2026 தேர்தலும் கூட்டணிகளும்
2026
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனை போட்டி என்பது ஒரு வழியாக உறுதியாகிருக்கிறது.
பிரதானப்
போட்டி என்பது திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேதான் என்றாலும், விசிலடித்துக்
கொண்டு என்ட்ரி கொடுத்திருக்கும் விஜய்யின் தவெகவை இப்போதைக்குத் தேர்தல் முடிவுகள்
வரும் வரை டெலிட் செய்யவும் முடியாது, அதை ஒரு பெண்டிங் பைலுக்குத் தள்ளி வைத்துக்
குறைத்து மதிப்பிடவும் முடியாது. சீமானின் நாம் தமிழர் கட்சியும் 5 சதவீதத்திலிருந்து
10 சதவீத வாக்குகளைப் பெறும் கட்சியாக இருப்பதால் இந்த முறை அது எந்தக் கூட்டணிக்குப்
பாதகமாக இருந்து கோட்டையைப் பிடிக்க விடாமல், டேட்டாவைக் காலி செய்யும் என்பதையும்
நோக்க வேண்டும்.
இந்த
முறைக் கோட்டையில் உதிக்கப் போவது உதய சூரியனா? அல்லது கோட்டையில் மலரப் போவது இரட்டை
இலையுடன் கூடிய தாமரையா? என்று தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறது. இதற்கான பதிலை லீனியராகத் தேடிக் கண்டடைய முடியாது. தேர்தல் முடிவுகள்
எப்போதும் நான் லீனியர் மோட்தான்.
திமுக
– அதிமுக கூற்றுகளின்படி பார்த்தால் வெல்லப் போவது திராவிட மாடலா அல்லது இரட்டை இன்ஜினா?
மே மாதத்தில் தேர்தல் நடைபெறப் போகிறது என்பதால் இந்தக் கேள்விக்கான பதில் என்பது மே
மாதக் கோடையை விட சுட்டெரிக்கும் ஒன்றுதான்.
திமுக
தாங்கள் செய்த சாதனைகளைப் பாருங்கள் என்கிறார்கள். அதிமுகவும் – பாஜகவும் குடும் ஆட்சியை
ஒழிப்போம் என்கிறார்கள். இரண்டுமே சரியில்லை, நாங்கள்தான் மாற்று என்கிறார்கள் தவெகவினர்.
தாங்கள் தனிமரம் என்றாலும் தோப்பு என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.
திமுக
பக்கம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக என்று பழைய கூட்டணி. இது அவர்களுக்குப்
பழக்கப்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம்.
அதிமுக
பக்கம் பாஜக, அன்புமணி பாமக மற்றும் கூடுதலாகத் தினகரன் என்று கூடுதல் பலம் பொருந்திய
புதிய கணக்கிற்கான கூட்டணி. இதில் தினகரனால் ஒரு அப்கிரேட் நடந்திருக்கிறது.
தேமுதிக
எந்தப் பக்கம் சேரும் என்பது பரமபதத்தைக் கணிப்பது போலத்தான். எங்கே ஏணி இருக்கும்,
எங்கே பாம்பு கொத்தும் என்பதெல்லாம் தெரியாது.
இராமாதாஸின்
பாமக எந்தப் பக்கம் என்பதற்கு அநேகமாக அது திமுகவின் பக்கம்தான் என்பதற்கான வெளிச்சக்
கீற்றுத் தெரிகிறது. இது உண்மையான வெளிச்சக் கீற்றா, கிரகணக் கீற்றா என்பதும் போகப்
போகத்தான் தெரியும்.
ஓ பன்னீர்செல்வம்
என்ன முடிவெடுக்கப் போகிறார்? இப்போது முடிவாகியிருக்கும் கூட்டணியிலிருந்து யாரேனும்
பிய்த்துக் கொண்டு போவார்களா? என்பதெல்லாம் தேர்தல் நெருங்கும் வரையில் விடை காண முடியாத
பெர்முடா முக்கோணப் புதிர்.
இதற்கும்
மேலாக ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் ஸ்லீப்பர் செல்களை மற்றக் கட்சிகளில் களம் இறக்கியிருப்பதாகக்
கதை அளந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கதை உண்மையானால் தேர்தல் முடிவுகள் எப்படி
வேண்டுமானாலும் திசை திரும்பலாம்.
இதற்கிடையில்
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் ஆளும் கட்சிக்கு சாரிடான் போடும்
அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் வாக்குகள் பல்டி அடித்தால்
என்னவாகும் என்பதும் தலையா? பூவா? கதைதான்.
இதைத்
தாண்டி தேர்தல் நேரத்தில் மக்களின் மனநிலை என்பது
இங்கி, பாங்கி நிலையிலேயே இருக்கும். அவர்களது விரல்கள் எந்தப் பொத்தானையும்
அழுத்தலாம். அதற்கான உரிமையும், சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கிறது. அந்த பாஸ்வேர்டைக்
கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமானதல்ல.
இப்போது
தேர்தல் களத்தை நோக்கி ஒவ்வொரு கட்சியின் கூட்டணிகளும் லோடிங் ஆகிக் கொண்டிருக்கின்றன.
இந்த லோடிங்கை வைத்து எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும், எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்க
முடியாமல் அன்லோடிங் ஆகும் என்பது தேர்தல் முடிவு வரும் வரை கணிப்பது சிரமம்தான்.
கூட்டணிக்
கணக்குகள் கச்சிதமாக அமைந்து, மக்கள் மனநிலையும் அதற்குத் தோதாக இருந்து, வாக்குறுதிகள்
அவர்களுக்குப் பிடித்துப் போய் விட்டால் 200 சீட்டுகள் என்ற டபுள் செஞ்சுரி கூட அடிப்பதற்கு
இந்தத் தேர்தலில் வாய்ப்பு இருக்கிறது. அந்தக் கச்சிதமான மசாலாவைக் கிண்டுவது சாதாரணமல்ல.
சரியாகக் கிண்டினால் மணமணக்கும் மசாலா, கொஞ்சம் பதம் தப்பினால் கருக்கல் வாடையைத் தரும்
என்பதால், கொஞ்சம் கவனமாகவேப் போட வேண்டிய கணக்குக் கூட்டணிக் கணக்கும், வாக்குறுதி
வழக்கும்.
பொறுத்திருந்து
பார்பபோம் எந்தக் கட்சியின் கூட்டணிக் கணக்கு டபுள் செஞ்சுரி அடிக்கிறது, எந்தக் கட்சியின்
கூட்டணிக் கணக்கு டக் அவுட் ஆகிறது என்று.
*****

No comments:
Post a Comment