மிஸ்டர் கருத்து பஸ்டர் ஆகட்டும்!
எஸ்.கே. திடீரென்று கோபத்தின் உச்சிக்கு
ஏறி விட்டான். அதைத் தணிப்பதற்கு எதையாவது வெறித்தனமாகச் செய்ய வேண்டும் அவனுக்கு.
அப்படிச் செய்து அதனால் சூழ்நிலைகள் விபரீதமாகப் போன அனுபவங்கள் அவனுக்கு நிறைய உண்டு.
அப்புறம் யோசித்துப் பார்த்தால் கோபப்படாமல்
இருந்திருக்கலாமே என்று அவனுக்குத் தோன்றும். உண்மைதான். கோபம் எந்தப் பிரச்சனையையும்
தீர்ப்பதில்லை. மாறாக பிரச்சனைகளை அபரிமிதமாக உருவாக்கி விடுகிறது.
அன்று எஸ்.கே.வுக்கு அப்படி ஒரு சூழ்நிலை.
தேவையில்லை அந்தக் கோபம். அதனால் நெஞ்சுவலி கண்டதுதான் மிச்சம்.
கோபப்படுவதால் யார் மாறுவார்கள் என்று
எஸ்.கே. நினைக்கிறானோ, அவர்கள் மாறுவதில்லை. மாறாக அவனை நிலைகுழைய அடித்து விடுகிறார்கள்.
அவன் பரிதாபமான நிலைக்கு ஆளாகி விட்டான்.
எஸ்.கே. ஒரு திருமண ஏற்பாடு குறித்து கருத்துக்
கூறி விட்டான். அவன் அந்தக் கருத்தைக் கூறியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் கூறி
விட்டான். மனதில் பொங்கி எழுவதை வெளியில் சொன்னால்தான் நிம்மதி என்பது போலவும்,
மன பாரம் குறைந்தது போலவும் சில நேரங்களில் இப்படி ஏதாவது உளறிக் கொட்டி மாட்டிக்
கொண்டு விடுகிறான் எஸ்.கே.
அதன் விளைவுகள் மோசமானவை. கருத்துகள்
கத்தியை விட கூர்மையானவை. மனதை எக்குதப்பாக தாக்கும் இயல்புடையவை. அதை மட்டும் மனதில்
வைத்துக் கொண்டு வஞ்சம் தீர்க்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
கருத்து கூற வேண்டும் என்றால் காமாசோமாவான
ஒரு பொதுக்கருத்து இருக்கும். அதை மட்டும் கூற வேண்டும். அது எல்லாவற்றிற்கும் பொருத்தமானதாக
இருப்பதோடு, பிரச்சனையை உருவாக்காமல் பாதுகாப்பாக இருப்பதோடு, எந்தச் செயலையும் செய்யாமல்
நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்து விடும்.
மற்றபடி மனபாரத்தைக் குறைத்துக் கொள்ள
வேண்டும் என்றால் உங்கள் மத்தியில் இது போன்று எழுதி எஸ்.கே. குறைத்துக் கொள்ள வேண்டும்.
எஸ்.கே.வுக்கு ஆரம்ப காலத்தில் இந்த நுட்பம் தெரியாமல் நிறைய மாட்டியிருக்கிறான். மற்றவர்களிடம்
பேசி அதன் மூலம் மனபாரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இறங்கினால் அதன் அவ்வளவு
ஆபத்தையும் பேசித் தீர்க்க நினைத்தவர் அனுபவிக்க வேண்டும். அது அநாவசியம்.
எஸ்.கே. இதை அனுபவித்துப் புரிந்து கொண்டவன்.
நீங்கள் இதை படித்த மாத்திரத்திலே புரிந்து கொள்ளுங்கள். எஸ்.கே. பட்டதே இந்த ஒட்டு
மொத்த உலகுக்கும் போதும்.
*****