27 Mar 2026

மிஸ்ஸிங் மெமரி – அந்த மூன்று வயது வரை என்ன நடந்தது?

மிஸ்ஸிங் மெமரி – அந்த மூன்று வயது வரை என்ன நடந்தது?

நீங்கள்இப்படிச் சொல்லக் கூடும்.

எனக்கு இரண்டு வயது இருக்கும்போது காது வலி உயிர் போனது. நள்ளிரவில் என் அம்மா என்னைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியதும், அங்கே ஒரு சின்ன சர்ஜரி நடந்ததும் எனக்குத் துளி கூட நினைவில்லை. ஆனால், அடுத்து சில வருடங்கள் கழித்துப் பக்கத்து வீட்டுப் பூனை புதருக்கு அடியில் ஒளிந்திருந்தது மட்டும் ஹைடெபனிஷன் தரத்தில் ஞாபகம் இருக்கிறது.

அப்படியானால், நடுவில் இருந்த வருடங்கள் எங்கே போயின?நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணும் கதையாய் அவை எங்கே போயின?

விஞ்ஞானிகள் இதற்கு சிறுவயது மறதி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மூன்று வயது வரை நம் மூளை ஒரு மெமரி கார்டு இல்லாத கேமரா போலச் செயல்படுகிறது. பதிவாகும், ஆனால் சேமிக்கப்படாது. ஏழு வயது ஆகும்போது, நம்முடைய ஆரம்பகால அந்த மூதல் மூன்றாண்டு நினைவுகள் கிட்டத்தட்ட முழுவதுமாக டெலீட் செய்யப்பட்டுவிடுகின்றன.

ஒரு பதின்பருவப் பையனுக்கும் அல்லது பெண்ணுக்கும் மற்றும் 50 வயதுப் பெண்ணுக்கும் அல்லது ஆணுக்கும் தங்கள் மூன்று வயது நினைவுகளைப் பற்றி இருக்கும் அறிவு ஒன்றுதான். அதாவது பூஜ்யம்.

இதற்குப் பின்னால் சில கோட்பாடுகள் இருக்கின்றன.

முதல் கோட்பாடு சொல்வது என்னவென்றால், மூளையின் நினைவாற்றல் மையமான ஹிப்போகாம்பஸ், நாம் பிறக்கும்போதே தயாராக இருந்தாலும், அதன் சில பகுதிகள்  வளர இன்னும் சில காலம் ஆகிறது. இதனால் மூன்று வயது வரையிலான நினைவுகள் பிக் அக் ஆகாது.

இரண்டாவது கோட்பாட்டின்படி, ஆரம்பகாலத்தில் மூளை மிக வேகமாக வளர்கிறது. புதிய நியூரான் இணைப்புகள் உருவாகும்போது, பழைய மெல்லிய நினைவுகளை அவை ஓவர் ரைட் செய்துவிடுகின்றன. பழைய வீட்டை இடித்துவிட்டுப் புதிய அப்பார்ட்மெண்ட் கட்டுவது போல! எனவே அந்த பழைய மூன்று வயதுக்குள்ளான நினைவுகள் அப்ஸ்காண்ட்.

மூன்றாவதாக ஒரு கோட்பாடு இப்படிச் சொல்கிறது. நமக்கு மொழி தெரியாதபோது ஒரு சம்பவத்தை எப்படிப் பதிவு செய்வோம்? பிம்பமாகத்தானே. அம்மா பால் கொடுத்தார் என்று வார்த்தைகளால் கோர்க்கத் தெரியாதபோது, அந்த நினைவு ஒரு பிம்பமாக மட்டும் இருந்து காலப்போக்கில் அழிந்துவிடுகிறது என்கிறது இந்த மூன்றாவது கோட்பாடு.

அத்துடன் ஆராய்ச்சியில் ஒரு வேடிக்கையான விஷயம் தெரிந்தது. எந்தக் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் பேசி, சம்பவங்களை விவரமாகச் சொல்லப் பழகுகிறார்களோ, அவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கிறது.

இன்றைக்கு என்ன ஆயிற்று? என்று கேட்கும் அம்மாவிடம், கிரிக்கெட் பந்து எதிர் வீட்டு ஜன்னலில் அடித்து, கண்ணாடி உடைந்து போய் விட்டது  என்று ஒரு குழந்தை சொல்லும்போது, அந்த நினைவு ஆழமாகப் பதிகிறது. அம்மாக்கள் சும்மா இருப்பதில்லை, அப்புறம் என்ன ஆச்சு? எதிர் வீட்டுக்காரர் என்ன செய்தார்? என்று தோண்டித் துருவி கேட்கும்போது, அது ஒரு நாவல் போல மூளையில் பதிவாகிவிடுகிறது.

நம்மில் பலர், எனக்கு ஒரு வயதில் நடந்ததெல்லாம் நினைவிருக்கிறது என்று அடித்துச் சொல்வோம். இது உண்மையா? அதற்கு முன் இந்தச் சம்பவத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிரபல சைக்காலஜிஸ்ட் ஜான் பியாஜே, தனக்கு இரண்டு வயதில் ஒரு கடத்தல் முயற்சி நடந்ததாகவும், அதிலிருந்து தப்பியதாகவும் துல்லியமாகச் சொன்னார். ஆனால் 15 வருடம் கழித்துத்தான் தெரிந்தது அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, செவிலியர் சொன்ன கதையை அவர் தன் நினைவு என்று நம்பிவிட்டார்!

நாமும் அப்படித்தான். பழைய போட்டோக்கள், அம்மா சொன்ன கதைகள் இரண்டையும் மிக்ஸ் செய்து ஒரு கற்பனை மெமரியை உருவாக்கி வைத்துக் கொள்கிறோம் என்பது சாட்சாத் 100 சதவீத உண்மை.

நினைவு இல்லாவிட்டாலும் பாதிப்பு இருக்கும். சிக்கன் எலும்பு தொண்டையில் சிக்கிய ஒரு குழந்தைக்கு, வளர்ந்த பிறகு சிக்கன் என்றாலே அலர்ஜியாக இருக்கலாம். ஏன் பிடிக்காது? என்று அந்த வளர்ந்த குழந்தைக்குத் தெரியாது, ஆனால் மூளையின் ஏதோ ஒரு மூலையில் அந்தப் பயம் ஒளிந்திருக்கும்.

நமது கடந்த காலம் என்பது ஒரு பெரிய இருட்டு அறை. அதில் மூன்று வயதுக்குப் பிறகுதான் மின்விளக்கு எரிகிறது. அந்த வெளிச்சத்தில்தான் நாம் யார் என்பது நமக்குத் தெரிகிறது. அதுவரை நடந்தது எல்லாமே ஒரு ப்ரீ புரொடக்சன் வேலைதான்! ஆக, மூன்று வயது வரை நடந்ததை உங்களால் முப்பது வயதில் நினைவு கூர முடியாது. அப்படி முடியும் என்று சொன்னால், அதற்கு வேறு ஒரு பெயர் இருக்கிறது. அதன் பெயர்தான் கப்சா.

*****

No comments:

Post a Comment