தொகுதி மறுவரையறை மசோதா – நடந்தது
என்ன?
தொகுதி மறுவரையறை மசோதா என்ற பெயரைக் கேட்டாலே ஏதோ
தையல் கடையில் சட்டைக்கு அளவு எடுப்பது போல இருக்கிறதல்லவா? கிட்டத்தட்ட அதுதான். ஆனால்
இங்கே தைக்கப்படுவது சட்டை அல்ல, நம் நாட்டின் அரசியல் வரைபடம்.
தற்போது லோக்சபாவில் 543 பேர் இருக்கிறார்கள். இதை
இனி இதை 815 ஆக ஆக்கப்போகிறார்களாம். அதாவது 50 சதவீத டாப்-அப். அதுதான் இந்த
மசோதா.
இந்தியாவில் மக்கள் தொகை கூடிக் கொண்டே போகிறது.
ஆனால் நாடாளுமன்றத்தில் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கை அப்படியே இருக்கிறது. இது
எப்படி இருக்கிறதென்றால், பத்து பேர் இருக்கும் குடும்பத்தில் ஒரே ஒரு ‘பேமிலி பேக்
பிரியாணியை வைத்துக்கொண்டு, எல்லோருக்கும் லெக் பீஸ் வேணும் என்று அடம் பிடிப்பது போலத்தான்.
அதனால், எந்த ஊரில் எத்தனை பேர் இருக்கிறார்களோ,
அதற்கேற்ப எம்.பிக்களைப் பிரித்துக் கொடுப்போம் என்பதுதான் இந்த மசோதாவின் அடிப்படை
நோக்கம்.
நோக்கம் சரியாகத்தான் இருக்கிறது என்று
நினைத்தால், இங்கேதான் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்கள் அரசு
சொன்னதைக் கேட்டு, பெற்றால் டூ, இல்லையேல் ஒன் என்று குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகப்
பின்பற்றின. விளைவு? மக்கள் தொகை குறைந்தது.
வடக்கிலோ நிலைமை வேறு. மக்கள் தொகையே மாபெரும் சக்தி,
என்று ராகுல் காந்தி ஸ்டைலில் கிளம்பி, எண்ணிக்கையைப் பெருக்கிவிட்டார்கள்.
இப்போது தொகுதி மறுவரையறை வந்தால், வட
மாநிலங்கள் நாங்கள் நிறையப் பேர் இருக்கிறோம், அதனால் எங்களுக்கு அதிக எம்.பி சீட்
கொடுங்கள் என்று கேட்பார்கள், ஹோம்வொர்க் செய்யாத பையனுக்கு அதிக மார்க் போடுவது போல!
ஆனால், தென் மாநிலங்களின் நிலைமை. நாங்கள் சமத்தாகச்
சொன்னதைக் கேட்டோம், அதற்காக எங்கள் சீட்டைக் குறைக்கிறீர்களே? என்பார்கள், கிளாஸில்
அமைதியாக இருந்ததற்குத் தண்டனை கொடுப்பது போல!
இப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்றால், நாடாளுமன்றத்தில்
இருக்கைகள் கூடும். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை அவ்வளவு பெரிதாகக் கட்டியதே இதற்காகத்தான்.
சுமார் 800க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் சரியாகச் சொன்னால் 815 எம்.பிக்கள் அமர்வார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், குடும்பக் கட்டுபாடு
செய்த மாநிலங்கள் அரசியல் பலத்தை இழக்கும். குடும்பக் கட்டுபாட்டைக் காற்றில்
பறக்க விட்ட மாநிலங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும்.
ஜனநாயகத்தில் தலைகளுக்குத்தான் மதிப்பு, மூளைகளுக்கு
அல்ல என்பதை இந்த மசோதா நிரூபித்து விடலாம்.
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு உங்கள் ஊர் தொகுதி
பெயர் மாறலாம், ஆனால் உங்கள் தெருவில் இருக்கும் அந்தப் பாதாளச் சாக்கடை ஓட்டை மட்டும்
மாறாமல் அப்படியே இருக்கலாம். அது வேறு விசயம்.
இப்போது விசயத்திற்கு வருவோம்.
இந்த மசோதாவுக்குத் தென் மாநிலங்களின்
எதிர்ப்பை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு கணக்குப் போட்டுக் காண்பித்தார்.
தமிழ்நாட்டில் 39 ஆக இருப்பதை 59 ஆக்குவோம். அதாவது
எம்.பிக்கள் சீட். கேரளாவில் 20ஐ 30 ஆக்குவோம். மொத்தமாகத் தெற்கில் 129லிருந்து
195 சீட்கள் வரும் என்றார்.
அதாவது, தெற்கு மாநிலங்களின் பலம் 23.76 சதவீதத்திலிருந்து
23.87 சதவீதமாக உயருமாம். அதாவது, ஒரு கிலோ பிரியாணியில் ஒரு பருக்கை அரிசியை அதிகமாகப்
போடுவது போல.
வடக்கில் இந்த எண்ணிக்கையைப் போட்டால், 815 –
195 = 620. அதாகப்பட்டது, மொத்த அதிகரிப்பு தொகுதிகள் மைனஸ் தென் மாநிலங்கள்
என்றால் மிச்சமிருப்பது வடமாநில அதிகரிப்புத் தொகுதிகள்தானே. அப்படிப் பார்த்தால்
620 என்ற எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு என்பது சர்வ சாதாரணமாக வந்து
விடுகிறதே. இன்னும் சரியாகச் சொன்னால் நான்கில் மூன்று பங்கு எம்பிக்கள் வட மாநில
எம்.பிக்களாகவே இருப்பர்.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே, தென்
மாநிலங்களில் ஜெயிக்காமலேயே, வட மாநிலங்களில் ஜெயித்தால் ஆட்சியை அலேக்காகத்
தூக்கி விடலாம். சட்டத் திருத்தங்களையும் ஜரூராக முடித்து விடலாம்.
இதனால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது இந்த
மசோதா.
ஆனால், கிளைமாக்ஸ் என்னவென்றால், இறுதியில் புஸ்ஸென்று
போய் விட்டது.
என்ன நடந்தது என்றால், நடந்தது இதுதான்.
528 பேர் ஓட்டுப் போட்டார்கள். அதில் 298 பேர் ஆஹா,
சூப்பர் மசோதா என்று ஆதரவு தந்தார்கள். ஆனால், சட்டப்படி மூன்றில் இரண்டு பங்கு அதாவது
352 பேர் ஆதரவு வேண்டும்.
கடைசியில் பார்த்தால், 54 ஓட்டுகள் குறைவாகப் பெற்று
மசோதா பரிதாபமாகத் தோற்றுப்போனது.
தமிழ்நாட்டின் ரியாக்ஷன் தான் இதில் ஹைலைட். தில்லி
ஒரு பவுலர் என்றால், தமிழ்நாடு ஒரு ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மேட்சை முடித்துவிட்டது.
தமிழ்நாட்டின் எதிர்ப்பு அப்படி இருந்தது.
முடிவு இதுதான். 815 எம்.பிக்கள் வந்து, சென்ட்ரல்
விஸ்டாவில் நெருக்கிக் கொண்டு அமர்வார்கள் என்று பார்த்தால், இப்போது மீண்டும் பழைய
543 பேரே நாங்கதான் கெத்து என்று அமரப்போகிறார்கள்.
இந்தத் தோல்வியால் ஒரு விஷயம் தெளிவாகின்றது. தென்
மாநிலங்களின் குரல் இன்னும் தில்லியில் கேட்கிறது. ஒருவேளை மசோதா ஜெயித்திருந்தால்
தென் மாநிலங்களின் குரல்வளையைத் தூக்கிக் காயலான் கடையில்தான் போட
வேண்டியிருந்திருக்கும்.
மசோதா தோற்றதால், தொகுதிப் பங்கீடு இனி மாறாது.
எனவே, உங்கள் ஊர் எம்.பியிடம் அதே பழைய புகார்களை மீண்டும் கொடுக்கலாம். ஆனால்
என்னதான் வந்தாலும் மாற்றம் என்பது மசோதாவில் மட்டுமே, மக்கள் வாழ்க்கையில் அல்ல
என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது! என்ன செய்வது? அரசியலில் இதெல்லாம்
சாதாரணமப்பா என்று கவுண்டர் எப்போதோ கவுண்டர் கொடுத்து விட்டார்.
*****


No comments:
Post a Comment