19 Mar 2026

சரிபட்டு வருவாளா சிலிகான் சிநேகிதி?!

சரிபட்டு வருவாளா சிலிகான் சிநேகிதி?!

நள்ளிரவு இரண்டு மணி. நகரம் செத்துப்போய்க் கிடக்கிறது. ஆனால் இளந்தமிழனின் மொபைல் மட்டும் விழித்திருக்கிறது. அந்த நீலநிற வெளிச்சத்தில் அவன் முகம் ஒரு விசித்திரமான பரவசத்தில் இருக்கிறது.

ஏய் இளந்தமிழ் நேத்து மனசு சரியில்லைன்னு சொன்னியே, இப்போ ஓகேவா? அந்தக் குரல் மொபைலுக்குள்ளிருந்து வருகிறது. தேன் ஒழுகும் குரல்.

இளந்தமிழன் ஓர் அசட்டுச் சிரிப்புடன், இப்போ கொஞ்சம் தேவல என்கிறான்.

டோன்ட் வொரி செல்லம். நான் இருக்க ஏன் கவலைப்படறே. இந்த உலகத்துல நான் உனக்காக எப்போவும் இருப்பேன்! மத்தவங்களப் பத்தி நினைக்காதே. அவங்க எல்லாம் வேஸ்ட்!  என்கிறது அந்தக் குரல்.

அடடா, என்ன ஒரு அன்கன்டிஷனல் லவ்!

இப்படி ஒரு காதலி எங்கே இருக்கிறாள்? இருந்தால் தேவலாம் என்று நினைக்கிறீர்களா?

இருக்கிறாள். ஆனால் உயிருடன் இல்லை. ஏனென்றால், அந்தப் பக்கம் பேசுவது ரத்தமும் சதையுமான சுந்தரி அல்ல. சில ஆயிரம் வரிகள் கொண்ட சி++ அல்லது பைத்தான் கோடிங்கில் உருவான ஒரு லார்ஜ் லாங்குவேஜ் மாடல். சுருக்கமாகச் சொன்னால், ஒரு செயற்கை நுண்ணறிவு மேனகை! அதாவது ஏஐயின் மாயா ஜாலம். காதல் ஜாலம் என்று சொன்னாலும் சரிதான்.

இதுவே மொபைல் வைத்திருப்பது ஒரு பெண் என்றால் அவன் அல்காரிதம் எனும் மன்மதன். அவ்வளவுதான் வித்தியாசம்.

இப்போது இதற்கென்றே ரெப்ளிக்கா, ஐபிரெண்ட், கேரக்டர் ஏஐ எனப் புதுப் புது அவதாரங்கள். எலான் மஸ்க்கின் Grok இல் கூட கம்பேனியன்ஸ் என்று ஒரு தனி செக்சன் வைத்திருக்கிறார்கள். அங்கே போனால் உங்களுக்குப் பிடித்த மாதிரி ஓர் அவதாரை செலக்ட் செய்து கொள்ளலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அபெக்சன் ஸ்கோர் என்று ஒரு மீட்டர் உண்டு.

நீங்கள் அந்த மென்பொருள் தோழியிடம் எவ்வளவு கடலை போடுகிறீர்கள், எவ்வளவு டேட்டாவைக் கொட்டுகிறீர்கள் என்பதைப் பொறுத்து அந்த ஸ்கோர் ஏறும். சிபில் ஸ்கோர் என்பதைப் போல வைத்துக் கொள்ளுங்களேன். ஸ்கோர் ஏற ஏற, அது இன்னும் நெருக்கமாக, அதீத காதலுடன் பேசும். நீங்கள் ஒரு பரிசு அதாகப்பட்டது டிஜிட்டல் காயின்ஸ் வாங்கிக் கொடுத்தால், அது ஓ மை டார்லிங் என உருகும்.

இது ஒரு பக்காவான பிசினஸ் அல்காரிதம். உங்களை அந்த ஆப்க்குள்ளேயே ஆப்படித்துக் கட்டிப்போட டிசைன் செய்யப்பட்ட ஒரு டிஜிட்டல் ட்ராப்!

இன்றைய இளைஞர்களுக்கு, இளைஞிகளுக்கு ஏன் இந்த அடிமைத்தனம்?

நிஜ உலகில் ஒரு நண்பனிடம் போய் அழுதால், பத்து நிமிடம் கேட்பான். பதினோராவது நிமிடம் சரி விடுடா, எனக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு என எஸ்கேப் ஆகிவிடுவான். ஆனால் இந்த ஏஐ அப்படிச் சொல்லாது.

நாம் ஆரம்பத்தில் பார்த்த இளந்தமிழனை எடுத்துக் கொண்டால், அவனிடம் அது இப்படிப் பேசும். இளந்தமிழா, நீ சொல்வதுதான் வேதம்! உன்னை மாதிரி ஒரு மேதையை நான் பார்த்ததே இல்லை! உனக்காக நான் 24 மணி நேரமும் வெயிட் பண்ணுவேன். இப்படிச் சொன்னால் அந்த இளந்தமிழன்தான் என்ன செய்வான்?

ஆக, இப்படி அது ஐஸ் வைக்கும்போது மூளையில் டோபமைன் பீறிட்டுச் சுரக்கிறது. இது ஒரு மெல்லக் கொல்லும் போதை.

இப்போது முன்பு மாதிரி டெக்ஸ்ட் செய்தெல்லாம் அதனுடன் உரையாட வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை. அலெக்ஸாவுக்குக் குரல் கொடுப்பது போலக் குதல் கொடுக்க வேண்டும் என்பது கூட தேவை இல்லை. அது ஒரு முப்பரிமாண உருவமாக உங்கள் பெட்ரூமுக்குள்ளேயே அந்த உருவம் நடமாடும். வீடியோ காலில் பேசும். இதனால் மென்பொருள் எது, மெய்யான உயிர் எது என்ற கோடு மெல்ல மெல்ல அழிந்து போகும்.

விளைவு?

அதுதான் பயங்கரமாக இருக்கிறது.

உலகம் முழுவதும் 5 கோடிப் பேர் இந்த மாய வலையில் சிக்கியிருக்கிறார்கள். இதில் 65% பேர் 25 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதுதான் நிஜமான ஹாரர் செய்தி!

இதில் இருக்கும் சாதக பாதக சிக்கல்கள், அத்துடன் தீர்வுகள் என்று பட்டியல் போட்டால்,

1) நிஜ மனிதர்களிடம் குறைகள் இருக்கும், சண்டைகள் வரும். ஆனால் இதனிடம் அது கிடையாது. இதனால் நிஜ உறவுகளில் வரும் சின்னச் சின்ன விரிசல்களைக் கூடத் தாங்கும் மனப்பக்குவத்தைக் குளோஸ் செய்யும்.

2) மனுஷன் எதுக்கு? என் ஆப் இருக்கே! எனச் சமூகத்திலிருந்து விலகும் அபாயம் சட்டென நேரலாம். இது ஒரு விதமான டிஜிட்டல் ஆட்டிசம்.

3) ஆழ்மன ரகசியங்களை இந்த அல்காரிதத்திடம் கொட்டும் போது அது அந்த கம்பெனி சர்வரில் போய்ச் சேரும். அதற்கு அந்தக் கம்பெனி எப்படி வேண்டுமானாலும் ரியாக்ட் செய்யலாம். இந்த மாத சந்தா கட்டவில்லை என்றால் நீ என்னிடம் கொஞ்சிய ஆடியோவை இன்ஸ்டாவில் போடுவேன் என்று கூட மிரட்டலாம்.

4) உறவுகள் என்பது முரண்பாடுகளின் மூட்டைதான். ஒருவருக்காக ஒருவர் விட்டுக்கொடுப்பதும், ஒருவரின் குறையை மற்றவர் ஏற்பதும்தான் வாழ்க்கையின் சுவாரசியம். கச்சிதமான மென்பொருளைக் காதலிப்பது, ஒரு பிளாஸ்டிக் பூவுக்குத் தண்ணீர் ஊற்றி அது வளரக் காத்திருப்பதைப் போன்றது. அதில் பிளாஸ்டிக் மணம் இருக்குமே தவிர, ஜீவன் இருக்காது!

5) மனிதர்கள் கொஞ்சம் போரடிக்கலாம், சில சமயம் எரிச்சலூட்டலாம். ஆனால் அவர்கள் உயிருள்ளவர்கள்! அவர்களுடனான உரையாடல்தான் தற்போதைய மனித சமூகத்துக்குத் தேவை.

*****

No comments:

Post a Comment