10 செகண்ட் மனிதர்கள்
இரவு 10:00 மணி.
நவீன் தன் அறையில் கைப்பேசி திரையை
வேகமாக ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தான்.
திடீரென ஒரு 10 விநாடி காணொளி
அவன் கவனத்தை ஈர்த்தது. வீட்டின் வாசலில் நிற்கும் வயதான தாத்தாவை, ஒரு வாலிபன் மரக்கட்டையால்
ஓங்கி அடிப்பது போன்ற காட்சி அது!
நவீனுக்கு ரத்தம் கொதித்தது.
"என்ன மிருகத்தனம்! இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது!" என்று ஆத்திரத்துடன்
பொங்கி, "இவனை உடனடியாக கைது செய்ய வேண்டும்!" என்று காட்டமான கருத்தைப்
பதிவிட்டு, அந்த காணொலியை ஆயிரக்கணக்கானோருக்குப் பகிர்ந்தான்.
சில நிமிடங்களில், இணையமே அந்த
வாலிபனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கி கொந்தளித்தது.
நவீனுக்குத் தான் ஏதோ மிகப்பெரிய
சமூகப் புரட்சி செய்துவிட்டதாக ஒரு பெருமிதம்.
அடுத்த அரை மணி நேரத்தில் நவீனின்
கைப்பேசியில் ஒரு செய்தி அதிர்வு வந்தது. அதே சம்பவத்தின் முழு காணொளி!
அதைப் பார்த்த நவீன் உறைந்துபோனான்.
உண்மையில் அந்த தாத்தா மின்சாரக் கம்பியைத் தொட்டு அதிர்ச்சியில் துடித்துக்கொண்டிருந்தார்.
அருகில் இருந்த அந்த வாலிபன், தன் உயிரைப் பொருட்படுத்தாமல், கையில் கிடைத்த மரக்கட்டையால்
அடித்து தாத்தாவை மின்சாரத் தொடர்பில் இருந்து காப்பாற்றியிருக்கிறான்!
தன் அவசரப் புத்தியை நினைத்து
நவீனுக்கு வெட்கமாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. உடனே தன் பதிவை நீக்கிவிட்டு,
அந்த வாலிபனின் வீரம் மற்றும் மனிதநேயத்தைப் பாராட்டி, "உண்மையான கதாநாயகன் இவன்தான்!"
என்று நெகிழ்ச்சியோடு புதிய பதிவு ஒன்றைப் போட்டான்.
மனம் லேசான திருப்தியுடன், யாரையும்
தவறாக எடைபோடக் கூடாது என்ற உயரிய சிந்தனையோடு கைப்பேசியை அணைத்துவிட்டு உறங்கச் சென்றான்
நவீன்.
மறுநாள் காலை.
நவீனின் வீட்டு வாசலில் பலத்த
கூச்சல் சத்தம். கதவைத் திறந்தவனுக்குப் பேரதிர்ச்சி! வெளியே காவல்துறையும், முகத்தில்
காயங்களுடன் அந்த வாலிபனும் நின்றிருந்தனர்.
காவல்துறை அதிகாரி நவீனிடம்,
"தம்பி, நேற்று இரவு இந்த ஆளைப் பாராட்டி ஒரு பதிவு போட்டீங்களே. அதுக்குப் பிறகுதான்
இந்த ஆள் பழக்கம் இல்லாத வயசான தாத்தாவைத் தாக்கிப் பணத்தைப் பறிச்ச வழக்கில் தேடப்படும்
குற்றவாளின்னு எங்களுக்குத் தெரிஞ்சது. நீங்க போட்ட வீடியோ ஆதாரத்தை வச்சுதான் இவனைக்
கைது செஞ்சோம். ரொம்ப நன்றி!" என்றார்.
கைப்பேசித் திரையில் தெரியும்
பாதி உண்மையை வைத்து முதல் தீர்ப்பு எழுதிய நவீன், இப்போது கிடைத்த இன்னொரு பாதி உண்மையை
வைத்து இரண்டாவது தீர்ப்பையும் எழுதி ஏமாந்திருந்தான்!
அரைகுறைத் தகவல்கள் நிறைந்த காணொளி
உலகில், உண்மையின் முகம் எத்தனை முகமூடிகளை அணிந்திருக்கும் என்பதை நினைத்து நவீன்
ஸ்தம்பித்து நின்றான்.
*****

No comments:
Post a Comment