மாற்றம்
எதையும் பதிவு செய்ய
விரும்பாத
அப்பா
கடைசிக் காலத்தில் இருந்தார்
பேரன் எடுத்த அத்தனை
செல்பிக்களிலும்.
*****
சீதா கல்யாணம்
"அவசியம் முதல்
நாளே வந்திடணும்!"
என்று சொல்லி
திருமணப் பத்திரிகையை
நீட்டிய
சீதாவின் கல்யாணத்திற்குத்
தாமதமாகத்தான் சென்றேன்.
அரைப்பவுன் நகை குறைந்ததற்காக
அவமானப்பட்டு நின்று
கொண்டிருந்த
அப்பாவுக்காக
அழுகை வடிந்த முகத்தோடு
மாலை சூடி மணக்கோலத்தில்
நின்றிருந்தவள்
என்னைப் பார்த்ததும்
ஓடி வந்து
வருகைக்கு நன்றி சொல்லி
விட்டு
மீண்டும் அழத் தொடங்கினாள்.
வாங்கிச் சென்றிருந்த
அரைப்பவுன் தங்க நாணயத்தை
மணப்பரிசாகக் கொடுத்த
போது
அதை வாங்கிக் கொண்டு
அழுகையை நிறுத்தியவள்
திருமணத்தையும் நிறுத்தினாள்.
*****
No comments:
Post a Comment