன.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "நாயகன் என்பவன் அநீதியைத் தட்டிக்கேட்பான், காதலியைக் கரம் பிடிப்பான்" என்ற ஆகச்சிறந்த கமர்ஷியல் விதிகளை அடியோடு தகர்த்து, "காசிக்குச் சென்று கஞ்சா புகைத்து, ஜடாமுடி வளர்த்து, அஹம் பிரம்மாஸ்மி என்று கத்தினால் போதும்; அவன் செய்யும் அத்தனை கொலைகளும், அராஜகங்களும் ஆன்மீக விடுதலை என்ற பெயரில் புனிதப்படுத்தப்படும்" என்ற ஒரு புதுவிதமான மனநோயியலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, நான் கடவுள் திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் எந்நேரமும் வெறிக்க வெறிக்கப் பார்க்கும் சிவந்த கண்களும், மனித உடல்களைப் பந்தாடும் வக்கிரப் பாய்ச்சலும், இயக்குநரின் வழக்கமான விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய அதீதக் கற்பிதங்களும் சேர்ந்து, தமிழ்நாட்டு ரசிகர்களின் மூளையை எப்படி ஒரு மயான பூமி நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டுச் சமூகத்திற்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த சமூக நெறிமுறை என்ன தெரியுமா?

மாற்றுத்திறனாளிகளும், பார்வையற்றோரும் சமூகத்தின் ஆதரவைப் பெற வேண்டியவர்கள் அல்ல; அவர்கள் ஒரு மாபியா கும்பலின் கைகளில் மாட்டிக்கொண்டு சித்திரவதையை மட்டுமே அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்பதுதான்.

இந்தியத் தண்டனைச் சட்டம், உள்ளூர் காவல் துறை போன்ற அற்பமான அமைப்புகள் எல்லாம் இந்தத் திரைப்படத்தின் உலகிற்குப் பொருந்தாது. நகரின் ஆகச்சிறந்த ரௌடி மாற்றுத்திறனாளிகளை வதைத்தால், சட்டத்தை நாடக் கூடாது; காசியில் இருந்து ஒரு விசித்திரமான அகோரி வந்து, சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுத்து, எல்லோரையும் கொன்று குவிக்க வேண்டும். அதுதான் ஆகச்சிறந்த ஆன்மீக இரட்சிப்பு என்று தமிழ் ரசிகன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

சமூகம் மற்றும் சட்ட அமைப்புகளின் மீது நம்பிக்கையற்று, எல்லாவற்றிற்கும் ஒரு அதிமானுட வன்முறைதான் தீர்வு என்று நம்பும் ஒரு முதிர்ச்சியற்ற, இருண்ட மனநிலையைக் கொண்ட வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

நான் கடவுள் திரைப்படம், ஒரு தனிமனிதன் நினைத்தால் ஒட்டுமொத்தக் காவல் துறையையும், சட்டத்தையும் மண்டியிட வைக்கலாம் என்ற அராஜகத்தை அகோரி பண்பாடு என்ற லேபிளோடு விற்றது. இந்த உறைபனியூட்டும் வன்முறை வக்கிரத்தை, மேஸ்ட்ரோ மற்றும் இசைஞானியின் உணர்ச்சிமயமான பின்னணி இசையாலும், மிரட்டும் காசி காட்சிகளாலும் மூடி மறைத்து, அவன் மனிதர்களுக்கு மேலே வாழ்பவன் என்று பார்ப்பவனை ஏமாற்றியது இயக்குநரின் பக்கா கமர்ஷியல் தந்திரம்.

நீதிமன்றமோ, ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு அகோரி நினைத்தால் மட்டும்தான் இறுதி நீதி அதுவும் மரணத்தின் வழியே கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான தத்துவத்தை விற்று, பார்ப்பவனுக்குச் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இந்தத் திரைப்படம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் கொடூரமானது. நாயகியின் கதாபாத்திரம், எந்நேரமும் அழுதுகொண்டே இருப்பதும், உலகின் ஒட்டுமொத்தக் கொடுமைகளையும் தாங்குவதுமாக ஒரு சுயமற்ற, பரிதாபகரமான பிம்பத்தின் உச்சமாகக் காட்டப்பட்டார். ஒரு பெண்ணின் சுயம், போராட்டம் அல்லது ஆளுமை எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவளது துன்பங்களை மிக நீளமாகக் காட்டி, கடைசியில் அவளுக்குக் கொடுக்கும் மரணத்தைக் கருணைக் கொலை என்று நியாயப்படுத்தியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கோம்பாக்கத்துக் கொத்துப்பரோட்டோ தந்திரம். இதன் விளைவாகத் தமிழ் சினிமாவில் அடுத்த சில வருடங்களுக்குப் பெண்களை வெறும் வதைபடும் பொருளாகக் காட்டும் சீரழிவுப் பாத்திரங்கள் அணிவகுக்கத் தொடங்கின.

நான் கடவுள் பாக்ஸ் ஆபீஸில் விருதுகளைக் குவித்து, அதன் நாயகனை ஒரு மாற்றுப் பாதை நடிகராக அமர வைத்து, அதன் இயக்குநரை ஒரு க்ரப்ட் மாஸ்டர் அந்தஸ்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

நாயகன் ஒரு கையைப் பிடிக்கிறான், அந்த மனிதனின் எலும்புகள் நொறுங்குகின்றன. நியூட்டனின் விதிகள் அங்கே கதறி அழ ஆரம்பித்தன. தியேட்டரில் இருக்கும் சராசரி இளைஞனின் அட்ரினலின் சுரப்பி, ஒரு மயான அமைதியோடு பொங்கி வழிய ஆரம்பித்தது.

இத்திரைப்படத்திற்கு முன்பு வரை ஆன்மீகம் என்பது அமைதிக்கும், அன்புக்கும், சுய தேடலுக்குமான ஒரு வழியாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகுதான், ஆன்மீகம் என்றாலே மூர்க்கத்தனமாகச் சண்டை போடுவதும், சாபமிடுவதும்தான் என்கிற பொதுப்புத்தி சமூகத்தில் விதைக்கப்பட்டது.

நான் கடவுள் என்று நாயகன் கத்தும்போது தியேட்டரில் விசிலடித்த பாமரனுக்கு, அடுத்த நொடி பஸ்ஸில் டிக்கெட் எடுக்க காசு இல்லையென்ற நிஜம் உறைக்கவில்லை. கடவுள் என்பவர் எல்லாவற்றையும் கடந்தவர் என்ற தத்துவத்தை, எல்லாரையும் அடித்துத் துவம்சம் செய்பவர் என்று தமிழ் சினிமாவுக்கே உரிய ரவுடியிச பார்முலாவிற்குள் இயக்குநர் சுருக்கியதன் விளைவாக, ஆன்மீகம் என்ற பெயரில் வன்முறையையும், மயிர் வளர்ப்பதையும், கஞ்சா அடிப்பதையும் மாஸ் குறியீடாக இளைஞர்கள் சில காலம் கொண்டாடித் திரிந்த உளவியல் விகாரம் நிகழ்ந்தது.

மாற்றுத் திறனாளிகளைச் சமூகம் எப்படி நடத்துகிறது என்பதைத் திரையில் காட்டி, நம் நெஞ்சில் ஈரத்தை வரவழைத்தாரா இயக்குநர் என்றால், இல்லை. மாறாக, அவர்களின் அவலங்களை, உடல் ஊனங்களை மிகக் கொடூரமான கோணங்களில் படம் பிடித்து, தியேட்டரில் பாப்கார்ன் தின்றுகொண்டே அதைப் பார்த்து அய்யோ பாவம் என்று வக்கிரமாக ரசிக்க வைக்கும் ஒரு சமூகச் சீரழிவை இப்படம் சாத்தியமாக்கியது. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அடுத்தவனின் துயரத்தை ஒரு மூன்று மணி நேர பொழுதுபோக்கு பொருளாக மாற்றியதில் இயக்குநர் ஜெயித்தார், சமூகத்தின் மனிதாபிமானம் தோற்றது.

சட்டம், ஒழுங்கு, நீதிமன்றம் எல்லாமே வேஸ்ட், ஒரு சூப்பர் ஹீரோ இங்கே அகோரி வடிவில் வந்துதான் கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டும் என்ற பாசிசச் சிந்தனையை இப்படம் மிக அழகாக ரசிகனின் அடிமனதில் விதைத்தது.

மன அழுத்தத்தைப் போக்க தியேட்டருக்குப் போனவனை, இன்னும் கொஞ்சம் மன அழுத்தத்தை இலவசமாகத் தந்து, உன் வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை என்று ஒரு தற்காலிக திருப்தியைத் தேட வைத்ததுதான் இந்தப் படத்தின் ஆகச்சிறந்த உளவியல் வஞ்சகம்.

ஒரு மனிதன் தன் செயல்களின் மூலமே தன் இருப்பை வரையறுக்கிறான். நான் கடவுள் பாணியில் வாழ நினைக்கும் ஒருவனுக்கு, அவன் கடவுள் என்று நிரூபிக்க ஒரு பயங்கரமான அரக்கன் தேவை. ஆனால் வேளைப்பளு, மனஅழுத்தம், மாசடைந்த சுற்றுப்புறம், நேரமின்மை, பயணக் களைப்பு போன்ற அன்றாட வாழ்க்கையில் அதற்கெல்லாம் இடமில்லை. இதனால், “நான் அகோரியா? அல்லது வெறும் அப்பாவியா?” என்ற குழப்பத்தில், விலைவாசியோடும், பற்றாக்குறை பட்ஜெட்டோடும், டிராபிக் ஜாமோடும் போராட முடியாமல் தவிக்கத் தொடங்கினான் தமிழ் இளைஞன்.

நான் கடவுள் திரைப்படம் தமிழ் மக்களைத் தங்களின் நிஜமான சராசரி வாழ்க்கையை வெறுக்கக் கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளே ஒரு ருத்ரனை ஒளித்து வைத்துக் கொண்டு, வெளியே ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியாக வாழ்ந்து மடிய வேண்டிய சினிமாட்டிக் சாபத்தைத் தந்துவிட்டுச் சென்றது!

நான் கடவுள் ஒரு சினிமா அல்ல; அது நம் மூளைக்குள் திட்டமிட்டுச் செலுத்தப்பட்ட ஒரு நெகட்டிவ் வைரஸ். தத்துவத்தின் பெயரால் வன்முறையையும், யதார்த்தத்தின் பெயரால் வக்கிரத்தையும் விற்ற ஒரு டார்க் எக்ஸ்பிரிமெண்ட். சுருக்கமாகச் சொன்னால், இத்திரைப்படம் சமூகத்தின் அழுக்குகளைத் துடைக்க வந்த துடைப்பம் அல்ல; அந்த அழுக்குகளைத் திரையில் காட்டி காசு பார்த்த, தமிழ் சினிமாவின் டார்க் அண்ட் க்ரிட்டி வியாபார உத்தி.

மரணமே ஒரு அவல வாழ்வின் ஆகச்சிறந்த விடுதலை என்றும், கஞ்சா புகைக்கு நடுவேதான் உண்மை ஒளிந்திருக்கிறது என்றும், வக்கிரமும் ரத்தமும் கலந்ததுதான் ஆகச்சிறந்த கலை என்றும் நம்பிய ஒரு இருண்ட, முதிர்ச்சியற்ற வன்முறைச் சமூகமாகத் தமிழர்களை மாற்ற முயன்றதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச் சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

No comments:

Post a Comment