3 Jul 2026

ஒரு குடத் தண்ணீரும் ஒன்பது கொலைகளும்!

ஒரு குடத் தண்ணீருக்குப் பின்னிருக்கும் ஒன்பது பிணங்கள்!

மனித நாகரிகத்தின் தொடக்கமே நதிக்கரைகளில்தான் நிகழ்ந்தது என்கிறது வரலாறு. ஆனால், அதே மனித குலம் தன் நாகரிக முதிர்ச்சியின் உச்சத்தில், ஒரு தெருக் குழாய் தண்ணீருக்காக ஒன்பது உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது.

நெல்லை மாவட்டம் மூலச்சி கிராமத்தில், இரு பெண்களுக்கிடையே ஒரு குடம் தண்ணீர் பிடிப்பதில் தொடங்கிய சாதாரண வாய்த்தகராறு, இன்று ஐந்து வயது பாலகன் உள்பட ஒன்பது மனிதர்களின் குருதியைக் குடித்துவிட்டுத்தான் ஓய்ந்திருக்கிறது.

2006 இல் தொடங்கிய ஒரு சிறு பொறி, இருபது ஆண்டுகாலமாக அணையாத பேரெரிமலையாக மாறியதன் பின்னணியில் இருப்பது பழிக்குப்பழி என்னும் குருட்டுத் தத்துவம்.

சுப்பிரமணியன், முத்துக்குட்டி, குமார், சுப்பையா, பெருமாள் பாண்டியன் எனத் தொடங்கி, இன்று காளிமுத்து மற்றும் அவரது ஐந்து வயது மகன் ஜெயராஜ் வரை இந்த மரணப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இங்கே மரணங்கள் வெறும் எண்கள் அல்ல; அவை மனித ஈகோவின் குறியீடுகள்.

இவ்வுலகில் உயிர்கள் தோன்றுவதற்குக் காரணமான உன்னத சக்தி தண்ணீர். அது ஜீவராசிகளின் தாகத்தைத் தணிப்பது. ஆனால், அதே தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் காட்டிய சகிப்புத்தன்மையின்மை, இன்று ஒன்பது பேரின் தாகத்தை அடக்க முடியாத மரண வெறியாக மாற்றியிருக்கிறது.

ஒரு குடம் தண்ணீரை விட்டுக்கொடுக்க மனமில்லாத மனிதர்கள், இன்று ஒன்பது உயிர்களையும், தங்கள் குடும்பங்களின் நிம்மதியையும், வாழ்நாள்பூராவும் சிறைச்சாலை கம்பிகளுக்குப் பின்னால் கழிக்கப் போகும் எதிர்காலத்தையும் தாராளமாக விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். இதைவிட ஒரு தத்துவ முரண்பாடு மனித வரலாற்றில் இருக்க முடியுமா?

இந்த ஒட்டுமொத்தக் கொடூரத்தின் உச்சக்கட்ட அவலம், ஐந்து வயதுச் சிறுவன் ஜெயராஜின் மரணம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தண்ணீர் குழாயடிச் சண்டை நடக்கும்போது இந்தச் சிறுவன் பிறக்கக்கூட இல்லை. யாருக்கோ, எப்போதோ ஏற்பட்ட வன்மத்திற்கும், ஈகோவிற்கும் இந்த அறியாப் பாலகன் என்ன பாவம் செய்தான்?

இங்கேதான் வன்மத்தின் ஆகப்பெரும் சாபம் வெளிப்படுகிறது. வன்மம் என்பது குற்றம் செய்தவனை மட்டும் அழிப்பதில்லை; அவனோடு தொடர்பிலுள்ள, அவன் வழியில் வரும் அத்தனைப் புனிதங்களையும் சேர்த்துப் பொசுக்கிவிடுகிறது.

எப்போது முடியும் இந்த குருதி ஆட்டம்?

"கண்ணுக்குக் கண் என்று நாம் பழிவாங்கத் தொடங்கினால், இந்த ஒட்டுமொத்த உலகமுமே குருடாகிவிடும்" என்றார் மகாத்மா காந்தி.

மூலச்சிகிராமத்தின் இந்தத் துயரம் நமக்குச் சொல்லும் தத்துவம் ஒன்றுதான். சகிப்புத்தன்மை இல்லாத சமூகத்தில், அமைதி என்பது வெறும் பகற்கனவு.

ஒரு குடம் தண்ணீரை விட, மனித உயிரும் மனிதநேயமும் பெரிது. வன்மத்தை வன்மத்தால் அழிக்க முடியாது, அதை மன்னிப்பாலும் சகிப்புத்தன்மையாலுமே வெல்ல முடியும்.

*****

No comments:

Post a Comment