8 Mar 2026

கிரிச் கிரிச் கிளாசிக் நினைவுகள்!

இங்க் பேனாக்களின் நாஸ்டால்ஜியா நோட்

இங்க் பேனாவில் எழுதியது ஒரு நாஸ்டால்ஜியா நோட். இப்போது யோசித்துப் பார்க்கையில், அது அப்படித்தான் இருக்கிறது. இப்போது அதைப் பயன்படுத்துவர்களை ரெட்ரோவைப் போலப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இங்க் பேனாவை மாதம் ஒரு முறை நீருற்றித் தூய்மை செய்து பழுது பார்ப்பதிலிருந்து, அதில் இங்க் நிரப்புவது வரை பொறுமை தேவைப்படும் வேலை. அந்தப் பொறுமைக்கு இன்று வேலை இல்லை.

இங்க் பேனாக்கள் ஒரு கை வாகாக இருக்க வேண்டும். ஆளாளுக்குப் பயன்படுத்தினால் அதற்குப் பிடிக்காது. கிரீச் கிரீச் என்று முரண்டு பிடிக்கும், என்னவோ வண்டிக்காரனுக்கு மட்டும் கட்டுப்பட்ட காளைகளைப் போல.

இப்போது யாராவது இங்க் பேனாவை வைத்திருப்பதைப் பார்த்தால் அதிசயத்தைப் பார்ப்பது போலத்தான் இருக்கிறது.

ஒரு தாய் குழந்தைக்குப் பசிக்கும் போதெல்லாம் பாலூட்டுவதைப் போல,இங்க் தீரும் போதெல்லாம் இங்க் பேனாவிற்கு இங்கை ஊற்றிக் கொண்டிருக்க வேண்டும். இங்க் பேனாவின் காதலர்கள் இங்க் பில்லர்களைப் பயன்படுத்தியெல்லாம் இங்க் ஊற்ற மாட்டார்கள். இங்க் பாட்டிலிருந்து ஒரு துளி கூட சிந்தாமல், ஓரத்தில் வழியாமல் அவ்வளவு லாவகமாக, நாசுக்காக ஊற்றுவார்கள்.

இங்க் இருக்கும் வரை ஒரு சுட்டிக் குழந்தையைப் போல அது தாளில் ஆடும் எழுத்து விளையாட்டு அட்டகாசமாக இருக்கும்.

பால் பாய்ண்ட் பேனாவில் வராத எழுத்தின் வசீகரம் இங்க் பேனாவில் எங்கிருந்தோ வந்து விடும். தாளுக்கும் இங்க் பேனாவின் நிப்பிற்கும் இருக்கும் ஈர்ப்பு அப்படி.

இங்க் பேனாவில் எழுதுவதில் ஓர் அழகு இருக்கிறது. அதில் ஒரு நிதானம் வருகிறது. இப்படிச் சொல்வது இங்க் பேனாவிலேயே பழகி விட்ட ஒருவரின் விதந்தோதும் வாசகமாக இருந்தாலும் அதில் உண்மையும் இருக்கிறது.

பால் பாய்ண்ட் பேனாக்களை வாங்கி ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவதைப் போல அல்லாமல், இங்க் பேனாவை பல லட்சம் முறை பயன்படுத்தலாம். வாழ்நாள் முழுவதும் ஒரு இங்க் பேனாவோடு வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள், ஒரே காதலன், ஒரே காதலி என்பதைப் போல.

இன்று நாம் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிபவையாக இருக்கின்றன. பால் பாக்கெட், பாலிதீன் பைகள் வரிசையில் பால் பாய்ண்ட் பேனாவும் வருகிறது.

ஓர் இங்க் பேனா ஆயுள் முழுவதும் ஒர மனிதரோடு வாழ பிரியப்படக் கூடியது என்று சொன்னால் அது கொஞ்சம் அதிபட்சமாகத் தெரியலாம். ஆனால் அது ஒரு சாசுவதம்தான்.

முன்னொரு காலத்தில் பாய் பாய்ண்ட் பேனாக்களில் ரீபிள் மட்டும்தான் மாற்றுவார்கள் என்று சொன்னால் இந்தத் தலைமுறை நம்புமா? இப்போதெல்லாம் பேனாவையே அல்லவா மாற்றி விடுகிறார்கள்.

ஒரு மனிதன் தன் ஆயுளுக்குள் குறைந்தபட்சம் 100லிருந்து அதிகபட்சம் 1000 வரை பால் பாய்ண்ட் பேனாக்களைப் பயன்படுத்தக் கூடும்.

பள்ளிகளில் பால் பாய்ண்ட் பேனாக்களுக்குத் தடை உத்தரவு இருந்த காலமும் இருந்தது. பால் பாய்ண்ட் பேனாக்களோ அல்லது நோட்ஸ்களோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அடித்துத் தோலை உரித்த காலம் அது.

இன்று பால் குடிக்காத பிள்ளைகள் கூட உண்டு. பால் பாய்ண்ட் பிடிக்காத பிள்ளைகள் இருக்க முடியாது. ஆசிரியர்களும் அதற்காக அல்ல, எதற்காகவும் அடிக்க முடியாது. பல போட்டித் தேர்வுகளில் ஓஎம்ஆர் சீட்டுகளைப் பால் பாய்ண்ட் பேனாக்களைக் கொண்டே நிரப்பச் சொல்கிறார்கள்.

காலம் மாறி விட்டது. நீங்கள் விரும்பினால் இங்க் பேனாவினால் எழுதலாம். இப்போதும் இங்க் பேனாக்கள் இருக்கின்றன, எழுதுவர்களைத் தேடிக் கொண்டு!

*****

No comments:

Post a Comment