30 Jul 2017

அனுபவங்களின் குரூரங்கள்

அனுபவங்களின் குரூரங்கள்
            எது நடந்தாலும் மனதளவில் பொறுமையாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். பொறுமையின் சக்தி அது.
            நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால் போதும். அதுவே அவர்கள் நம்மை இழிவு படுத்துவதற்குப் போதுமானது. அடைவது, பெறுவது குறைவாக இருந்தாலும் தற்சார்பாக இருக்கப் பழக வேண்டும். தன்மானத்திற்கு அதுதான் வழி.
            காலைச் சாப்பாட்டை எஸ்.கே. ஹோட்டலில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டதன் மூலம், காலை உணவுக்காக வீட்டில் தொல்லை கொடுப்பது நின்று போனது. அது பல பிரச்சனைகளைத் தடுத்தது.
            அண்மையில் அவனுக்கு பதினோரு மணியளவில் டீ வைத்துக் குடிக்க வேண்டும் என்ற விருப்பத்தால், சில நாள்கள் வரை அவனே டீ வைத்துக் குடிக்க ஆரம்பித்தான். கடைசியில் அது சிக்கலில் முடிந்தது. வீட்டில் இருப்பவர்களுக்கு காபி பிடிக்கும். எஸ்.கே. காபியை விட்டு டீக்கு மாறும் போது இப்படிப்பட்ட பிரச்சனைகள் எழுந்து விடுகின்றன. கேட்பதற்குச் சாதாரணமாக இருக்கலாம். பிரச்சனை பூதாகரமாக எழக்கூடியது என்பதை நீங்கள் எஸ்.கே.வின் வீட்டில் அருகில் இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும்.
            எஸ்.கே.யின் மாற்றம் வீட்டில் இருப்பவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அவர்கள் எஸ்.கே.வைத் தாக்குவதற்கு நேரம் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். சரியான நேரம் கிடைக்கும் போது பாய்ந்து விடுகிறார்கள். அவனிடம் உதவி கேட்பது போல கேட்டு, அவனால் செய்ய முடியாத இயலாமையை ஒரு சாக்காக வைத்து தாக்குதலைத் தொடங்கி விடுகிறார்கள்.
            ஒரு நாய்க்கு கஞ்சித் தண்ணியை வைப்பது போல எஸ்.கே. முன் கஞ்சித் தண்ணியை வைப்பதைப் பார்க்கும் போதுதான் எஸ்.‍கே.யின் மனவெக்கையை உணர முடிகிறது. மறுநாளே எஸ்.கே. டீ வைப்பதை நிறுத்தினான். எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன.
            இதிலிருந்து எஸ்.கே. விளங்கிக் கொண்டது,
                        "நல்லதே என்றாலும் யாரும் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள அவ்வளவு சீக்கிரத்தில் சம்மதித்து விட மாட்டார்கள். அவர்கள் அப்படியே சம்மதித்தாலும் தங்களின் அடிமனதில் ஒரு காழ்ப்புணர்வைச் சுமந்து கொண்டு இருப்பார்கள். ஒருவரின் மனநிலை, சூழ்நிலையை மாற்ற முயல்கிறேன் என்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் முதல் அடி மாற்ற முயல்பவர்களுக்குத்தான் விழும்."

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...