எப்படி இருக்கிறது இன்றைய பட்ஜெட்?
திரில்லர்
நாவல் போல ஆரம்பித்த இன்றைய பட்ஜெட், இடையிடையே டிவிஸ்ட் கொடுத்து, கடைசியில் பல விசயங்களுக்கு
தொடரும் போட்டு மூன்று புள்ளி வைத்திருக்கிறது.
போன
முறை கொடுத்ததே அதிகம், இதற்கு மேல் இன்கம்டாக்ஸ் ரிலீப் கேட்காதே என்று தலையில் அடித்து
உட்கார வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் சாரிடன் விலையில் ஒரு சின்ன ரிலீப் கொடுத்திருக்கிறார்கள்.
நீங்கள்
பொருளாதாரப் புள்ளி என்றால், போன பட்ஜெட்டுக்கும் இந்த பட்ஜெட்டுக்குமான ஆறு வித்தியாசங்களைப்
பூத கண்ணாடி கொண்டுதான் தேட வேண்டும்.
சென்னை
– பெங்களூரு – ஹைதராபாத் இடையே அதிவேக ரயில்களை விடப் போகிறார்கள். கண்டிப்பாக அதில்
ரிசர்வேஷன் பண்ணுவதற்குள் சாமானியர்களுக்கு ஜீரோ சீட்டுகள்தான் எஞ்சியிருக்கும்.
உள்கட்டமைப்பிற்காகப்
பனிரெண்டு லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கியிருக்கிறார்கள். இது கட்சிக்கார கான்ட்ராக்டர்களுக்கும்,
ஜால்ரா அடிக்கும் நிறுவனங்களுக்கும் அனுகூலமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு ரோடு
ஷோ பண்ணுவதற்கும் வசதியாக இருக்கும்.
புதிய
ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதற்குள் டிரம்ப்
வரியை உயர்த்தாமல் இருக்க வேண்டும்.
சிறு
குறுதொழில் நிறுவன வளர்ச்சிக்காக பத்தாயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இது நூறு பேருக்குச் சாப்பாட்டைத் தயார் செய்து லட்சம் பேருக்கு விநியோகம் செய்வதைப்
போலத்தான். ஆளுக்கு ஒரு பருக்கைக் கிடைத்தால் பெரிய விசயம்.
டெக்னாலஜி,
சிப் என்று பெரிய நிதி ஒதுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இங்கு ரோடுகளில் இருக்கும்
குழிகளை அடைக்க எப்போது நிதி ஒதுக்கப் போகிறார்களோ?
வெளிநாடு
பறக்கிறவர்களுக்கு இந்தப் பட்ஜெட்டில் சில அனுகூலங்கள் இருக்கின்றன. உள்நாட்டிலேயே
சுற்றித் திரியும் வந்தே பாரத்துகளுக்கு அது செட் ஆகாது. வந்தேபாரத்துகளில் உள்ளே போய்
ஒரு ரவுண்ட் வரும் அளவுக்குச் சம்பாதிப்பவர்களே இங்கு சொற்பம்தான். அவர்களெல்லாம் ஆகாய
விமானத்தைப் பார்க்கும் போதெல்லாம் டாட்டா காட்டிக் கொள்ள வேண்டியதுதான். வரி டேட்டா
அவர்களுக்குப் புண்ணியம் இல்லாதது.
இந்தப்
பட்ஜெட் பல புதுமையான அறிவிப்புகளைக் கொண்டு வந்திருக்கும். அதற்கு வாய்ப்பில்லாமல்
அடித்து விட்டார் டொனால்ட் டிரம்ப். அவர் அவ்வபோது போட்ட பட்டாசுகளை நமத்துப் போக,
பல அறிவிப்புகளை அவ்வபோது வெளியிட்டதால் லட்சுமி வெடியாய் வெடிக்க வேண்டிய இந்த பட்ஜெட்
பட்டாசு, ஒத்த வெடி ரேஞ்சுக்குத்தான் வெடித்திருக்கிறது.
இந்தப்
பட்ஜெட்டைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பாப்கார்ன் விலையைக் குறைத்திருக்கிறார்கள்,
மற்றபடி தியேட்டர் டிக்கெட் அதே விலைதான். வசதி இருப்பவர்கள் போய் பார்த்துக் கொள்ளலாம்.
மற்றவர்கள் ஓடிடி, டிவி, டெலிகிராம், லிங்க் என்று கிடைப்பதை வைத்துப் பார்த்துக் கொள்ள
வேண்டியதுதான்.
அது
எப்படி என்கிறீர்களா? ஜிஎஸ்டி வரி இல்லாத ரோட்டோரக் கடையில் ஒரு வடையென்ன? நான்கு வடை
கூட சாப்பிட்டுக் கொள்ளலாம். வடைக்கு மட்டும் காசு கொடுத்தால் போதும். வரிக்கு நஹி.
தட்ஸ்
ஆல் யுவர் ஆனர்!
*****

No comments:
Post a Comment