21 Mar 2026

சிதைந்த சிறகுகளும், திசை மாறிய மேகங்களும் – பிரிட்னி எனும் பெருந்துயரம்!

சிதைந்த சிறகுகளும், திசை மாறிய மேகங்களும்

– பிரிட்னி எனும் பெருந்துயரம்!

ஒரு வசந்த காலத்தின் நள்ளிரவில், கலிபோர்னியாவின் நெடுஞ்சாலையில் கறுப்பு நிற வாகனமொன்று தடம் புரண்டு ஓடுகிறது. தடுத்து நிறுத்திய காவல் துறை, உள்ளே கண்டது ஒரு பாடகியை மட்டும் அல்ல, பாப் இசை உலகையே தன் குரலால் கட்டிப்போட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் சரிவை!

2026, மார்ச் நான்காம் தேதி இரவு, பிரிட்னி ஸ்பியர்ஸ் எனும் இசைக்குயில், மதுவின் பிடியிலும் மனதின் ரணத்திலும் சிக்கி நிலைகுலைந்து நின்றிருக்கிறது.

தந்தையின் இரும்புக் கரங்களுக்குள் பதினான்கு ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு பறவை, நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் வானம் பார்த்தது. ஆனால், கிடைத்த சுதந்திரம் அந்தப் பேதைக்கு வசந்தத்தைத் தரவில்லை, மாறாக, போதைக்கு வழி காட்டும், வழி தெரியாத பெருங்காட்டைத் தந்திருக்கிறது.

1.85 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தன் இசைச் சொத்துக்களை விற்றுவிட்டு, இன்று ஏகாந்தத்தின் விளிம்பில் நின்று கண்ணீர் வடிக்கிறார் பிரிட்னி எனும் அந்த 44 வயதுத் தாய்.

மெக்சிகோவின் மருந்துகளும், மதுவின் மயக்கமும் இணைந்து பிரிட்னியை ஒரு மரணக் குழியில் தள்ளப் பார்க்கின்றன. காவல் துறையின் கரங்களில் சிக்கிய பிறகு என் ரத்தத்தில் ஆல்கஹால் குறைவுதான் என்று பிரட்னி மன்றாடினாலும், காரில் கண்டெடுக்கப்பட்ட மாத்திரைகள் சொல்லும் கதை வேறு.

தனிமை என்பது ஒரு கொடிய விஷம். அது பிரிட்னியைச் சுற்றி இன்று கழுகுகளைக் கூட்டியிருக்கிறது. போதைப்பொருள் விற்பனை செய்பவர்களும், பணத்தை உறிஞ்சும் கும்பலும் பிரிட்னியைச் சூழ்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பிரிட்னியை எப்படிப் புரிந்து கொள்வது?

2007 இல் மொட்டையடிக்கப்பட்ட தலையோடு காட்சி தந்தார்.

பத்திரிகையாளரைக் குடையால் தாக்கினார்.

இன்ஸ்டாகிராம் திரையில் அரை குறையாக வந்தார்.

பிரிந்திருந்த மகன்கள் இன்று அருகே வருகிறார்கள். தாயின் நிலை கண்டு பரிதாபப்படுகிறார்கள்.

பிரிட்டினியின் சிதைந்த மனதைச் சீர் செய்ய இந்த உறவுகள் மட்டும் போதுமா? தெரியவில்லை.

மே நான்காம் தேதி நீதிமன்றத்தின் கதவுகள் திறக்கப் போகின்றன. அதற்குள் பிரிட்னி தன்னைச் சீர்செய்து கொள்ளாவிட்டால், சிறைக்கதவுகள் காத்திருக்கின்றன. அதிகாரத்தின் பிடியில் இருந்து தப்பித்த பிரிட்னி, இன்று போதை அடிமைத்தனத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு விட்டார்.

சுதந்திரம் என்பது ஒரு கத்தி போன்றது. அதைக் கொண்டு கனி நறுக்கலாம், அல்லது கையை நறுக்கிக் கொள்ளலாம். பிரிட்னி இப்போது கையை நறுக்கிக் கொண்டிருக்கிறார்.

கோடி மின்னல்கள் கோர்த்தெடுத்தக் குரலே, கொடிய போதையில் தொலைந்ததேன்?

உலகமே உன் காலடியில் கிடந்தபோது, நீ ஏன் உன் கால்களைத் தொலைத்தாய்?

மகன்களின் முத்தத்திற்காக ஏங்கும் தாயே, உன் மனச் சிறையை நீயே தகர்க்காதவரை, எந்தக் கடவுளாலும் உனக்குக் காப்பு இல்லை!

விழுந்த இடமே உனது விளைநிலமாகட்டும்,  எழுந்து வா! என்று சொல்வதை விட, பிரிட்னிக்காகச் சொல்ல நம்மிடம் என்ன இருக்கிறது?

*****

No comments:

Post a Comment