30 Jul 2017

கோபம் நின்றது!

கோபம் நின்றது!
            எஸ்.கே. இன்று காலை கோபப்பட்டான். அவன் குழந்தைகள் பள்ளிக்கூடம் கிளம்ப அடம் பண்ண ஆரம்பித்ததில் ஆரம்பித்த கோபம். இப்போது வரை நின்றபாடில்லை. இதனால்தான் அவன் கோபப்படுவதை விரும்புவதில்லை.
            எல்லா கோபமும் கோபம் கொண்டவனை அழித்த பின்தான் நிற்கின்றன.
            கோபப்படும் போது அர்த்தமுள்ளதாகப் படும் உணர்வு, கோபம் வடிந்த பிறகு அர்த்தமற்றதாகி விடுகிறது. அதற்கு எந்தப் பொருளும் இருப்பதில்லை. ஆனால் அது ஏற்படுத்திய வடுக்கள் தீராத ரணத்தைக் காலந்தோறும் தந்து கொண்டே இருக்கின்றன.
            அடக்கி வைக்கப்படும் விசயங்கள் கோபத்தில் பூதாகரமாக எழுகின்றன. இதனால் ஒரு விசயத்தில் முன்னேயும் செல்ல முடியாது. பின்னேயும் செல்ல முடியாது. எங்கு சென்றாலும் முட்டிக் கொள்ள வேண்டியதாக இருக்கும். சுற்றி இருப்பவர்களின் பேச்சுகளும், முடிவுகளும் படு குழப்பமாக இருக்கும்.
            கோபமாக இருக்கும் எஸ்.‍கே.யின் நிலைமை இப்படி என்றால் எதிர்தரப்பினர் நிலை பாவம்தான். அவர்கள் இதுநாள் வரை பைத்தியம் ஆகாமல் இருந்தது ஆச்சர்யம்தான்.
            எஸ்.கே. நினைத்துப் பார்த்தான், "கோபத்தால் என்னவாகப் போகிறது, என் பிராணன் போவதைத் தவிர?"
            இதற்கு மேல் கோபப்பட்டால், எல்லாரும் தன் மேல் கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள் என்பது எஸ்.கே.வுக்குத் தெரியும். தானாக நிறுத்திக் கொள்வதைப் போல் நிறுத்திக் கொண்டான்.
            "ஹய்யோ! இவ்வளவு சீக்கிரத்தில் கோபத்தை நிப்பாட்டிக்கிட்டாரே!" எஸ்.கே.வைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படுவதைப் போல் நடிக்க ஆரம்பித்தார்கள்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...