பட்டாசு, சாவு மற்றும் சில அனுமதிகள்!
ஏப்ரல் 18 – ஞாயிற்றுக் கிழமை.
விருதுநகர் அருகே ஒரு தனியார் பட்டாசு ஆலையில்
திடீரென வெடி விபத்து ஏற்பட்டு 25 பேர் இறந்திருக்கிறார்கள். வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை நாளில். ஆலை உரிமையாளரின் லாப வெறிக்கு விடுமுறை இல்லாததால், தொழிலாளர்கள்
சரவெடி தயாரிப்பில் மும்முரமாக இருந்திருக்கிறார்கள்.
சரியாக 3.30 மணி. ஒரு அறையில் உராய்வு ஏற்பட,
அது சங்கிலித் தொடராக அடுத்தடுத்த மூன்று அறைகளையும் தரைமட்டமாக்கியிருக்கிறது.
முடிவு?
25 பேர் மரணம்.
இதில் 21 பேர் பெண்கள் அக்காள், தங்கை உட்பட.
பட்டாசு ஆலைகளில் தீக்குச்சிகளை விட மலிவானது
ஏழைத் தொழிலாளர்களின் உயிர்தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் இடிபாடுகளை
அகற்ற பொக்லைன் கொண்டு வந்த போது, அங்கிருந்த எஞ்சிய' மருந்துகள், நாங்கள் இன்னும்
இருக்கிறோம் என்று நினைவூட்டும் விதமாக மீண்டும் வெடித்தன. இதில் உதவி தீயணைப்பு அலுவலர்,
பெண் காவலர்கள் என மேலும் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்கள்.
வழக்கமான சம்பிரதாயப்படி மேலிடத்திலிருந்து
இரங்கல்கள் மழையாய் பொழிந்தன. குடியரசுத் தலைவர் கவலையளிக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
பிரதமர் மிகுந்த வருத்தப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் மனவேதனை அடைந்திருக்கிறார்.
முதல்வர் வேதனையளிப்பதாகக் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் அமைச்சர் ஒரு முக்கியமான பாயிண்டாக,
நிவாரணம் கொடுக்க ஆசைதான், ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் குறுக்கே நிற்கிறதே என்றிருக்கிறார்.
அதாவது, உயிர்கள் போயிருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதிச் சீட்டு கிடைத்தால் ஒழிய,
அந்தப் பிணங்களுக்கு விலை பேச முடியாது என்கிற எதார்த்தத்தைச் சொல்லியிருக்கிறார்.
வெடிவிபத்து நடந்த ஆலையின் உரிமையாளர் ஈஸ்வரி
என்பவர் முன்னாள் ஊராட்சித் தலைவர் மனைவி என்பதால் இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
அதை விட இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால்,
கடந்த ஆண்டுதான் இந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாம். அப்புறம்
எப்படி மீண்டும் அனுமதி கிடைத்தது?
இதற்கு என்ன பதில் சொல்வது?
இந்தியாவின் மிகச்சிறந்த மாயாஜால வித்தையான
ஊழல் அல்லது அலட்சியம் என்று பதில் சொல்வதா? விருதுநகர் என்றாலே அப்படித்தான் என்று
பதில் சொல்வதா?
ஒரே அறையில் 30 பேரை அடைத்து வைத்து வேலை வாங்கியிருக்கிறார்கள்.
இப்போது வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து, ஞாயிற்றுக்கிழமை ஏன் வேலை செய்தார்கள்?
என்று தீவிரமாக, அதாவது தேர்தல் முடியும் வரை விசாரிப்பார்கள்.
இதனால் அறிய வருவது என்னவென்றால், நீங்கள்
தீபாவளிக்கு வெடிக்கும் ஒவ்வொரு சரவெடியிலும் யாரோ ஒரு தொழிலாளியின் சாம்பல் கலந்திருக்க
வாய்ப்பிருக்கிறது.
உண்மை கசக்கும் என்றாலும் உண்மை இதுதான். தீபாவளி
இனிப்புகளில் அந்தக் கசப்புகள் மறைந்து போகுமோ என்னவோ!
*****

No comments:
Post a Comment