22 Mar 2026

கிளைமேட் சேஞ்ச் – பினான்ஸ் பாலிடிக்ஸ்!

கிளைமேட் சேஞ்ச் – பினான்ஸ் பாலிடிக்ஸ்!

கிளைமேட் சேஞ்ச் பற்றிப் பேசும்போதெல்லாம் ஏன் பணம் சம்பந்தப்பட்ட வார்த்தைகளே அதிகம் வருகின்றன? டெரிஸ்கிங், பாண்ட் மார்க்கெட், ஈல்டு கர்வ் – இதற்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் மற்றும் நமக்கும் என்ன சம்பந்தம்?

புதிய கிரீன் டெக்னாலஜி என்பது ரொம்ப காஸ்ட்லி. ரிஸ்க்கும் அதிகம். லாஜிக் படி பார்த்தால், அரசுதான் அந்த ரிஸ்க்கை எடுக்கவேண்டும். ஆனால் இப்போது நடப்பது என்னவோ சாண்ட்பேப்பரிங். அதாவது மழுப்பி விடுதல். உப்புத்தாளை வைத்து மழுப்பலாகத் தேய்த்து விடுதல் என்பார்களே, அதுதான் நடக்கிறது.

அதாவது, தனியார் முதலாளிகளுக்குப் பயம் வராமல் இருக்க, அந்த ரிஸ்க்கைத் தேய்த்து மழுப்பலாக மாற்றி வாங்க முதலீடு பண்ணுங்க என்று அரசு கெஞ்சுகிறது. பிளாக்ராக் போன்ற நிறுவனங்கள் இதில் புகுந்து விளையாடுகின்றன. வியட்நாமிலும் கென்யாவிலும் என்ன நடந்தது தெரியுமா? தனியார் நிறுவனங்களை ஈர்க்க அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒத்துக்கொண்டு, கடைசியில் அந்த நாடுகள் பில்லியன் டாலர் நஷ்டத்தில் நிற்கின்றன.

தனியாருக்கு லாபம், பொதுமக்களுக்கு ரிஸ்க்.  இதுதான் இன்றைய கிளைமேட் பாலிசி.

மத்திய வங்கிகள் அதாவது ஒவ்வொரு நாட்டின் ரிசர்வ் பேங்குகள் அல்லது சென்ட்ரல் பேங்குகள் இப்போது வெறும் வட்டி விகிதத்தையும், பணவீக்கத்தையும் மட்டும் கவனிக்கும் டெக்னீஷியன் கூடாரங்களாக மாறிவிட்டன. ஆனால், கிளைமேட் சேஞ்சைத் தடுக்க நமக்குத் தேவை ஒரு தொலைநோக்குள்ள அரசு.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

எரிசக்தித் துறையை அரசாங்கமே வைத்துக்கொள்வது பிரைவேட் கம்பெனிகளிடம் கெஞ்சுவதை விட சீப். எனவே அவையெல்லாம் எப்போதும் கவர்ன்மென்ட் செக்டார்களாக இருக்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைத் தயாரிக்கும்போது வேலைவாய்ப்பும் பெருகும். அரசாங்கம் அதற்கு கொஞ்சமல்ல, நிறையவே மனசு வைக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையில் உச்சவரம்பும், சம்பளத்தில் அடிமட்ட வரம்பும் அவசியம். விலைவாசி ஒரு குறிப்பிட்ட ரேஞ்சுக்கு மேலேயும் போய் விடக் கூடாது. சம்பளம் ஒரு குறிப்பிட்ட ரேஞ்சுக்குக் குறைவாகவும் கொடுக்கப்பட்டு விடக் கூடாது. இரண்டிலுமே ஒரு நியாயவிலை இருக்க வேண்டும்.

மத்திய வங்கிகள் வெறும் வட்டி என்ற ஒரு அம்பை வைத்துக்கொண்டு பணவீக்கம், கிளைமேட் சேஞ்ச் என எல்லா இலக்குகளையும் அடிக்க முடியாது. அவை பாலிஸி மேக்கர்கள்தான். மக்களும் தங்கள் பொறுப்புணர்வை விரிவுபடுத்தி, ஜனநாயக ரீதியாக இதில் பங்கேற்க வேண்டும்.

எவ்வளவு ஹைட்ரோ கார்பன் எரிபொருட்களைக் குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடனும் ஆர்வத்துடனும் முன்வர வேண்டும். குளிர்சாதன வசதி, குளிர்சாதனப் பெட்டி போன்ற இத்தியாதிகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும். ஆளுக்கொரு மரம் வளர்ப்பது ஒரு நல்ல கான்செப்ட். முடியாவிட்டால் தொட்டியில் ஒரு பூச்செடியை வளர்ப்பது கூட நல்ல மாற்றம்தான்.

இப்படி பொதுமக்களும் யோசித்து காய் நகர்த்தினால் இந்த கிளைமேட் சேஞ்ச் எனும் பெருநிறுவனங்கள் நடத்தும் சதுரங்க வேட்டையிலிருந்து தப்பிக்கலாம்.

*****

No comments:

Post a Comment