சாத்தான்குளம் – லத்திகளும் எமதர்மனின் இரட்டை முத்திரையும்!
ஆறு
ஆண்டுகள். ஒரு சாமானியக் குடும்பம் அதிகாரத்தின் முரட்டுத்தனமான மிரட்டல்களுக்கும்,
அலைக்கழிப்புகளுக்கும் இடையே காத்திருந்தது இந்த ஒரு தீர்ப்புக்காகத்தான்.
ஜெயராஜையும்
பென்னிக்ஸையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, உடற்கூறியல் பாடப்புத்தகமே
மிரளும் வகையில் சித்திரவதை செய்து கொன்ற ஒன்பது காவலர்களுக்கும் (மொத்தம் பத்து, ஒருவர்
இறந்து விட்டார்) மதுரை நீதிமன்றம் இரட்டை மரண தண்டனை வழங்கியிருக்கிறது.
அதிகார
போதையில், நாங்களே சட்டம், நாங்களே எமன், என்று ஆடியவர்களுக்கு, சட்டம் தன் இரட்டை
முகத்தைக் காட்டியிருக்கிறது.
இந்தச்
சம்பவத்தில் ஒரே ஒரு வெளிச்சப்புள்ளி தலைமைக் காவலர் ரேவதி. சீருடை அணிந்த மற்றவர்கள்
நிழல் உலக மனிதர்களாக மாறியபோது, இவர் மட்டும் மனிதராக இருக்கத் துணிந்தார். ஒரு போலீஸ்
ஸ்டேஷனுக்குள் போலீஸாரே பொய் சொல்லும்போது, ஒரு போலீஸே உண்மையைச் சொன்னால் அது அதிசயம்.
அந்த அதிசயம்தான் இன்று ஒன்பது கயவர்களுக்குக் தூக்குக் கயிறுகளைப் பரிசளித்திருக்கிறது.
இந்தச்
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் ஒரு மிக முக்கியமான
கசப்பான உண்மையைச் சொல்லியிருக்கிறார், நீதிமன்றம்
மட்டும் தலையிடவில்லை என்றால், அந்த உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே உண்மைகள்
அடக்கம் செய்யப்பட்டிருக்கும் என்று.
ஆயுள்
தண்டனை கொடுத்தால், சிறைக்குள் சென்று சில ஆண்டுகள் சோறு தின்றுவிட்டு வந்துவிடலாம்,
என்று ஏளனம் செய்தவர்களுக்கு, இரட்டை மரண தண்டனை என்பது ஒரு பலமான அறை.
மரணம்
என்பது ஒருமுறைதான் வரும். ஆனால் இரட்டை மரண தண்டனை என்பது அந்த மரணத்தின் தீவிரத்தை
அதிகார வர்க்கத்தின் ஆழ்மனதில் பதிய வைக்கும் ஒரு குறியீடு.
வழக்கு
நடந்து கொண்டிருக்கும் போதே, ஜெயராஜையும் பென்னிக்ஸையும் இழந்த ஆம்பளை இல்லாத வீட்டுல
பொம்பளைகளால என்ன செய்ய முடியும்? என்று கேட்டுச் சிரித்த அந்த அதிகாரக் கொழுப்புக்கு,
இன்று ஒரு பெண்ணின் கண்ணீர் பதிலடி கொடுத்திருக்கிறது.
தன்
கணவனையும் மகனையும் பறிகொடுத்த ஒரு தாய், இன்று ஆறு ஆண்டுகள் கழித்து நிம்மதியாக உறங்குவார்.
ஆனால் அந்த ஒன்பது பேரின் தூக்கம் இனி நிரந்தரமாகக் கலைந்துபோகும்.
தமிழகத்தில்
இது அரிதிலும் அரிதான தீர்ப்பு. வழக்கமாகச் சட்டத்தைக் கையிலெடுக்கும் காவலர்களுக்குச்
சட்டம் கைலாகு கொடுக்கும். ஆனால் இம்முறை சட்டம் தன் கையிலிருக்கும் தராசைத் தூக்கி
அவர்கள் தலையிலேயே போட்டிருக்கிறது.
லத்தியால்
அடிப்பது வீரமல்ல என்பதை விட, சட்டத்தின் லத்தி எவ்வளவு பலமாகத் தாக்கும் என்பதைச்
சீருடை அணிந்த சில கயவர்கள் இனி உணர்வார்கள். அந்தக் கயவர்களுக்குத் தூக்குக் கயிறு
காத்திருக்கிறது. இம்முறை அது யாருக்காகவும் வளைந்து கொடுக்காது!
*****

No comments:
Post a Comment