சீரழித்த சினிமா – 29
ஜெயிலர்
தலை துண்டிப்பு ஒரு கலை – ஹுகும் தத்துவத்தின் தொடக்கம்
இரண்டாயிரத்து
இருபத்து மூன்றாம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச
அமைதிக்கும், நிம்மதிக்கும், சமூக பாதுகாப்பு உணர்வுக்கும் ஒட்டுமொத்தமாக வேட்டு வைத்து
பொக்ரான் அணுகுண்டைப் போட்டுத் தள்ளியது ஜெயிலர் திரைப்படம்.
தமிழ்
சினிமா அதுவரை காட்டிய "ஓய்வுபெற்ற வயதான தாத்தாக்கள் பேரன் பேத்திகளோடு பூங்காவிற்குப்
போய் அமைதியாக வாழ வேண்டும்" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "முன்னாள்
ஜெயில் அதிகாரி நினைத்தால், ஓய்வு காலத்தில் தன் வீட்டின் சமையலறையிலேயே வில்லனின்
ஆட்களைத் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைத்தெடுத்து கரம் மசாலா போட்டு பிரியாணி
செய்யலாம்" என்ற ஒரு புதுவிதமான முதிய வயது வக்கிர அத்துமீறலை தமிழனின் பொதுப்புத்தியில்
ஏற்றிய பெருமை, ஜெயிலர் திரைப்படத்திற்கு உண்டு.
நாயகனின்
அமைதியான, அதேசமயம் ஆபத்தான பிம்பமும், காது ஜவ்வு கிழியும் ஹுகும் என்ற பின்னணி இசையும்,
காவாலா நடனப் போதையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கசாப்புக்
கடை நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.
இத்திரைப்படம்
தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடிமையியல் கல்வி என்ன தெரியுமா?
நீங்கள்
காவல்துறையிலோ அல்லது சிறைத்துறையிலோ உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றால் போதும்;
உங்களுக்கு நாட்டின் சட்டதிட்டங்களோ, நீதிமன்றங்களோ, தற்போதைய போலீஸோ தேவையில்லை. உங்கள்
மகனுக்குப் பிரச்சினை என்றால், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருக்கும் உங்கள்
பழைய கிரிமினல் நண்பர்களைப் போனில் கூப்பிட்டு, சொந்தமாக ஒரு துணை ராணுவப் படையையே
உருவாக்கி, ஊரிலிருக்கும் அத்தனை பேரையும் போட்டுத் தள்ளலாம் அல்லது கொல்லலாம்.
படத்தில்
வரும் நாயகன், சட்டத்தைக் காக்க வேண்டிய சிறைத்துறையில் இருந்தவர். ஆனால், அவர் சட்டத்தைக்
கையில் எடுக்கும் வேகம் இருக்கிறதே, அது எந்த ஒரு சர்வதேச பயங்கரவாதிக்கும் குறைவானது
அல்ல. ஜெயிலர் என்பவர் சிறைக் காவலர், படத்தில் அவர் செய்யும் கொலைகளைப் பார்க்கும்
போது அவரை அப்படிச் சொல்ல முடியாது, எமதர்மனின் ஆதரவாளர் என்றுதான் சொல்ல முடியும்.
ஒரு
தந்தை தன் மகனைக் காப்பாற்றவோ அல்லது பழிவாங்கவோ எந்த எல்லையற்ற வன்முறையையும் கையாளலாம்;
அதற்குப் பழைய குற்றவாளிகளின் துணையைப் பெறலாம், என்ற வன்முறையான சிந்தனையை இத்திரைப்படம்
மிக நளினமாக நியாயப்படுத்தியது.
இப்படத்தின்
ஆகச்சிறந்த கலாச்சாரப் பங்களிப்பு என்னவென்றால், வன்முறையையும் குரூரத்தையும் நகைச்சுவையோடு
கலந்து கமர்ஷியலாக விற்றதுதான்.
வில்லனின்
ஆட்கள், நாயகனின் வீட்டின் சமையலறைக்குள் புகுந்து மிரட்டும்போது, அவர்களை மிகச் சாதாரணமாகத்
துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைத்து கைம்மா பரோட்டா போடுவது போல அவர்களை
அழிய வைப்பார் நாயகன். மேலும், தன்னை இழிவுபடுத்தும் வில்லனின் ஆளைச் சர்வ சாதாரணமாகத்
தலையைத் துண்டித்து எவ்வித அதிர்ச்சியுமில்லாமல் நிற்பார் நாயகன். இந்த உறைபனியூட்டும்
கொடூரத்தைக் காட்டிவிட்டு, பின்னணியில் ஒரு நகைச்சுவை நடிகரை வைத்து காமெடி செய்வார்
இயக்குனர்.
கொலையையும்,
பிணங்களை மறைப்பதையும் ஏதோ வீட்டில் சமையல் செய்வது போன்ற ஓர் எளிய தினசரி காரியமாக
மாற்றிக் காட்சிப்படுத்தி, பார்ப்பவனுக்கு வன்முறையின் மீதான பயத்தையே துடைத்து எறிந்ததுதான்
இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.
விளைவு?
நிஜ
வாழ்க்கையில் வன்முறையைப் பார்த்து அருவருப்படைய வேண்டிய சமூகம், துண்டு துண்டாக வெட்டப்படும்
காட்சிகளைக் கண்டு திரையரங்கில் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்கும்
ஒரு மிருகத்தனமான பொதுப்புத்தியை வளர்த்துக்கொண்டது.
படத்தின்
கிளைமாக்ஸ் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், தன் மகன் ஊழல்வாதியாக,
கடத்தல்காரனாக மாறிவிட்டான் என்று தெரிந்ததும், நாயகன் தன் சொந்த மகனையே சுட்டுக் கொல்ல
சைகை காட்டுவார். இதை ஏதோ நேர்மையின் உச்சகட்டத் தியாகம் என்பது போலச் சினிமா கொண்டாடும்.
ஆனால்
கூர்ந்து கவனித்தால், அது நேர்மை அல்ல; அது ஒரு முதிய ஆணின் ஈகோ. "என் வளர்ப்பு,
என் பாரம்பரியம், என் நேர்மையான பிம்பத்திற்கு என் மகனே களங்கம் விளைவிப்பதா?"
என்ற சுயநலப் பெருமிதத்திற்காகத் தன் மகனைத் தீர்த்துக் கட்டுவதைக் கௌரவமாகக் காட்டியது
இத்திரைப்படம்.
குடும்ப
உறவுகளுக்குள் பகுத்தறிவோ, சட்டபூர்வமான திருத்தங்களோ இல்லாமல், "என் கௌரவத்திற்காக
நான் எதையும் செய்வேன்" என்ற நிலப்பிரபுத்துவக் கௌரவக் கொலை அதாவது, ஆணவக்கொலை
மனோபாவத்திற்கு இது மிக நுணுக்கமாகப் பட்டுவாடா செய்யப்பட்ட ஆதரவு இது.
வழக்கமான
கமர்ஷியல் தமிழ்ப் படங்களைப் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட
வேலை மிகவும் பரிதாபகரமானது. படத்தின் முக்கியக் கதையோடு எந்தச் சம்பந்தமும் இல்லாமல்,
படத்தின் வியாபாரத்திற்காக காவாலா என்ற பாடலுக்கு ஒரு முன்னணி நாயகியைக் கவர்ச்சிப்
பதுமையாக ஆட வைத்தும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எந்த செய்திகளும் தெரிய வேண்டாம்
என அவர்களை ஜாடிக்குள் அடைபட்ட ஊறுகாய்களாக்கியும் பெண்களின் ஆளுமையை அடியோடு மழுங்கடித்தது
இத்திரைப்படம்.
ஜெயிலர்
பாக்ஸ் ஆபீஸில் 600 கோடிகளைக் குவித்து, சூப்பர் ஸ்டார் என்ற பிம்பத்தை மீண்டும் இமயமலையில்
ஏற்றி, அதன் இயக்குநரை ஸ்டார்களுக்கான இயக்குநர் எனப் பிராண்டிங் பண்ணியிருக்கலாம்.
ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?
அறுபது
வயதைக் கடந்த முதியவர்கள் சத்தம் போடாமல், பூனைக்கு உணவளித்துக் கொண்டு, பேரக் குழந்தைக்குக்
குடை பிடித்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பது பழைய விதி. ஆனால், இந்தத்
படம் அதை உடைத்தது.
அதன்
விளைவாக வீட்டில் இருக்கும் தாத்தாக்களைப் பார்க்கும்போது பேரன்மார்களுக்கு ஒரு பயம்
கலந்த மரியாதை வரத் தொடங்கியது. "எங்க தாத்தாவும் முன்னாள் சி.பி.ஐயோ, ஜெயிலரோ
ஆக இருந்திருப்பாரோ? அலமாரிக்குள் ஏதேனும் ரகசியத் துப்பாக்கி இருக்குமோ?" என்கிற
தேடல் சிறுவர்களிடம் அதிகரித்தது. சுருக்கமாகச் சொன்னால், ரிட்டயர்ட் ஆனவர்களுக்கான
சமூக அந்தஸ்தை இந்தப் படம் ஒட்டுமொத்தமாக வயலன்டாக ரீபிராண்ட் செய்தது.
மேலும்,
ஜெயிலர் திரைப்படத்திற்குப் பின் எந்த தாத்தாவும் பேரனுக்குக் கதை சொல்வதில்லை; மாறாக,
"தம்பி, தாத்தா ஒரு காலத்துல திஹார் ஜெயில்ல..." என்று பிளாஷ்பேக் மூட்டையைக்
அவிழ்க்க ஆரம்பித்தார்கள். அத்துடன் வீட்டில் காய்கறி நறுக்கும் கத்தியைப் பார்க்கும்போதெல்லாம்,
தங்களுக்குள் ஒரு காட்டுக்கட்டாரி ஒளிந்திருப்பதாக முதியவர்கள் நம்பத் தொடங்கினர்.
ஒரு
காலத்தில் வில்லன் அடித்தால் ஹீரோ அழுவான். பிறகு ஹீரோ அடித்தால் வில்லன் பறப்பான்.
ஜெயிலர் படத்தில் காட்டியிருப்பது வேறு ரகம். இரத்தம் சிந்துவது என்பது ஒரு கோரமான
விஷயம் என்பதிலிருந்து தலையை எந்தவித அதிர்ச்சியுமில்லாமல் துண்டிப்பது வரை, அது அதிரடி
பிஜிஎம்மோடு வரும்போது ஒரு கொண்டாட்டம் என்ற நிலைக்கு தமிழனின் மூளை பக்குவப்படுத்தப்பட்டது
இத்திரைப்படம் தந்தச் சாபக்கேடே.
உளவியல்
ரீதியாக, ஒரு மனிதனின் தலை துண்டிக்கப்பட்டு விழும்போது தியேட்டரே எழுந்து நின்று கியூட்
ஆக ஹுகும் என்று கத்தும் அளவுக்கு சமூகத்தின் வன்முறை சார்ந்த சகிப்புத்தன்மை மோசமானது
ஜெயிலரின் மாஸ்டர் ஸ்ட்ரோக் அன்ட் பிரேக். இது ஓர் ஆபத்தான உளவியல் மாற்றம். வன்முறை
அங்கே கொடூரமாகத் தெரியவில்லை; அது ஒரு ஸ்டைல் ஆக, மாஸ் ஆக மாற்றப்பட்டிருந்தது. ரத்தமும்
சதையும் திரையில் தெறிக்கும்போது, அது நம் நரம்பு மண்டலத்தை வதக்குவதற்குப் பதிலாக,
ஒருவிதக் களிப்பை ஏற்படுத்தியது. இது சமூகத்தின் மழுங்கிப்போன உணர்வெல்லைக்கு ஒரு சான்று.
சமூகத்தில்
அமைதியாக, அடக்கமாக இருக்கும் மனிதர்களைக் கண்டால். "அவன் ரொம்ப அமைதியா இருக்கான்டா...
கண்டிப்பா பின்னாடி நாலு மாநிலத்துல அவனுக்கு நெட்வொர்க் இருக்கும்!" என்ற சந்தேகப்
புத்தி சமூகத்தில் பரவத் தொடங்கியது ஜெயிலர் ஏற்படுத்திய ஸ்பாய்லர்.
"வயதானாலும்
என் ஸ்டைலும் அழகும் இன்னும் போகவில்லை" என்று இப்படத்தின் நாயகர் நிரூபித்தாரோ
இல்லையோ, "வயதானாலும் நம் சமூகத்தின் வன்முறை வெறியும், மாஸ் ஹீரோ வழிபாட்டு மனநிலையும்
இன்னும் போகவே இல்லை" என்பதை ஜெயிலர் நிரூபித்தது.
ஜெயிலர்
தமிழ் சமூகத்திற்குப் பெரிய தத்துவப் பாடம் எதையும் நடத்தவில்லை. மாறாக, தமிழனுக்குள்
தூங்கிக்கொண்டிருந்த ஆதிக்க மனப்பான்மை வயதான பின்னும் வெல்லலாம் என்ற நம்பிக்கை, மற்றும்
வன்முறையை ரசிக்கும் விசித்திர குணம் ஆகியவற்றைத் தூண்டி விட்டது.
சிறைச்சாலை
அதிகாரிகள் என்பவர்கள் கிரிமினல்களோடு கைகுலுக்கும் தாதாக்கள் என்றும், சட்டத்தை மீறிச்
செய்யப்படும் படுகொலைகள் டைகரின் கட்டளை என்றும், குரூரமான வன்முறையை ரசிப்பதே ஆகச்சிறந்த
திரையரங்கு அனுபவம் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ஆசிட் சமூகமாகத்
தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!
*****

No comments:
Post a Comment