2 Jul 2026

சாக்லேட் காபி போட்டு சாமானியனைச் சாத்தியெடுத்தல்

சீரழித்த சினிமா – 30

லியோ

சாக்லேட் காபி போட்டு சாமானியனைச் சாத்தியெடுத்தல்

இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டின் ஆயுத பூஜை, தமிழ்ச் சமூகத்தின் கொஞ்ச நஞ்சமிருந்த சிந்திக்கும் திறனுக்கும் ஆயுத பூஜை போட்டு, அதை மொத்தமாகத் திரையரங்கு வாசலிலேயே தீயிலிட்டது.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய நல்ல குடும்பத் தலைவன் பிம்பத்தை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு, "ஒருவன் இமாச்சலப் பிரதேசத்தில் அமைதியாகக் காபி போட்டுக்கொண்டு, பேக்கரி நடத்திக் கொண்டிருந்தாலும், அவனது கடந்த காலம் ரத்தக் களறியான லியோ தாஸாகத்தான் இருக்கும்; அவன் ஒரு தொழிற்சாலையையே வெட்டிச் சாய்க்கலாம்" என்ற ஒரு புதுவிதமான உளவியல் அத்துமீறல் பார்முலாவைத் தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, லியோ திரைப்படத்திற்கு உண்டு.

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது, ஆனால் மனிதன் இன்னும் இருட்டறையில் அமர்ந்து பிறர் வெட்டிக்கொள்வதைப் பார்த்துத் தன் இருப்பை உறுதி செய்துகொள்ளும் விசித்திர விலங்காகவே இருக்கிறான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்தது லியோ.

நாயகனின் அந்த நரைமுடி பிம்பமும், காது ஜவ்வு கிழியும் பின்னணி இசையும், ஹைனா சண்டைக் காட்சியின் கிராபிக்ஸ் மாயையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி காட்டுமிராண்டி நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடும்ப விழுமியம் என்ன தெரியுமா?

நீங்கள் கடந்த காலத்தில் எவ்வளவு பெரிய ரவுடியாக, கொலைகாரனாக, கடத்தல்காரனாக இருந்தாலும் கவலை இல்லை. நிகழ்காலத்தில் தாடியை வளர்த்துக்கொண்டு, சாந்தமாக ஒரு குடும்பத்தை நடத்தினால் போதும். யாராவது உங்களைக் கடந்த காலத்தைப் பற்றிக் கேள்வி கேட்டால், கூசாமல் பொய் சொல்லுங்கள்; மனைவியையும் குழந்தைகளையும் ஏமாற்றுங்கள்; ஆள்மாறாட்டம் செய்யுங்கள்.

படத்தில் வரும் நாயகன், தன் அடையாளத்தை மறைப்பதற்காகச் செய்யும் அத்தனை காரியங்களும் அப்பட்டமான சட்டவிரோதச் செயல்கள். "தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒருவன் தன் ஒட்டுமொத்தக் கடந்த காலத்தையே பொய்களால் கட்டமைக்கலாம்" என்ற ஆபத்தான, நேர்மையற்ற சிந்தனையை இத்திரைப்படம் குடும்பப் பாசம் என்ற போலி லேபிளோடு நியாயப்படுத்தியது.

படத்தின் ஆகச்சிறந்த முரண்பாடு, தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் நாயகன் செய்யும் வன்முறைகள்தான். "என் குடும்பத்தைத் தொட நினைத்தால் ஒட்டுமொத்த ஊரையும் கொளுத்துவேன்" என்ற பாசிச மனோபாவத்திற்கு ஹீரோயிசம் என்று முலாம்பூசி விற்றதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

விளைவு?

நிஜ வாழ்க்கையிலும் "என் சுயநலத்திற்காக நான் எந்தச் சட்டத்தையும் மீறுவேன்" என்று அலையும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறைக்கு அடிமையான பொதுப்புத்தியைத் தமிழர்களிடம் இது இன்னும் ஆழமாக விதைத்தது.

படத்தில் வரும் வில்லன்கள் செய்யும் அநியாயங்களுக்குக் காட்டப்படும் பின்னணி நரபலி மற்றும் சாத்தானியக் கோட்பாடுகள். இருபத்தோராம் நூற்றாண்டின் டிஜிட்டல் யுகத்தில், இன்னும் நரபலி கொடுத்தால் தொழில் வளரும் என்ற அறிவியலற்ற மூடநம்பிக்கையைத் திரைக்கதைக்கான முக்கியக் கருவியாக மாற்றியது டெராபைட் பிற்போக்குத்தனம்!

அறிவியலையும், பகுத்தறிவையும் நோக்கி நகர வேண்டிய ஒரு சமூகத்தில், கமர்சியல் சினிமா தன் பிளாஷ்பேக் விறுவிறுப்பிற்காக இதுபோன்ற வக்கிரமான, பின்தங்கிய மூடநம்பிக்கைகளுக்குப் பிரம்மாண்ட வடிவம் கொடுத்துப் பொதுப்புத்தியைச் சீரழித்தது.

இத்திரைப்படத்தில் நாயகிக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. தன் கணவன் லியோவா இல்லையா என்று அவளுக்குத் தெரியாது; அவளது ஒட்டுமொத்தக் கதையும் கணவனைச் சந்தேகப்படுவதிலும், அவனது பொய்களை நம்பி ஏமாறுவதிலும், அழுகையிலுமே முடிந்துவிடுகிறது.

ஒரு பெண்ணுக்குத் தன் கணவனின் கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் உரிமையோ, அல்லது அவனது வன்முறைகளைக் கேள்வி கேட்கும் ஆளுமையோ கிடையாது. அவள் எப்போதும் கணவனின் அதிகாரப் பாதுகாப்பிற்குள் மட்டுமே முடங்கிக் கிடக்க வேண்டிய ஒரு பலவீனமானப் பொருள் என்ற நிலப்பிரபுத்துவச் சிந்தனையை இத்திரைப்படம் மிக நேர்த்தியாகத் தக்கவைத்தது.

லியோ பாக்ஸ் ஆபீஸில் 600 கோடிகளைக் குவித்து, அதன் நாயகன் மற்றும் இயக்குநரின் பிம்பத்தை அடுத்த கட்டத்திற்குத் தூக்கிச் சென்றிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

லியோ ஏற்படுத்திய சீரழிவு என்பது, வன்முறையை ஒரு லைப்ஸ்டைல் ஆக மாற்றியதுதான். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த சராசரி மனிதன், தன் மனைவியிடம் காபி கேட்கும் போது கூட, பின்னணியில் படாஸ் மியூசிக் ஓடுவதாக மனப்பிராந்தி அடைந்தான். உண்மை என்னவென்றால், நாம் யாரும் லியோ தாஸும் அல்ல, பார்த்திபனும் அல்ல. நாம் அனைவரும் வெறும் டிக்கெட் வாங்கிய ஏமாளிகள் என்பதைத் தமிழனுக்குப் புரிய வைப்பது சிரமமாகப் போனது.

திரையரங்கிற்குள் நுழையும்போது சாதாரண இளைஞனாகச் செல்பவன், வெளியே வரும்போது ஒரு மினி சைக்கோவாக உருவெடுத்திருப்பதுதான் இன்றைய டார்க் சினிமாக்களின் சாதனை. லியோவில் காட்டப்பட்ட அதீத வன்முறை மனித மூளையின் அமிக்டலா பகுதியை வேறிநாய் கணக்காக இயங்கச் செய்தது என்றால் அதில் மிகையேதுமில்லை.

ஒரு காலத்தில் திரையில் இரத்தம் சிந்தினால் கண்கள் தானாக மூடிக்கொள்ளும். இன்று, ஒருவன் மண்டை ஓட்டைச் சுத்தியலால் உடைப்பதைப் பாப்கார்ன் மென்றுகொண்டே வாவ் என்று ரசிக்கும்படி நம் நரம்பு மண்டலம் மரத்துப்போக லியோவும் ஒரு காரணமானது.

லியோ படம் முழுக்கத் துப்பாக்கிகளும், போதைப்பொருள் கடத்தலும், தசரா திருவிழா போலக் கொண்டாடப்பட்டன. "கெட்ட வார்த்தை பேசினால் மாஸ், ரத்தம் சிதறினால் க்ளாஸ்" என்கிற புதிய சமூகப் பொதுப்புத்தியை லியோ உருவாக்கியது.

திரையரங்கு இருக்கைகளை உடைப்பது, சமூக வலைத்தளங்களில் வசைபாடுவது, நான் ரெடி என்று போதை கலாச்சாரப் பாடலுக்குப் பள்ளிச் சீருடையுடன் ரீல்ஸ் செய்வது எனச் சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப்பைச் சிதைத்ததில் லியோவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

டெஸ்கார்ட்ஸ் "நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்" என்பார். லியோ அதை "நான் வெட்டுகிறேன், ரத்தம் சிதறுகிறது, எனவே என் இருப்பு உறுதி செய்யப்படுகிறது" என்று இயங்கியது படம் பார்ப்பவர்களை வன்முறை மிருகங்களாக மனதளவில் மாற்றியது.

சட்டம், ஒழுங்கு, அறம் எல்லாமே ஒரு தனிமனிதனின் மாஸ் இமேஜுக்கு முன்னால் மண்டியிட வேண்டும் என்றும், "விதிகள் சாமானியர்களுக்கு மட்டுமே, லியோக்களுக்கு அல்ல" என்றும் சமூகக் கட்டமைப்பை மெல்ல அரிக்கும் கருத்துக் கரையான்களை உற்பத்தி செய்து புற்றுநோயைப் போல பரவ விட்டது லியோ.

அமைதியாக வாழ நினைக்கும் ஒருவன், தன் குடும்பத்தைக் காப்பாற்ற நூறு பேரைக் கொல்லலாம் என்கிற விஜிலாண்டி மனப்பான்மையை வளர்த்ததோடு, சட்டம், ஒழுங்கு, போலீஸ் எல்லாமே வேடிக்கை பார்க்கும் டம்மிகள் என்கிற எண்ணத்தை நியாயப்படுத்தியதுதான் லியோ படத்தின் சாதனை.

சினிமா என்பது சமூகத்தின் கண்ணாடி என்பார்கள். லியோ போன்ற படங்கள் காட்டும் கண்ணாடி கொஞ்சம் உடைந்து, கூர்மையான முனைகளுடன் பார்ப்பவர்களைப் பதம் பார்க்கும் கலவரக் கண்ணாடி.

திரையில் பாய்ந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகளின் விஞ்ஞானம் வளர வளர மனிதனின் நிதானம் குறைகிறது என்பதற்கு இந்தப் படத்திற்கு வரும் சண்டைக் கூட்டமே சரியான சாட்சி.

மேலும், நரகத்தின் கதவுகள் திரையரங்குகளின் வடிவில் திறக்கப்பட்டிருக்கின்றன. அங்கே விற்கப்படும் பாப்கார்னின் விலையை விட, மனித உயிர்களின் விலை குறைவாக இருக்கிறது என்பதற்கும் இப்படமே அக்மார்க் சாட்சியம்.

ஆல்பர் காம்யூவின் தி ஸ்ட்ரேஞ்சர் நாவலின் நாயகன், வெயில் அதிகமாக இருந்தது என்பதற்காகக் கொலை செய்வான். லியோவில், "என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், அல்லது என் கடந்த காலத்தை மறைக்க வேண்டும்" என்று கொலைக்கு மேல் கொலைகள் செய்து வன்முறைக்குக் கற்பித்த நியாயம் என்பது அநியாயம் என்று சொல்வதை விட அபத்தமானது. அந்த அபத்தத்தைத்தான் தமிழகமே கூடிக் கொண்டாடி திரையரங்க இருக்கைகளைப் பீஸ் பீஸாக்கிப் பஞ்சுப் பஞ்சாகப் பறக்க விட்டுக் கொண்டாடியது.

மனிதன் தன் அன்றாட வாழ்க்கையின் சலிப்பிலிருந்தும், அர்த்தமற்ற தன்மையிலிருந்தும் தப்பிக்க ஒரு போலி உலகத்தைத் தேடுகிறான். தியேட்டரின் இருட்டில், ஸ்கிரீனில் ஒரு நாயகன் கையில் கத்தியோடு நூறு பேரைக் கொல்லும்போது, முன்னால் அமர்ந்திருக்கும் இளைஞன் தன் சொந்தத் தோல்விகளை மறந்து, அந்த வன்முறையோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். இது ஒரு வகையான மனநல தற்கொலை. தன் சுயத்தை இழந்து, திரையின் வன்முறையில் தன் இருப்பைத் தேடும் அந்த அவலத்தைப் பலமாகச் சந்தைப்படுத்தித் தன் கல்லாவை நிரப்பிக் கொண்டது லியோ.

குடும்பத்தைக் காப்பது என்ற பெயரில் வன்முறையைக் கையாள்வதைக் கெத்து என்றும், தன் அடையாளத்தை மறைக்கப் பொய் சொல்வதைப் புத்திசாலித்தனம் என்றும், சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்காமல் வாழ்வதே படாஸ் வாழ்க்கை என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற போதை சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

No comments:

Post a Comment