10 Jul 2026

கடன் சுமை : மாயா பிரபஞ்சத்தின் நெகடிவ் எண்கள்

கடன் சுமை : மாயா பிரபஞ்சத்தின் நெகடிவ் எண்கள்

தமிழகத்தின் மொத்த கடன் சுமை 10.71 லட்சம் கோடி ரூபாய்.

தத்துவம் என்ன சொல்கிறது? 'எதுவுமே இல்லை' என்பதிலிருந்துதான் பிரபஞ்சம் தோன்றியது.

தமிழ்நாடு கஜானா வழங்கும் பிரசாதமும் அதுதான்.

இல்லாத பணத்தை வைத்துக்கொண்டு, இருக்கும் மக்களுக்கு எப்படி இலவசங்களை வழங்குவது? இது ஒரு ஜென் தத்துவம் போன்றது.

வட்டியும் அசலுமே 1.16 லட்சம் கோடி ரூபாயைத் தின்று ஜீரணிக்கிறது.

மூலதனச் செலவு என்பது இங்கே கானல் நீர்.

புதிய பள்ளிகளும், மருத்துவமனைகளும் வெறும் காகிதக் கனவுகள்.

கையில் காசே இல்லாதபோது, இலவச வாக்குறுதி அளிப்பது, அங்காடியில் விற்காத பொருளுக்கு பை ஒன் கெட் ஒன் ஆபர் போடுவதைப் போன்றது. கடன் என்பது ஒரு சுழல்; அதில் அடிக்கடி கஜானா சிக்கிக் கொள்கிறது.

அத்வைதம் சொல்வது போல், "எல்லாம் ஒன்று" என்று மக்கள் நினைத்தால் பிரச்சனை க்ளோஸ். ஆனால் "கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் வேண்டும்" என்று மக்கள் கேட்டால், அது பசித்த சிங்கங்களுக்கு இடையே ஒரு துண்டு ரொட்டியைப் பகிர்ந்து அளிப்பதைப் போன்ற சாகசம்.

தமிழ்நாட்டின் மற்ற துறைகளை விட்டு விடுவோம். விவசாயத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பில் 13% விவசாயம். ஆனால், 93% பேர் குறு, சிறு விவசாயிகள்.

நிலத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது, ஆனால் விவசாயியின் மதிப்பு சுருங்கிக்கொண்டே போகிறது.

நிலத்தை விற்றால் லாபம், சாகுபடி செய்தால் நஷ்டம். இதைவிட ஒரு ஆகச்சிறந்த இருத்தலியல் துயரம் விவசாயிக்கு இருக்க முடியாது.

விசயம் என்னவென்றால், நிலம் துண்டாடப்படுவது போல, மக்களின் தேவைகளும், வாக்குறுதிகளும் துண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் கடன் சுமை ரோலர் கோஸ்டர் போல ஏறிக் கொண்டிருக்கிறது. இறைப்பதற்கு நீர் ஊற்று போலச் சுரப்பதற்கு தமிழகத்தின் உற்பத்திப் பெருக்கம் இல்லை என்பதே எதார்த்தம்.

மிகப்பெரிய கடனை வைத்துக் கொண்டு மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கி நடப்பது என்பதுஅறுபது கிலோ மனிதன் நூற்று இருபது கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு சிகரத்தில் ஏறுவதைப் போலத்தான்.

எவ்வளவு எடையேறினாலும் சிகரத்தை நோக்கிய பயணத்தை நிறுத்த முடியாது. கால் ஒடிந்தாலும் ஒடிந்த காலைத் தூக்கிக் கொண்டு ஓடத்தான் வேண்டும்.

முடிவாக விசயம் இதுதான். வாக்குறுதிகள் என்பவை காற்றில் எழுதப்பட்டவை, எதார்த்தப் பொருளாதாரம் என்பது கல்லில் செதுக்கப்பட்டது.

அரசு அமைப்புகள் நிர்வாகச் சவால்களைத் தன் அர்ப்பணிப்பால் வென்றால் வரலாறு வாழ்த்தும்; இல்லையெனில், தமிழ்நாடு மீண்டும் ஒரு புதிய தேடலை நோக்கி நகரத் தொடங்கிவிடும் என்பதுதான் பிரபஞ்ச விதி.

*****

No comments:

Post a Comment