தேர்தல் அரசியல் – ஒரு காஸ்ட்லி திருவிழா!
தேர்தல்
தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ்நாட்டில் ஒருவிதமான ஹார்மோன் சுரக்க ஆரம்பித்துவிடுகிறது.
வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டால் போதும், தெருவெங்கும் வேட்பாளர்கள் பல்லைக் காட்டியபடி
உங்கள் கைகளைப் பிடித்துக் குலுக்க அலைவார்கள். ஆனால், இந்தத் தரையிறங்கிச் செய்யும்
வேலையை விட, உங்கள் தலைக்குள் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் போலத் தகவல்களை ஏற்றும் வேலையை
ஊடகங்கள்தான் கச்சிதமாகச் செய்கின்றன.
அகில
இந்திய அளவில் பார்த்தால் தேர்தல் ஹாட் வேவ்ஸில் தொலைக்காட்சிதான் முதலிடம், பத்திரிகை
இரண்டாம் இடம், ரேடியோ மூன்றாவது இடம். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு விசேஷம் உண்டு. இந்திய
சராசரியை விட நாம் இந்த ஊடகங்களை இரண்டு மடங்கு அதிகமாகப் பயன்படுத்துகிறோம். அதாவது,
மற்றவர்கள் ஒரு முறை செய்தியைப் பார்த்தால், நாம் இரண்டு முறை பார்த்துவிட்டு, அதில்
மூன்றாவதாக ஒரு உள்நோக்கத்தையும் தேடிக் கண்டுபிடிப்போம்.
முன்பெல்லாம்
தேர்தல் காலங்களில் தூர்தர்ஷனில் அரசியல் தலைவர்கள் வந்து உட்கார்ந்து, ஸ்கிரிப்ட்
வாசித்துவிட்டுப் போவார்கள். அது ஒரு பிளாக் அண்ட் ஒயிட் காலத்து அமைதிப் புரட்சி.
ஆனால் இப்போது அப்படியல்ல, தனியார் சேனல்களும், எப்.எம் ரேடியோக்களும் தேர்தல் காலத்தைச்
சில ஆயிரம் கோடிகளுக்கான அறுவடைக்காலமாக மாற்றியிருக்கின்றன.
2021இல்
மெதுவாக எட்டிப்பார்த்த டிஜிட்டல் பிரசாரம், 2024இல் விஸ்வரூபம் எடுத்து, இப்போது
2026 சட்டமன்றத் தேர்தலில் நம் போன் திரையையே கிழித்துக்கொண்டு வெளியே வரும் அளவுக்கு
வளர்ந்திருக்கிறது.
யூடியூப்
ஒரு பக்கம் இருக்கட்டும், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில்
தமிழர்களாகிய நாம் அகில இந்தியாவையே ஓவர்டேக் செய்து கொண்டிருக்கிறோம்.
விளம்பரம்
என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் காட்டிவிட முடியாது. தேர்தல் ஆணையத்திடம் அனுமதிச்
சான்றிதழ் வாங்க வேண்டும். தனிநபர் தாக்குதல், ஆபாசம், வன்முறை போன்ற மசாலாக்கள் இருந்தால்
கமிஷன் கத்திரிக்கோல் போடும்.
அதற்குட்பட்டு,
அதன்படி ஒவ்வொரு கட்சியும் தேர்தல் முடிந்ததும், நாங்கள் இவ்வளவுதான் அட்வர்டைஸ்மென்ட்
செலவு செய்தோம், என்று ஒரு பட்டியலைத் தரும். அது நம்பினால் நம்புங்கள் ரகம்தான் என்றாலும்
அந்தச் செலவுத்தொகையே உங்களை மயங்கடிக்கும்.
இந்தச்
செலவு கணக்குகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று நீங்கள்
யோசித்தால், உங்கள் அரசியல் அறிவு அபாரமானது!
ஆட்சிகள்
மாறலாம், ஊடகங்கள் மாறலாம், ஆனால் விளம்பரங்களுக்காகக் கொட்டப்படும் கோடிகள் மட்டும்
ஒவ்வொரு முறையும் வீக்கம் கண்டு கொண்டே இருக்கின்றன.
நாம்
அந்த விளம்பரங்களைப் பார்த்துவிட்டு, ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, மீண்டும் அதே மிக்ஸி,
கிரைண்டர், ப்ரிட்ஜ், உரிமைத்தொகை, விலையில்லா கூப்பன் என வாக்குறுதி சுழற்சிக்குள்
சிக்கிக்கொள்கிறோம்.
அடுத்தமுறை
உங்கள் போனில் ஒரு விளம்பரம் வரும்போது, அதன் ஓரத்தில் இருக்கும் அனுமதி எண்ணைப் பாருங்கள்.
அது வெறும் எண் அல்ல, அது அந்த விளம்பரத்திற்காகச் செலவழிக்கப்பட்ட உங்கள் உரிமையின்
விலைப்புள்ளி. உங்கள் காசை எடுத்து உங்களுக்கே வைக்கப்பட்ட சூன்யம் அது என்பதைப் புரிந்து
கொண்டால், ஜனங்களும் தப்பித்துக் கொள்வார்கள். ஜனநாயகமும் தப்பித்துக் கொள்ளும்.
*****

No comments:
Post a Comment