காலி காகிதக் கோப்பை
முப்பது பவுன் நகையை
முப்பத்து ஐந்து பவுனாகவும்
பைக்கைக் காராகவும்
ஐந்து லட்சம் ரொக்கத்தை
ஏழரை லட்சமாகவும் கேட்டதற்கு
இசைந்த பின்
"கடைசி வரை
பொண்ணை நல்லபடியா
வெச்சுப்பார் மாப்பிள்ளை!"
என்று சம்பந்தம் பேசியவர்கள்
எதையோ பெரிதாகக் கொடுத்து
விட்டது போல
இறுமாப்போடு சிரித்தபடி
கிளம்பிச் செல்கின்றனர்
காபி பருகிய பேப்பர்
கப்பை
ப்ளாஸ்டிக் நாற்காலியின்
காலுக்கு அடியில் வைத்து
விட்டு.
*****
ஒரு கல்
ஒரு கல் போதும்
ஆயிரம் பறவைகளை விரட்ட
ஒரு கல் போதும்
ஆயிரம் பறவைகளைத் திரட்ட
அந்தக் கல்லை
விட்டு எறியப் போகிறோமா
விட்டு விலகப் போகிறோமா
என்பதைப் பொருத்து.
*****
No comments:
Post a Comment