நம் சிந்தனையா நம்மைச் சிறைப்பிடிப்பது?
மூளைக்குள்
ஒரு சிலந்தி வலை.
அது
வேறு ஒன்றும் இல்லை, ஓவராகப் போகும் நம் சிந்தனை.
சிந்தனை
ஒரு போதை. அதுவும் இடைவிடாமல் சிந்திப்பது என்பது, ஒருவன் தன் சொந்த மூளைக்குள் தானே
கட்டிக்கொள்ளும் சிறைச்சாலை.
சாப்பிடும்போது
சாப்பாட்டின் ருசியை கவனிக்காமல், நாளை என்ன விபரீதம் நடக்கும் என்று சிந்திப்பவன்,
அந்த பருப்புச் சாதத்தின் எதார்த்தத்தைத் தொலைக்கிறான். அவனுக்குத் தெரிவதெல்லாம் ஒரு
மாய பிம்பம் மட்டுமே.
எதார்த்தம்
என்பது தரை தட்டுவது போன்றது. கால் கட்டை விரலில் அடிபட்டால் வலிக்கும் பாருங்கள்,
அதுதான் நிஜம். ஆனால், சிந்தனையிலேயே வாழ்பவன் அந்த வலியைக் கூட இது நரம்பு மண்டலத்தின்
மின் தூண்டல் என்று தத்துவம் பேசி கடந்துவிடுவான். அவன் வாழ்வது ரத்தமும் சதையுமான
உலகில் அல்ல, நியூரான்கள் ஓடும் நரக உலகில்.
தொடர்
சிந்தனையாளன் என்பவன் ஒரு சிலந்தியைப் போன்றவன். தன் வாயிலிருந்து வரும் நூலை வைத்தே
வலை பின்னுகிறான். பிறகு அந்த வலைக்குள்ளேயே தானே சிக்கிக் கொள்கிறான். ஐயோ சிக்கிக்
கொண்டு விட்டேனே, என்னைக் காப்பாற்ற யாருமில்லையே என்று கூச்சல் போடுகிறான். பிறகு
அவனைப் பித்துப் பிடித்தவன் என்று பித்துக்குளி பட்டம் கட்டி கேலி பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.
அதிகமாகச்
சிந்திப்பவன் வாழ்க்கையை வாழ்வதில்லை, அதை வெறும் ஒரு கேஸ் ஸ்டடி போல மாற்றி விடுகிறான்.
எதார்த்தத்தைத்
தொலைப்பவன் மெல்ல மெல்ல ஒரு மாய பிம்பத்தை உருவாக்குகிறான். தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை
விட, தன் தலைக்குள் இருக்கும் மனிதர்களோடு அவன் அதிகம் பேசுகிறான். இது ஒரு வகை மெண்டல்
லூப்.
வெளிப்பக்கம்
கதவு திறந்திருந்தாலும், உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் கட்டளைகள் அவனை வெளியே வர விடுவதில்லை.
சிந்தனைகளைச்
சுருட்டிக் கொண்டு கொஞ்சம் ஜன்னல் வழியாக வெளியே பாருங்கள். வானம் நீலமாக இருக்கிறது.
காக்கை கரைகிறது. பக்கத்து வீட்டுக் குழந்தை அழுகிறது. இவை எதற்கும் எந்தத் தத்துவார்த்தமான
அர்த்தமும் கிடையாது. அவை அப்படியே இருக்கின்றன.
ஓவரான
சிந்தனைகளை நிறுத்திவிட்டு, எதார்த்தத்தைத் தொடுவதுதான் ஒரு மனிதன் செய்யக்கூடிய ஆகச்சிறந்த
அற்புதமான வாழ்க்கை விளையாட்டு.
ஆக இந்த
ஓவர் சிந்தனைப் போக்கைத் தவிர்க்க, அவ்வபோது யோசனையின் பிளக்கை பிடுங்குங்கள். அதாவது
யோசிப்பதற்கு ஒரு என்ட் கார்டு போடுங்கள். கொஞ்சம் மொட்டை மாடிக்கு, அந்த மாடிக்கு
மொட்டை அடித்து விட்ட பார்பர் யார் என்று யோசிக்காமல், கண்ணில் படுவதை எல்லாம் கவனியுங்கள்.
அங்கே எதாவது எதையாவது யோசித்துக் கொண்டு செய்கிறதா? உதாரணத்துக்கு கத்தும் குருவி,
அசையும் மரம், ஓடும் மேகம். அது போல கொஞ்ச நேரம் மாறி விடுங்கள்.
உண்மையைச்
சொல்ல வேண்டுமானால், எதார்த்தம் என்பது உங்கள் ஓவர் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டது.
ஓவர் சிந்தனையை நிறுத்துங்கள்.
இப்போது
போதும் மொட்டை மாடி. ஓர் ஓட்டலுக்குச் சொல்லுங்கள். ஒரு மசாலா தோசையை ஆர்டர் செய்யுங்கள்.
அதன் மொறுமொறுப்பை ரசியுங்கள். சிந்தனை ரகசியங்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
சர்வர் சட்னி வைக்காமல் போகிறார் பாருங்கள். முதலில் அந்தத் தோசைக்குச் சட்னி வைக்கச்
சொல்லுங்கள். தேங்காய் சட்னியை விட்டு விட்டு, கார சட்னியை மறந்து விடப் போகிறார்.
அதையும் வைக்கச் சொல்லுங்கள். அதுதான் இப்போதைய எதார்த்தம்!
தோசை
எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். நன்றாக இருந்தால் அந்த ஹோட்டலுக்கு நானும் வர வேண்டும்.
சில
நேரங்களில் அப்படித்தான் ஒரு தோசையை ரசித்துச் சாப்பிடுவதிலோ அல்லது ஒரு கோப்பைத் தேநீரை
சன்னமாக ருசித்து அருந்துவதிலோ எதார்த்தத்தை நோக்கி வந்து விடுகிறோம்.
*****

No comments:
Post a Comment