30 Jul 2017

கோபம் எனும் மாயை

கோபம் எனும் மாயை
            எஸ்.கே. சிறு சுடுசொல் பொறுக்க மாட்டான். பந்தாடி விடுவான். இப்படிப்பட்ட சூழலில்தான் எஸ்.கே.யுடன் இணைந்து வாழ வேண்டி இருக்கிறது எம்.கே.வுக்கு. இதற்க ஒரே வழி எதையும் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவதுதான். அப்படித்தான் இருந்தான் எம்.கே. திடீரென்று கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. கோபம் இப்படித்தான் ஒரு பொறுப்பை உருவாக்குவது போலக் காட்டி மாட்டி விட்டு விடும்.
            நேற்று ஆரம்பித்த பிரச்சனை. டீக்கடையில் ஒருவனை எம்.கே. அடித்ததில் ஆரம்பித்தது. பொதுவாக யாரையும் அடிக்கக் கூடாது என்ற கொள்கையில் இருந்த எம்.கே. எப்படி மாறினான் என்றே புரியவில்லை. ஆனால் இந்தக் கோபத்திற்குக் காரணம், இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிடிமானங்களே. அதை மீறினால் மனம் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபப்பட்டு விடுகிறது. அது எப்படியாவது இருந்தால் என்ன? அப்படி இருந்து விட்டால், கோபம் ஏற்படப் போவதில்லை. அப்படி இருக்க முடியவில்லை.
            கட்டுபாடுகள், நிபந்தனைகள், நிர்பந்தங்கள் இவைகள் எல்லாம் கோபத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிச்சயம் அவைகள் மீறப்படும் போது அதை தாங்க இயலாது. ஏதாவது நடவடிக்கை எடுக்கத் தோன்றும். அதில் முதல் நடவடிக்கையாக கோபம் ஏற்படும். இப்படித்தான் அதீத கோபங்கள் ஏற்படுகின்றன.
            கோபப்படுவதால் நிலைமை மாறி விடும் என்று எம்.கே. நினைக்கலாம். நிலைமை மாறுவதில்லை. எப்படி மாறும்? யார் தங்கள் மனநிலையை விட்டுத் தருவார்கள்? அதுவும் எஸ்.கே. நடக்குமா?
            எம்.கே. கோபப்படுகிறான் என்று தெரிந்தாலே, எஸ்.கே.வுக்கு ஒரு பிடிவாதம் வந்து விடும். ஒருவரது பிடிவாதம் ஒருவரது கோபத்தை அதிகரிக்கச் செய்யுமே தவிர குறையச் செய்யாது. பிடிவாதம் மேலும் வலுத்துக் கொண்டே போகும். கோபமும் வலுத்துக் கொண்டுதான் போகும்.
            கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே, சில நேரங்களில் விபரீதமாக ஏதாவது நடந்து விடுவதுண்டு. ஆகவேதான் எத்தகைய பலன் தருவதாக இருந்தாலும் கோபப்பட வேண்டாம். கொஞ்சம் காத்திருந்தால் போதும், கோபத்தால் அடையும் பலனை எந்த வித நட்டமும், எதிர்மறை விளைவுகளும் இல்லாமல் பெற்று விட முடியும். தேவை கொஞ்சம் பொறுமைதான்.
            கோபத்திற்குச் சிறந்த மருந்து பொறுமைதான். பொறுமையின் பலன் கோபத்தின் எதிர்மறை விளைவுகள் இல்லாமல் பலனைப் பெறுவதுதான். ஆகவேதான் பொறுமை உயர்ந்த சக்தியாக இருக்கிறது.
            எம்.கே.வையே எடுத்துக் கொள்ளுங்கள். எம்.கே. கோபப்பட, எஸ்.கே.யின் பிடிவாதம் இறுகுகிறது. எம்.கே. இளகினால், எஸ்.கே. உருகி விடுகிறான். எஸ்.கே. இளகுகிறானோ இல்லையோ, எம்.கே.வின் இதயத் துடிப்பு எகிறி, உடல் நலம் பாதித்து தேவையா இதெல்லாம்? வாழ்விற்குத் தேவை எதுவோ, அது கோபமின்றி இருப்பதில்தான் இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...