1 Feb 2026

இரத்தக் களறியான இந்தியப் பங்குச் சந்தைகள்!

ஏன் சரிந்தன பங்குச் சந்தைகள்?

இந்தியாவின் மிகப்பெரிய இரு பங்குச் சந்தைகள் நிப்டியும் சென்செக்சும். இரண்டு பங்குச் சந்தைகளுமே பட்ஜெட் தாக்கலுக்குப் பின் மாபெரும் தாக்குதலுக்கு உள்ளாயின.

இன்று ஞாயிற்றுக் கிழமை. வழக்கமாகப் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை நாள். எனினும் ஸ்பெஷல் கிளாஸ் வைக்கப்படுவதைப் போல, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் இன்று பங்குச் சந்தைகள் இயங்க அறிவுறுத்தப்பட்டன.

ஒருவேளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இன்று பங்குச்சந்தைகள் இயங்காமல் இருந்தால், நாளை அதீத ஏற்ற இறக்கங்கள் பங்குச் சந்தையில் இருக்கலாம் என்பதற்காகத்தான் இயங்க அறிவுறுத்தப்பட்டன. அந்த நோக்கத்தையே பங்குச் சந்தைகளின் போக்கு மாற்றி அமைத்து விட்டன. இச்சம்பவம் பங்குச் சந்தையில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு வலுசேர்க்கும் மற்றுமோர் உதாரணமாகி விட்டது. சுனாமிக்குத் தடுப்பணை கட்ட முடியாது என்பது நிரூபணமாகி விட்டது. பங்குச் சந்தை ஒரு விசித்திரமான மிருகம். அது எப்போது எகிறிக் குதிக்கும், எப்போது விழுந்து கையைக் கடிக்கும் என்பதெல்லாம் அனுமானிக்க முடியாத அமானுஷ்யங்கள்.

அது சரி, ஏன் சரிந்தன பங்குச் சந்தைகள்?

பங்குச் சந்தைகளின் சரிவுகளுக்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

அதில் முதன்மையானது, மூலதன ஆதாய வரி உயர்வு (Capital Gains Tax). இதுதான் சந்தை சரிந்ததற்கு மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் குறுகிய கால மூலதன ஆதாய வரி (STCG) 15% இலிருந்து 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) 10% இலிருந்து 12.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் லாபத்தில் அதிக வரி கட்ட வேண்டியிருப்பது பங்குச் சந்தையில் ஓர் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இது போன்ற கசப்பு மாத்திரைகளை முதலீட்டாளர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். வேறு எங்கேயாவது இனிப்பு மாத்திரை கிடைக்கிறதா என்று தேடப் போய் விடுவார்கள். அப்படி தேட இப்போது ஓடிப் போய் விட்டார்கள்.

பங்குச் சந்தைகளின் சரிவுக்கு இரண்டாவது முக்கிய காரணம், செக்யூரிட்டி டிரான்சாக்சன் வரி உயர்வு (STT). பங்குச் சந்தையில் டிரேடிங் செய்பவர்களுக்கு, குறிப்பாக ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு STT வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது வர்த்தகச் செலவை அதிகரிப்பதோடு, சந்தையில் பணப்புழக்கத்தைக் குறைக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் பங்குச் சந்தையில் ஓர் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என்று கூட ஆகலாம். யார் விரும்புவார்கள் இதை, புரோக்கரேஜ்ஜை விட டேக்ஸ் கூடுதலாகப் போனால்?

வழக்கமாகவே பங்குச் சந்தையில் அதிக எதிர்பார்ப்பு மற்றும் லாபப் பதிவு (Profit Booking) எப்போதும் இருக்கும். பட்ஜெட்டுக்கு முன்னதாகவே நிஃப்டியும் சென்செக்சும் கணிசமாக உயர்ந்திருந்தன. அதே நேரத்தில், பட்ஜெட்டில் சந்தையை அதிரடியாக உயர்த்தும் வகையிலான சலுகைகள் எதுவும் வராததால், முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை எடுத்துக்கொண்டு பங்குகளை விற்கத் தொடங்கி விட்டனர். இது இயல்பாகவே சந்தையில் சரிவை ஏற்படுத்தி விட்டது. பட்ஜெட்டை வைத்து ஒரு ஜாக்பாட் அடிக்கலாம் என்று நினைத்தவர்கள், உள்ளதே போதும் என்று துண்டைக் காணும், துணியைக் காணும் என்று கம்பி நீட்டி விட்டார்கள். இது பங்குச் சந்தைகள் சரிவதற்கான மூன்றாவது காரணம்.

நான்காவது முக்கிய காரணமும் ஒன்று இருக்கிறது. அது,  நுகர்வு மற்றும் வருமான வரியில் ஏற்பட்ட ஏமாற்றம். நடுத்தர வர்க்கத்தினரின் கையில் அதிகப் பணப்புழக்கம் இருக்கும் வகையில் பெரிய வருமான வரிச் சலுகைகள் வரும் என்று இந்தப் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எதுவும் வரவில்லை. பழைய அறிவிப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய வருமான வரி முறையில் வரி தாக்கல் செய்வதில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும், அது சந்தையின் பெரிய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை.

இவை எல்லாம் சேர்ந்து பங்குச் சந்தையில் பெருத்த சரிவை ஏற்படுத்தி விட்டன. இது மத்திய நிதி அமைச்சகமும் நிதி அமைச்சருமே எதிர்பாராத ஒரு சரிவாகத்தான் இருக்கும். வழக்கமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்புகள் இப்படிச் சந்தையில் சரிவை ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தன. இந்த முறை அதை இந்திய பட்ஜெட் அறிவிப்பு ஏற்றுக் கொண்டு விட்டது.

மொத்தத்தில் கணக்குப் பிள்ளையின் கையை மீறிப் போன ஞாயிற்றுக் கிழமையாகி விட்டது இன்றைய ஞாயிறு. இன்றைய சந்தைச் சரிவில் சிக்கிக் கொண்டவர்களுக்கு இது விடியா ஞாயிறுதான்.

*****

No comments:

Post a Comment