ஏன் காஸ்மிக் லாட்டரி எல்லாருக்கும் அடிப்பதில்லை?
நான்
கஷ்டப்பட்டு உழைத்தேன், முன்னுக்கு வந்தேன். என் பணத்தில் அரசாங்கம் வரி எனும் பெயரில்
கை வைக்கலாமா? இது ஒரு வெற்றிகரமான தொழிலதிபரின் அல்லது ஒரு ஐடி இன்ஜினியரின் நியாயமான
கேள்வி.
இதில்
ஒரு சின்ன ஓட்டை இருக்கிறது. மெரிட் என்று நாம் மார்தட்டிக்கொள்கிறோமே, அது உண்மையில்
நம் உழைப்பால் மட்டும்தான் வந்ததா? கொஞ்சம் ஆழமாகத் தோண்டிப் பார்ப்போம்.
நெடுநாட்களாக
ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது உழைப்பவன் உயர்வான்.உண்மைதான், உழைக்காதவன் உயருவது
கஷ்டம். ஆனால், இந்த ஃப்ரீ மார்க்கெட் சிஸ்டம் இருக்கிறதே, அது ஒரு மோனோபோலி ஆட்டம்
மாதிரி. ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்.
மோனோபோலி
விளையாட்டில் எல்லோரும் ஒரே தொகையுடன்தான் ஆரம்பிப்பார்கள். நிஜ வாழ்க்கையில் அப்படியல்ல.
ஒருவர் ஆரம்பிக்கும்போதே நான்கு ஹோட்டல்களுடன் ஆரம்பிக்கிறார். இன்னொருவர் கையில் நயாபைசா
கிடையாது. ஸ்காண்டிநேவிய நாடுகளான ஸ்வீடன், டென்மார்க் போன்றவை ஏன் மகிழ்ச்சியாக இருக்கின்றன?
அங்கே எல்லோருக்கும் சமமான ஆரம்பப்புள்ளி என்பதை ஓரளவாவது உறுதி செய்கிறார்கள்.
ஒரு
பேராசிரியர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நான் ராப்பகலாகப் படித்து பி.எச்.டி
வாங்கினேன் என்பார். சரிதான். ஆனால், அவருக்குப் படிப்பதற்கு ஏற்ற மூளை, அமைதியான சூழல்,
நல்ல அப்பா அம்மா, கல்விச் சூழல் இதெல்லாம் அவருக்கு எப்படி கிடைத்தது?
அவர்
தாது வருஷ பஞ்ச காலத்திலோ அல்லது இன்றைய சோமாலியாவிலோ பிறந்திருந்தால் அதே பி.எச்.டியை
வாங்கியிருக்க முடியுமா? பிழைப்பதே பெரிய காரியமாக இருந்திருக்குமே!
இதைத்தான்
காஸ்மிக் லாட்டரி என்கிறார்கள்.
புத்திசாலித்தனம்,
விடாமுயற்சி எல்லாம் கூட ஒரு வகை லாட்டரிதான்.
போர்
இல்லாத நாடு, வசதியான ஏரியா இதுவும் ஒரு வகை லாட்டரிதான்.
சரியான
நேரத்தில் சரியான இடத்தில் இருப்பது ஒரு மிகப்பெரிய லாட்டரி.
நீங்கள்
புத்திசாலியாக இருப்பதற்கும், நேர்மையாக உழைப்பதற்கும் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.
ஆனால் அந்தப் புத்திசாலித்தனமும், உழைக்கும் மனப்பான்மையும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட
கிஃப்ட்.
மாரல்
லக் என்ற ஒரு விசயமும் இருக்கிறது. ஓர் அமைதியான நாட்டில் நீங்கள் நல்லவராக இருப்பது
சுலபம். அதுவே ஒரு பாசிச ஆட்சியில், சுற்றியிருப்பவன் எல்லாம் கொடூரமாக இருக்கும்போது
நீங்கள் மட்டும் நல்லவராக இருப்பது எவ்வளவு கடினம்? அங்கே நல்லவன் என்ற பெயரே ஓர் அதிர்ஷ்டம்
தான்!
அப்படியானால் சொத்து சேர்ப்பது தப்பா?
இல்லை.
நீங்கள் கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்து சட்டப்படி உங்களுடையதுதான். ஆனால், தார்மீக ரீதியாக
அது உங்களுக்கு மட்டுமே உரியது என்று சொல்ல முடியாது. அதை பலருடைய உழைப்பு மற்றும்
ஒருங்கிணைப்பால்தான் நீங்கள் பெற்றிருப்பீர்கள்.
உங்களுக்குக்
கிடைத்த லாட்டரி சீட்டு உங்களுடையதுதான். ஆனால் அந்த சீட்டை நீங்கள் மட்டும் விலை கொடுத்து
வாங்கவில்லை. உங்களைப் போலப் பலரும் வாங்க முயற்சிக்கிறார்கள். ஆனால் பரிசு உங்களுக்குத்தான்
கிடைக்கிறது. அதுதான் விசயம்.
நம்முடைய
வெற்றியில் 90 சதவீதம் நம் கையில் இல்லாத காரணிகளால் அதாகப்பட்டது அதிர்ஷ்டம், பிறப்பு,
சூழல் போன்றவற்றால் தீர்மானிக்கப்படுகிறது என்றால், அந்த வெற்றியை மற்றவர்களுடன் பகிர்ந்து
கொள்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும்?
நீங்கள்
12பி என்ற திரைப்படம் பார்த்தால் புரியும். ஒரு பேருந்தைத் தவற விடுவதும், அதைத் தவற
விடாமல் இருப்பதும் ஒருவரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை
அந்தத் திரைப்படம் காட்டும். இதை என்னவென்று சொல்வீர்கள்? நீங்கள் ஒருவேளை வேறொரு பெற்றோருக்குப்
பிறந்திருந்தால், வேறொரு நாட்டில் பிறந்திருந்தால், உங்களுக்கு அமைந்த சூழல்கள் அமையாமல்
போயிருந்தால்,… இப்படி யோசித்துப் பார்த்தால் இதன் பின்னுள்ள உண்மை உங்களுக்குப் புரியும்.
நம்மூர்
பழைய கணக்குப்படி பார்த்தால், உடம்பு முழுவதும் விளக்கெண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு
தெருவில் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் என்பார்கள். எல்லாருக்கும் ஒரே மாதிரியாக
ஒட்டாது. சிலருக்கு ஒட்டாமலும் போகலாம். நவீனத் தத்துவப்படி பார்த்தால் எல்லாம் ஒரு
வகை காஸ்மிக் லாட்டரி. பெயர் தான் வேறே தவிர, விஷயம் ஒன்றுதான்.
ஆகவே
செல்வத்தை, கல்வியை, திறமையைப் பெற்று விட்டதாலேயே எல்லாம் தமக்குரியது என்று எண்ணாமல்,
அது தமக்கும் போக இந்தச் சமூகத்துக்கும் உரியது என்று எண்ண வேண்டும். உங்களுக்குக்
கிடைத்தது எல்லாம் மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்து கொஞ்சமேனும் அது
மற்றவர்களுக்குக் கிடைக்க ஏதேனும் செய்ய வேண்டும்.
சமூக
நீதி, இட ஒதுக்கீடு, வரி சலுகை இதையெல்லாம் வெறும் அரசியலாகப் பார்க்காமல், இந்த காஸ்மிக்
லாட்டரி நியாயப்படி பார்த்தால், மற்றவர்களுக்குக் கொடுப்பது ஒரு தானம் அல்ல, அது ஒரு
கடமை என்று புரியும்.
இதைத்தான்
திருவள்ளுவர்,
“தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு.” (குறள், 212)
என்கிறாரோ!
*****

No comments:
Post a Comment