9 Mar 2026

கற்பனைப் பூதமும் கையில் இருக்கும் அல்வாவும்!

கற்பனைப் பூதமும் கையில் இருக்கும் அல்வாவும்!

நிஜத்தைச் சொல்லப்போனால் மனிதன் ஒரு வினோதமான பிராணி. அவனுக்குத் தன் கையில் இருக்கும் ஆப்பிளைச் சுவைப்பதில் ஆர்வம் குறைவு. ஒருவேளை அடுத்த வாரம் ஆப்பிள் விலையேறிவிட்டால் என்ன செய்வது? அந்த ஆப்பிளுக்குள் புழு இருந்தால் என் கதி என்ன? என்று கற்பனை செய்து பிபியை ஏற்றிக்கொள்வதில் அவன் பிஹெச்டி முடித்திருக்கிறான்.

மனிதனது மூளை ஒரு விசித்திரமான ஸ்கிரிப்ட் ரைட்டர். அது ஆஸ்கார் விருது வாங்கத் துடிக்கும் இயக்குநரைப்போல, நடக்காத பல விபரீதங்களை நிஜத்தை விட தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

பலர் தங்கள் பார்வையை எப்போதுமே அந்தத் தொடுவானத்தில் நங்கூரமிட்டு வைத்திருக்கிறார்கள். தொடுவானம் என்பது ஒரு ஜியோமெட்ரிகல் பொய். நீங்கள் அதை நோக்கி ஓட ஓட, அதுவும் பின்வாங்கும்.

ரிடையர் ஆன பிறகு என்ன செய்வேன்? என் பேரன் அமெரிக்காவில் செட்டில் ஆவானா? செட்டில் ஆக அவனுக்கு விசா கிடைத்து விடுமா? இதெல்லாம் இன்றைய மனிதர்களுக்கான இப்போதைய கவலைகள். இதற்காக இப்போதே கவலைப்பட்டு, இன்று மதியம் உங்கள் தட்டில் இருக்கும் சூடான ரத்தப் பொறியலைச் சுவைக்காமல் ரத்தத்தின் பிரசரை எகிற அடிக்கிறீர்கள்.

உண்மை என்னவென்றால் நம்மை அச்சுறுத்தும் 90 சதவீதப் பிரச்சினைகள் நம் மண்டைக்குள் மட்டுமே ரிகர்சல் பார்க்கப்படுகின்றன. நிஜ மேடைக்கு அவை வருவதே இல்லை.

காலடியில் இருக்கும் நிலம் நிஜமானது. அது செழிப்பானது. அங்கேதான் நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள். அதுதான் நிகழ்காலம்.

இப்போது நீங்கள் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் டீயின் சூடு, உங்கள் மொபைல் திரையின் – ஒளி இதுதான் நிஜம்.

நிகழ்காலம் என்பதுதான் இருப்பதிலேயே மிகச் சிறிய, ஆனால் மிக வலிமையான புள்ளி. கடந்த காலம் ஒரு பழைய நியூஸ் பேப்பர். எதிர்காலம் என்பது இன்னும் அச்சடிக்கப்படாத ஒரு புத்தகம்.

கற்பனைப் பூதங்களை விரட்ட ஒரே வழி, உங்கள் வேலையில் கவனத்தைத் திருப்புவதுதான். ஒரு சின்னக் கணக்கு போடுவது அல்லது ஜன்னல் வழியாக சும்மா வேடிக்கை பார்ப்பது கூட உங்களை நிகழ்காலத்திற்கு இழுத்து வரும்.

தூரத்தில் இருக்கும் மேகத்தைப் பார்த்து குடை தேடுவதை விட்டுவிட்டு, இப்போது உங்கள் காலடியில் இருக்கும் புல்லின் பசுமையைப் பாருங்கள். கற்பனைப் பிரச்சனைகள் என்பவை ஒரு பேய்ப்படம் போல, பார்த்து முடித்துச் சீட்டை விட்டு எழுந்தால் எல்லாம் மறைந்துவிடும். ஆனால், நிகழ்காலம் என்பது நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நிஜமான கிளைமாக்ஸ்.

பரிணாம வளர்ச்சியில் சிங்கம் வருமா, புலி வருமா என்று பயந்து பயந்தே நம் டி.என்.ஏ வடிவமைக்கப்பட்டுவிட்டது. அதனால், நிஜத்தில் புலி வராதபோது, நம் மூளை ஒரு கற்பனைப் புலியை உருவாக்கி, அதற்குப் பயங்கரமான கிராபிக்ஸ் போட்டு நம்மைப் பயமுறுத்துகிறது.

அதாவது, நடக்காத ஒரு விஷயத்திற்காக இப்போதே அட்வான்ஸாகக் கவலைப்படுவது. எல்லாருடைய மூளைக்குள்ளும் அமைக்டாலா  என்று ஒரு சின்னப் பகுதி இருக்கிறது. இதுதான் பயத்திற்குப் பொறுப்பு. இதற்கு லாஜிக் தெரியாது. இதுதான் ஓவர் ஆக்டிங், ஓவர் ரியாக்சனுக்குப் பொறுப்பு.

இந்தப் பொறுப்பாளி வேலை செய்தால் மனம் உடனே மெகா சீரியல் கதையை எழுத ஆரம்பித்துவிடும். உடனே அட்ரினலின் சுரக்க ஆரம்பித்து விடும். கை வியர்க்க ஆரம்பித்து விடும். இதயம் துடிக்க ஆரம்பித்து விடும். மெகா சீரியல் ரைட்டர்கள் இதைத்தான் பயன்படுத்துகிறார்களோ என்னவோ!

வாழ்க்கை என்பது ஒரு லைவ் டெலிகாஸ்ட். அதை எடிட் செய்ய முடியாது. ஆனால் நாம் ரீவைண்ட் பட்டனையும் பாஸ்ட் ஃபார்வர்ட் பட்டனையும் அழுத்தியே பொன்னான நேரத்தை வீணாக்குகிறோம்.

சுற்றி இருக்கும் ஐந்து பொருள்களைப் பாருங்கள். நான்கு ஒலிகளைக் கேளுங்கள். மூன்று வாசனைகளை நுகருங்கள். இது உங்கள் கவனத்தைக் கற்பனை உலகத்திலிருந்து இழுத்து வந்து நிகழ்கால உலகத்தில் லேண்டிங் செய்ய வைக்கும்.

உங்கள் கவலையை ஒரு நோட்டில் எழுதுங்கள். அதில் எத்தனை சதவீதம் நிஜம், எத்தனை சதவீதம் கற்பனை என்று மார்க் போடுங்கள். கற்பனைக்கு எப்போதும் பூஜ்யம் மார்க் கொடுங்கள்.

கற்பனைப் பிரச்சனைகள் என்பவை ஒரு காகிதப் புலி. அதை நீங்களே வரைந்து, நீங்களே பயப்படுகிறீர்கள். அந்தப் பேப்பரைக் கிழித்துப் போட்டுவிட்டு, நிஜமான புலியைப் பார்க்க ஜூவை நோக்கிப் புறப்படுங்கள். வாழ்க்கை மலரட்டும்.

*****

No comments:

Post a Comment