பிள்ளைகளும் பணமும் – ஒரு நடுத்தர வர்க்கக் திகில் கதை!
இன்றைய உலகம் ராக்கெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது.
அந்த வேகத்தில் பிள்ளைகள் எங்கே போகிறார்கள் என்று பார்த்தால், நேராக ஆன்லைன் ஷாப்பிங்
ஆப்களுக்குள் போய் விழுகிறார்கள்.
முன்னெல்லாம் பணம் என்றால் என்ன? என்று கேட்டால்,
அது ஒரு காகிதம் என்பார்கள் பிள்ளைகள். இப்போது கேட்டால், அது அப்பாவின் போனில் இருக்கும்
ஒரு ஓடிபி என்கிறார்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சி பிள்ளைகளின் மூளையை விட,
அவர்களின் ஆசை லிஸ்ட்டைப் பெரிதாக்கியிருக்கிறது.
குழந்தைகள் இப்போது கார்ட்டூன் பார்ப்பதில்லை,
விளம்பரங்களுக்கு நடுவே கொஞ்சம் கார்ட்டூன் பார்க்கிறார்கள். அந்த விளம்பரத்தில் வரும்
ரோபோ பொம்மையைப் பார்த்ததும், இது இல்லை என்றால் என் வாழ்க்கையே சூன்யம் என்கிற லெவலுக்கு
அடம் பிடிக்கிறார்கள். மார்க்கெட்டிங்காரர்களுக்குத் தெரியும், அப்பாவை விடக் குழந்தையை
நம்பினால்தான் கல்லா கட்ட முடியும் என்று.
பள்ளிக்கூடத்தில் பாடம் ஏறுகிறதோ இல்லையோ,
பக்கத்து சீட்டு மாணவி வைத்திருக்கும் புது பிராண்ட் பேனா மட்டும் துல்லியமாகத் தெரிகிறது.
அவ வச்சிருக்கா, எனக்கு வேணும், என்பதுதான் இன்றைய குழந்தைகளின் தாரக மந்திரம். இது
தேவை அல்ல, இது ஒரு வகையான கௌரவப் போர். இதில் தோற்றுப் போனால் சமூகத்தில் தலை காட்ட
முடியாது என்கிற ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள்.
பெற்றோர்களும் இதற்கு ஒரு காரணம். பிள்ளைகள்
கேட்ட உடனே, ஏதோ ஏடிஎம் மெஷின் மாதிரி பொருட்களைத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாமதான்
கஷ்டப்பட்டோம், புள்ளைங்க சந்தோஷமா இருக்கட்டுமே என்கிற அந்தச் சென்டிமென்ட் இருக்கிறதே,
அதுதான் ஆபத்து.
எதை கேட்டாலும் உடனே கிடைத்தால், பணத்தின்
மதிப்பு எப்படித் தெரியும்? ரூபாய் நோட்டை வெறும் காகிதமாகத்தான் பார்ப்பார்கள்.
இந்தச் சின்னச் சின்ன ஆசைகளை இப்போதே கிள்ளி
எறியவில்லை என்றால், வளர்ந்த பிறகு அவர்கள் கிரெடிட் கார்டு என்கிற எமனிடம் சிக்கிக்
கொள்வார்கள். அதற்கு ஆண்டுக்கு 40% வட்டி. இதைக் கட்டவே அவர்கள் ஆயுள் முழுக்க ஓட வேண்டியிருக்கும்.
கடைசியில், ஒரு வீட்டுக் கடன் வாங்கக் கூடத் தகுதி இல்லாமல், சிபில் ஸ்கோர் பாதாளத்தில்
கிடக்க, நடுத்தர வர்க்கத் துயரம் ஆரம்பமாகும்.
இதற்கு என்னதான் தீர்வு
பிள்ளைகளுக்குப் பணத்தின் மதிப்பைச் சொல்லிக்
கொடுக்க பொருளாதாரப் பாடம் தேவையில்லை, நடைமுறை போதும்.
ஒரு நாள் உங்கள் அலுவலகத்துக்குக் கூட்டிச்
செல்லுங்கள். அங்கே பாஸ் கொடுக்கும் டார்ச்சரையும், டிராஃபிக்கில் நீங்கள் படும் அவஸ்தையையும்
பார்த்தால், அடுத்த முறை ஐஸ்கிரீம் கேட்கும்போது ஒரு நிமிடம் யோசிப்பார்கள்.
மாதம் ஒரு 500 ரூபாயைக் கொடுத்து, உன் தேவையை
நீயே பார்த்துக்கோ, என்று சொல்லிப் பாருங்கள். அந்த 500 ரூபாயை வைத்துக்கொண்டு அவர்கள்
படும் பாடுதான் அவர்களுக்குப் பெரிய பாடம்.
புத்தகம் வாங்குவது தேவை, ஆனால் அந்த 5000
ரூபாய் வீடியோ கேம் என்பது வெறும் ஆசை என்பதைப் புரிய வையுங்கள்.
மொத்தத்தில், பிள்ளைகளைச் செல்லம் கொடுத்துக்
கெடுப்பதை விட, கொஞ்சம் கணக்கு காட்டி வளர்ப்பதுதான் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது.
சிறு வயதில் உண்டியலில் சேமிக்கும் அந்த ஒரு
ரூபாய், பின்னாளில் அவர்கள் கடனாளியாகாமல் தடுக்கும் இன்சூரன்ஸ்.
இல்லையென்றால், நீங்கள் சேர்த்து வைத்த சொத்து
எல்லாம் அவர்களின் ஒரு மாத ஆன்லைன் ஷாப்பிங் பில்லுக்கே சரியாகப் போய்விடும்!
இனி என்ன செய்வது என்பது ஒவ்வொரு பெற்றோரின்
முடிவுதான். பெற்றோரின் முடிவு குழந்தைகளைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். விசயம் அவ்வளவுதான்.
*****

No comments:
Post a Comment