தேர்தல் 2026 – ஜெயிக்கப்
போவது யாரு?
தமிழகம் இந்தத் தேர்தலில் ஒரு விசித்திரமான மசாலா தோசையைப்
போல வெந்து கொண்டிருக்கிறது. அதற்குத் தகுந்தாற் போல கோடை வெயில் வேறு போட்டு
பொளக்கிறது. இதுவரை இட்லியா அல்லது தோசையா? என்று கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களிடம்,
திடீரென்று யாரோ ஒருத்தர் பீட்சாவைக் கொண்டு வந்து நீட்டியிருக்கிறார். அது யார்
என்று கண்டுபிடிக்க வேண்டியது உங்களுக்கான குறுக்கெழுத்துப் புதிர்.
இப்படியெல்லாம் பீடிகைப் போடாமல் நேரடியாக விசயத்திற்கு
வந்தால் நிலைமை இதுதான். தமிழகத் தேர்தல் களம் இப்போது ஒரு மல்டி ஸ்டாரர் சினிமா
போல இருக்கிறது.
ஸ்டாலின், எடப்பாடி, விஜய், சீமான்.
நான்கு ஹீரோக்கள்.
அதன் கதை மற்றும் கிளைமாக்ஸ்?
அதுதான் தேர்தல் 2026 – ஜெயிக்கப் போவது யாரு?
தமிழகத்தில் ஐந்து கோடியே அறுபத்தேழு லட்சம் வாக்காளர்கள்
இருக்கிறார்கள். இதில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கைதான் அதிகம். மேத்தமடிக்கலாகப்
பார்த்தால் பெண்கள்தான் கோட்டையைத் தீர்மானிக்கப் போகிறார்கள்.
இதில் 12 லட்சம் பேர் கன்னி வாக்காளர்கள். இவர்களுக்கு
எம்.ஜி.ஆரைத் தெரியாது, கருணாநிதியின் அடுக்குமொழி வசனம் புரியாது, ஜெயலலிதாவின்
கம்பீரம் தெரியாது. இவர்கள் அறிந்ததெல்லாம் வெறும் யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் லியோவும்
கோட்டும் மட்டும்தான். இவர்களும் இந்தத் தேர்தல் பார்ட்டிசிபேட் ஆகிறார்கள். ஸோ,
இவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் பிரச்சார நிலவரம் ஒரு பக்கம் என்றால், களநிலவரம்
எப்படி இருக்கிறது?
டீ விலை 12 ரூபாய் ஆனது ஹாட் டாபிக்காக இருக்கிறது. சுடச்சுட
டீ விலை ஏறியது போல வருமானம் ஏறவில்லை என்று பலரது கவலையாக இருக்கிறது. இந்தக்
குறையை அதிகப்படியாக வந்த நலத்திட்டங்கள் போக்கியிருக்கின்றன.
பெண்களுக்கான உரிமைத்தொகை, பெண்களுக்கான இலவசப் பேருந்து
பயணங்கள் ஆகியன ஆண் வாக்காளர்களை விட அதிகமிருக்கும் பெண் வாக்காளர்களை அட்ராக்ட்
செய்யும் மேக்னடிக் பார்முலா ஒன் திட்டங்கள்.
இப்படி நலத்திட்டங்கள் நிறைய வந்தாலும், கஞ்சா
குடியர்களும், டாஸ்மாக் வெறியர்களும், பெண்களைச் சீண்டும் காமுகர்களும் எப்படி
நிறைய வருகிறார்கள்? என்பது வாக்காளர்களான பொதுமக்கள் மனதில் எழும் கேள்விகள். லாஜிக்காக
இந்த விசயம் ஆளும் திமுகவுக்கு நெகடிவ் பாய்ண்ட்.
இந்த லாஜிக் ஒருவேளை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்றால்,
எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அந்த சின்னத்துக்குத்தான் ஓட்டுப் போடுவேன்
என்போரின் லாஜிக் திமுகவை மீண்டும் கொண்டு வரவும் வாய்ப்பிருக்கிறது.
ஆளும் திமுகவின் ப்ளஸ் பாய்ண்ட் அதன் அடிப்படைக் கட்டமைப்பு
மற்றும் களப்பணிகள். அதை பீட் பண்ணுவது சாதாரணமல்ல. மற்றவர்கள் இன்னும் ஸ்க்ரிப்ட்
எழுதிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் ஷூட்டிங் முடித்து எடிட்டிங் டேபிளில்
உட்கார்ந்திருக்கிறார்கள்.
அப்படியானால் எதிர்க்கட்சியான அதிமுகவின் நிலை? அதிமுக
நிறைய இடங்களைப் பிடிப்பதில் சில பலவீனங்களைச் சந்திக்கிறது. அவை என்னவென்றால்,
அதிமுக ஓபிஎஸ், செங்கோட்டையனை இழந்திருக்கிறது. அன்புமணி – ராமதாஸ் என இரண்டாகப்
பிரிந்திருக்கும் பாமகவின் அன்புமணி பக்கத்தைத் தன் கூட்டணியில் வைத்திருக்கிறது.
ராமதாஸ் சசிகலாவோடு அமைத்திருக்கும் கூட்டணி வாக்குகளைப் பிரிக்கக் கூடும். அதிமுக
கூட்டணியை மேலாண்மை செய்வது அதிமுகவா? பாஜகவா? என்ற கேள்வி தமிழக வாக்காளர்களுக்கு
இருக்கிறது. இவையெல்லாம் மைனஸ் பாய்ண்டுகளாக நீடிப்பதால் பெரும்பான்மையை எட்டிப்
பிடிப்பது அதிமுகவுக்கு தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பதைப் போலத்தான் இருக்கும்.
அடுத்து, தவெகவின் நிலை? தமிழகத்தில் புதிதாகக் கட்சித்
தொடங்கும் பிரபலங்கள் கணிசமாக வாக்குகளை அறுவடை செய்தது கடந்த கால வரலாறு. அந்த
வகையில் விஜய் திமுக அல்லது அதிமுகவின் ஓட்டுகளைப் பிரித்து மேய்ந்தால்
இரண்டுக்கும் போதுமான இடங்கள் கிடைக்குமா என்பது எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகணும்
என்பதைப் போன்ற கேள்வி.
மேற்படி நிலையை நாம் எதனோடு ஒப்பிட வேண்டும் என்றால், 2006
சட்டப்பேரவைத் தேர்தலின் போது விஜயகாந்தின் தேமுதிக அரசியல் வரவினால், திமுக 96
இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது ஜெயலலிதா ஆளும் திமுகவை மைனாரிட்டி
அரசு என விமர்சித்தது தனிக் கதை. அப்படி ஒரு நிலைமை விஜய்யால் திமுகவுக்கு
ஏற்படுமா? அல்லது அதிமுக எதிர்பார்க்கும் வெற்றி வாய்ப்பைப் பறிக்குமா? என்பது
மக்கள் மனதில் ஏப்ரல் 23 அன்று வெடிக்கப் போகும் லாஜிக்கைப் பொருத்தது.
தவெக எவ்வளவு வாக்குகளைப் பெறும் என்று, விஜய்க்குக் கூடும்
கூட்டத்தைக் கொண்டு அப்ராக்சிமேட்டாகவும் மேத்தமடிக்கலாகவும் யோசிக்கும் போது அது
ஐம்பது லட்சத்திலிருந்து ஒரு கோடி வாக்குகளாக இருக்கலாம். இது தமிழகத்தின் மொத்த
வாக்குகளில் பத்திலிருந்து இருபது சதவீதமாகும். அப்படி நடந்தால், இது விஜயகாந்தின்
அரசியல் என்ட்ரியின் போது நடந்ததை விட அதிகம்தான்.
ஆனால், முக்கியமான கேள்வி என்னவென்றால், விஜய் கோட்டையைப்
பிடிக்க முடியுமா? ஒரு தலைவரை மட்டும் வைத்து ஒரு கட்சி ஜெயித்து விட முடியாது.
லோக்கலில் இறங்கி அடிக்கும், தட் மீன்ஸ் வேலை பார்க்கும் தொண்டர்கள் வேண்டும்.
அந்த வகையில் கிரவுண்ட் லெவலில் ஆடகள் இல்லாததால் தவெக கோட்டையைக் கோட்டை விடவும்
வாய்ப்பு இருக்கிறது.
அதுமட்டுமல்ல, விஜய் இன்னும் எல்லாத் தொகுதிகளுக்கும்
விசிட் அடிக்கவில்லை. ஸ்கிரீனில் பார்த்த முகத்தை நேரில் பார்க்கவில்லை என்றால்,
தமிழக வாக்காளனுக்குக் கொஞ்சம் சுணக்கம் வந்து விடும். விஜய் பிரசாரத்
திட்டங்களில் ஏதோ ஒரு பக் இருக்கிறது. கூட்ட நெரிசல், மயக்கமடிப்போர், ஆக்சிடென்ட்
ஆவோர் என்று விஜய் கூட்டங்களுக்கான பிரேக்கிங் நியூஸ் விஜய்யின் மூவ்மெண்டுக்கு
அடிக்கடி பிரேக் அடித்துக் கொண்டிருக்கிறது.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். சீமான்? எப்படியும் விஜய் சீமானைப்
பின்னுக்குத் தள்ளி விடுவார் போலிருக்கிறது நிலைமை. அவர் கடந்த தேர்தலில் பெற்ற
வாக்கு சதவீதத்தைத் தக்க வைப்பாரா என்பதே எஞ்சியிருக்கும் கேள்வி.
இந்த மல்டி ஸ்டாரர் படத்தில் விஜய், சீமானைக் கழித்து
விட்டுப் பார்த்தால் திமுகவும் அதிமுகவும் பிரதான போட்டியாளர்களாக மோத
இருக்கிறார்கள். இவர்களை எந்த அளவுக்கு விஜய்யின் தவெக பாதிக்கப் போகிறது என்பது
மே 4 தரும் கிளைமாக்ஸில்தான் தெரிய வரும்.
அந்தக் கிளைமாக்ஸில் ஒருவேளை மேஜிக் நம்பரான 118ஐ யாரும்
எளிதில் தொட முடியாமலும் போகலாம். 20
ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மைனாரிட்டி அரசாங்கம் அமையவும் அமையலாம். நாம்
மே 4 வரை பொறுத்திருப்பது நல்லது.
*****

No comments:
Post a Comment