2 Jul 2026

இருளின் தத்துவமும், வெளிச்சத்தின் விலையும்!

இருளின் தத்துவமும், வெளிச்சத்தின் விலையும்!

இருட்டு என்பது வெளிச்சத்தின் இல்லாமை என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால் தமிழ்நாட்டுக்கோ, இருட்டு என்பது கோடைக்காலத்தின் வருகைக்கான உத்தரவாதம்.

சுவிட்ச் போட்டால் விளக்கு எரிய வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் சுவிட்ச் போட்டவுடன், 'இன்று மின்சாரம் வருமா வராதா?' என்று யோசிக்க வைப்பதுதான் நம் ஊர் தத்துவம்.

தமிழகத்தில் கோடைக்காலம் வந்துவிட்டாலே மின்சாரம் போய்விடுகிறது என்பது செய்தி அல்ல; அது ஒரு பிரபஞ்ச விதி.

வெயில் காலத்தில் மனிதர்களுக்குக் குளிர்ச்சி தேவைப்படுகிறது. குளிர்ச்சிக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. பிரபஞ்சமோ சமநிலையை விரும்புகிறது. எனவே, நீங்கள் ஏசியை ஆன் செய்யும்போது, மின்வாரியம் மெதுவாக மெயின் சுவிட்சைக் கீழிறக்கி 'ஓம் சாந்தி' என்கிறது.

விஞ்ஞானம் மனிதனை நிலவுக்கு அனுப்பியது. ஆனால், மின்சார வாரியமோ மனிதனை விசிறியோடு வீட்டு வாசலுக்கு அனுப்புகிறது. இரண்டுமே ஒரு வகையான பயணம்தான்!

விளைவு?

மக்கள் சாலையில் இறங்கி மறியல் செய்கிறார்கள். இருட்டில் அமர்ந்து பேசுவதை விட, கொளுத்தும் வெயிலில் சாலையில் நின்று கத்துவது அவர்களுக்கு ஆறுதல் தருகிறது போலும். அரசியல் மாறினாலும் அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் மாறுவதில்லையே, அப்புறம் ஏன் இந்த அதிர்ச்சி? என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறதா?

உலகில் குறிப்பாகத் தமிழகத்தில் புள்ளிவிவரங்கள் எப்போதும் சுவாரசியமானவை. அவை எதையும் தீர்ப்பதில்லை, ஆனால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

தமிழகத்தில் உள்ள மொத்த மின் இணைப்புகள்: 3,52,80,929 அதாவது, வீடு, கொட்டகை, குடோன், விசைத்தறி எல்லாம் சேர்த்து.

தமிழகத்தின் கோடைக்காலத் தேவை 21,000 மெகாவாட்.

நம்மிடம் இருப்பதாகக் காகிதத்தில் உள்ள அளவு 47,238 மெகாவாட். தேவையை விட 26,000 மெகா வாட் அதிகம்தான். ஆனால், அது எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் ஹாலோ மேனைத் தேடுவதைப் போல கஷ்டம் பிடித்த வேலை.

சரி, மின்வெட்டு என்றால் அதற்கு ஏதேனும் ஒரே ஒரு காரணமாவது இருக்க வேண்டுமே.

ஏகப்பட்ட காரணங்கள் இருப்பதாக விளக்கங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அவற்றுள் சில,

வெயில் தாங்காமல் மின்மாற்றிகள் தற்கொலை செய்துகொள்வது, நிலத்தடி கேபிள்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது, அதையும் தாண்டி, முந்தைய ஆட்சியின் பாவங்கள், மரக்கிளைகள் மின்கம்பிகளை முத்தமிடுவது, மற்றும் சில மர்ம நபர்கள் நள்ளிரவில் வந்து பியூஸ் கேரியர்களைத் திருடிச் செல்வது.

இந்தக் கடைசி காரணம்தான் கொஞ்சம் இடிக்கிறது. பியூஸ் கேரியரைத் திருடிச் சென்று அவர்கள் என்ன செய்வார்கள்? அதை வைத்து ஏதேனும் புதிய கலைப்படைப்பு உருவாக்குகிறார்களா என்பது பிரபஞ்சத்திற்கே வெளிச்சம்

நாம் இன்னும் இருண்ட காலத்திற்குள் சென்று விடவில்லை என்பதே தத்துவார்த்தமாக நமக்கு உள்ள ஒரே ஆறுதல்.

இப்போதிருக்கும் நிலையில் நாம் என்னதான் செய்வது?

மெழுகுவர்த்திகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இருள் என்பது ஒளியின்மை மட்டுமல்ல, அது சுயசரிதை எழுதிக்கொள்ள ஒரு நல்ல சூழல். நமது எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்! என்ன செய்யப் போகிறோம் நாம் என்பதற்கான பதில் நம்மிடமே இருக்கிறது.

*****

No comments:

Post a Comment