17 Mar 2026

15 ஆயிரம் டாலரும் ஒரு கொலையும்!

15 ஆயிரம் டாலரும் ஒரு கொலையும்!

அஷ்லி ஸ்டீவர்ட். வயது 41. ஆறு குழந்தைகளின் தாய். ஜனவரி 27, 2026 அன்று தன் வீட்டு வரவேற்பறையிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். கொன்றது, அவர் முன்னாள் கணவர் ரையான் டாட்.

காரணம்? பணம்.

சம்பவம் நடந்த இடம் அமெரிக்கா.

அஷ்லியும் ரையானும் ஹைஸ்கூல் காலத்திலிருந்து காதலர்கள். 2004 இல் திருமணம். ஐந்து குழந்தைகள் பிறந்தன. 17 வருடங்கள் ஓடின. ஆனால், உள்ளுக்குள் ரையான் ஒரு சைக்கோ என்பது அஷ்லிக்குத் தெரிந்தபோது காலம் கடந்திருந்தது. அடி, உதை, டார்ச்சர். 2021 இல் அஷ்லி விவாகரத்து கோரினார்.

விவாகரத்து கிடைத்தது. ஆடம் ஸ்டீவர்ட் என்பவருடன் அஷ்லிக்கு மறுமணம். ஒரு அழகான பிளெண்டட் ஃபேமிலி. இல்லினாய்ஸின் ஓஸ்வெகோ நகரில் வாழ்க்கை நிம்மதியாகப் போய்க்கொண்டிருந்தது.

ஐந்து குழந்தைகளின் பராமரிப்புக்காக மாதம் 15,000 டாலர் தரவேண்டும் என்று ரையானுக்கு கோர்ட் உத்தரவிட்டது. ரையான் ஒரு கைதேர்ந்த ஆப் டெவலப்பர். சம்பளம் லட்சங்களில். கொடுக்கலாம். ஆனால், ஈகோ தடுத்தது.

காசு தர முடியாது என்று அடம்பிடித்தார். திவாலாகிவிட்டதாக மனு போட்டார். ஜனவரி தொடக்கத்தில் நீதிபதி அவரை செம்மையாகக் கவனித்தார். நீ காசு தராமல் உன் குழந்தைகளை பட்டினி போடுகிறாய் என்று வார்னிங் கொடுத்தார்.

அவ்வளவுதான், ரையான் மூளையில் ஒரு விஷமம் உருவானது.

அந்த 27 நிமிடங்கள் மோசமாக அமைந்தன. ஜனவரி 27, 2026. மதியம் 1.10 மணி.

ஆடம் ஸ்டீவர்ட் தன் அலுவலகத்தில் இருந்தார். அவர் போனில் ஒரு பீப் சத்தம். வீட்டு செக்யூரிட்டி கேமரா அலர்ட்.

போனைத் திறந்து பார்த்த ஆடம் அதிர்ந்து போனார். கேமரா லைவ் ஃபீடில் அஷ்லி அலறிக்கொண்டு ஓடுகிறார். பின்னால் ஒரு உருவம் துரத்துகிறது. கருப்பு ஜாக்கெட், முகம் மறைத்த துணி. அது ரையான் டாட் என்று அடையாளம் காண ஆடம்முக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் ஆடம் 911க்கு போன் செய்தார். அது அமெரிக்காவிற்கான அவசர கால எண். போலீஸ் அலறி அடித்துக்கொண்டு அஷ்லி வீட்டுக்கு வந்தபோது, எல்லாம் முடிந்துவிட்டது. அஷ்லி கத்தியால் குத்தப்பட்டு கிடந்தார்.

ரையான் டாட் காரில் தப்பிச் செல்லும்போது போலீஸாரால் வளைக்கப்படுகிறார்.

வெறும் 27 நிமிடங்களில் ஒரு உயிர் போய்விட்டது. கொலையாளி சிக்கிவிட்டான்.

இப்போது என்ன?

ரையான் மீது ஃபர்ஸ்ட் டிகிரி மர்டர், ஹோம் இன்வேஷன், ஸ்டாக்கிங் என கிரைம் லிஸ்ட் நீள்கிறது. கோர்ட்டில் அவர் திவாலாகிவிட்டேன் என்று சொன்னதெல்லாம் பொய் என போலீஸ் நம்புகிறது. கத்தி இன்னும் கிடைக்கவில்லை. சிசிடிவி காட்சிகள் தான் மெயின் எவிடென்ஸ்.

மார்ச் மாதம் ரையான் கூண்டில் ஏறுவார். அநேகமாக அவருக்குக் கிடைக்கப்போவது ஆயுள் தண்டனை.

ஆறு குழந்தைகள். அம்மா இல்லை. அப்பா ஜெயிலில். இன்னொரு அப்பாவான ஆடம் இப்போது அந்தக் குழந்தைகளுக்காக கோ ஃபண்ட் மீ பக்கத்தில் உதவி கேட்டு நிற்கிறார்.

இது பற்றி என்ன சொல்வது?

பணம் படுத்தும் பாடு அல்லது ஈகோ படுத்தும் பாடு!

இந்த இரண்டு கருமத்தின் மீதான பிடிப்பை விட்டிருந்தால், இப்படி ஒரு குற்றமே நடந்திருக்காது.

குற்றமே காக்கா பொருளாகக் குற்றமே

அற்றம் தரூஉம் பகை.         (குறள், 434)

என்ற திருக்குறளைத்தான் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

*****

No comments:

Post a Comment